சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: உடலுக்கு உரமூட்டும் - ஈச்ச மரம்

16th Oct 2021 06:00 AM | பா.இராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT

 

குழந்தைகளே நலமா,

நான் தான் ஈச்ச மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் போஎனிக்ஸ் சைல்வெஸ்டிரிஸ் என்பதாகும்.  நான் அரேகாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நானும் தென்னை, பனை வகைகளைச் சேர்ந்த ஒரு மரமாவேன். என் தாயகம் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள். என்னிடம் மூன்று வகைகள் உள்ளன. அதாவது, உயரமாக, நடுத்தரமாக, சீற்றீச்சையாக.  சீற்றீச்சை என்பது இரண்டு அல்லது மூன்றடி மட்டுமே வளர்ந்து பின் காய்க்க ஆரம்பிக்கும்.  நான் மார்ச் மாதத்தில் பூக்க ஆரம்பித்து உங்களுக்கு ஜுன் மாத இறுதியில் சத்துள்ள பழங்களைத் தருவேன்.  அழிந்து வரும் மரங்கள் பட்டியலில் நானும் இருக்கிறேன் என்பதை உங்களிடம் சொல்லும் போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கு ஆனாலும், நம் நாட்டில் பாரம்பரிய மிக்க பல மரங்களில் நானும் ஒருவன் என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். 

குழந்தைகளே, நான் வறண்ட மற்றும் மிக வறண்ட நிலங்களில் வளர தயங்க மாட்டேன். ஏன்னா, நீங்கள் என்னை தனியாக தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டாம். அவ்வப்போது பெய்யும் மழை நீரே எனக்குப் போதுமானது.  நான் ஆங்காங்கு பெருகி வளருவதற்குக் காரணம் பறவைகள் மற்றும் விலங்குகள் தான் குழந்தைகளே. தேனீக்கள் மற்றும் சிறு வண்டுகள் மூலமும் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

எனக்குக் கிளைகள் கிடையாது, ஆனால் மட்டைகளுடன்,  விசிறி போன்ற இலைகளை நான் கொண்டிருக்கிறேன்.  என் இலைகள் அகலமில்லாது, நீண்ட ஊசிபோன்று கூர்மையானதாக இருக்கும். அக்கால மக்களுக்கு நான் கைத்தொழில் செய்யவும் உதவினேன் என்பதை உங்களுக்கு சொல்லும் போது எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு.   என் மரத்திலிருந்து கிடைக்கும் இலைகளைக் கொண்டு கூடைகளை  முடைந்து, அதில் பழங்கள் மற்றும் காய்களைப் பாதுகாப்பாக வைப்பார்கள். அவை விரைவில் கொடாது, அழுகாது.  அது மட்டுமா,  வீட்டை சுத்தம் செய்ய உதவும் துடைப்பம், நிம்மதியாகப் படுத்துறங்க பாய்கள் செய்வார்கள்.  என் பழத்தை நீங்கள் உண்பதால், உங்களுக்கு பல பயன்கள் உள்ளன. சொல்றேன் கேளுங்க. 

குழந்தைகளே, உங்கள் வீட்டில் எலும்பு, மூட்டு தேய்மானத்தால் யாராவது அவதிப்படுகிறார்களா. கவலையை விடுங்க, ஏன்னா, என் பழத்தில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாதுப் பொருள்கள் அதிகம் உள்ளன. இது எலும்பு தேய்மானத்தைத் தடுத்து, எலும்புகளை உறுதி செய்து பலத்தைக் கொடுக்கும். அது மட்டுமா, கண் பார்வை குறைவு உள்ளவர்கள், மாலைக் கண் நோயால் வருந்துபவர்கள் தினமும் ஈச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் இப்பிரச்னை தீர்வதோடு, கண்புரை நோயும் விலகும்.  

குறிப்பா குழந்தைகளே, இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள், ஏன் நீங்களும் தினமும் ஈச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறுவதை உணருவீர்கள். அதோட உங்கள் எடையும் அதிகமாகும். என் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார் சத்துகள் அதிகம் இருப்பதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும். அதோட மலச்சிக்கலையும் போக்கும். நான் இயற்கை விவசாயத்தில் நுண்ணுயிர் பெருக்கத்திற்குப் பெரிதும் உதவுகிறேன். என் பழத்தை பறவைகள் மற்றும் அணில்கள் போன்ற சாதுவான உயிரினங்கள் விரும்பி சாப்பிடுவாங்க. என் மரத்தில் பஞ்சு போன்ற இழைகள் அதிகம் இருப்பதால் என் மீது  அவங்க கூடு கட்டி வாழ்வார்கள். கருவுற்றிருக்கும் தாய்மார்கள், என் பழங்களை அதிகம் சாப்பிட்டு வந்தால், அது தாய்க்கும், சேய்க்கும் மிகவும் நல்லது. நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

(வளருவேன்)

Tags : siruvarmani Fertilizing the body
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT