சிறுவர்மணி

கருவூலம்: மகாராஷ்டிரா மாநிலம்!

15th May 2021 04:39 PM | கே.பார்வதி,  திருநெல்வேலி டவுன்.

ADVERTISEMENT

 

சென்ற இதழ் தொடர்ச்சி......

லால் மஹால்!

புணேயில் அமைந்துள்ளது இந்த மஹால். சிவாஜி தன் குழந்தைப் பருவத்தை இங்குதான் கழித்தார். சிவாஜியின் வாழ்க்கைச் சம்பவங்கள் லால் மஹால் சுவர்களில் சித்திரங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. ஜிஜாமாதா தோட்டம் ஒன்று அருகில் உள்ளது. 

ADVERTISEMENT

கோலாப்பூர் புதிய அரண்மனை!

இந்தப் புதிய அரண்மனை கோலாப்பூரில் உள்ளது. இது 1884 - இல் கட்டப்பட்டது. இங்கு மன்னர்கள் உபயோகப்படுத்திய பொருட்களும், முக்கிய ஆவணங்களும், கடிதங்களும், நினைவுப் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. புதிய அரண்மனையின் முதல் தளத்தில் மகாராஜாவின் தற்போதைய வாரிசுகள் வசிக்கின்றனர். இந்த அரண்மனையில் "ஷாஹாஜி சத்ரபதி அருங்காட்சியகமும்' உள்ளது.

சிந்து துர்க் கோட்டை!

இக்கோட்டை சிந்து துர்க் மாவட்டத்தில் உள்ளது. சிந்து என்றால் கடல் என்று பொருள். உண்மையிலேயே இக்கோட்டை அழகிய "மால்வன்' கடற்கரையை ஒட்டியுள்ள "குர்தே' என்னும் சிறு தீவில் கட்டப்பட்டுள்ளது. கடல் வழியாக வரும் எதிரிகளைச் சமாளிப்பதற்காக இக்கோட்டை கட்டப்பட்டது! இக்கோட்டையை தூரத்திலிருந்து பார்க்க முடியாதவாறும் கட்டியிருப்பது இதன் சிறப்பம்சமாகும்!

1664 லிருந்து 1667 - ஆம் ஆண்டிற்குள் சத்ரபதி சிவாஜி மகாராஜாவால் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. 100 கட்டடக்கலை வல்லுனர்கள் மற்றும் 3000 தொழிலாளர்களைக் கொண்டு இந்தக் கோட்டை கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டையைக் கட்ட சுமார் 73000 கிலோ இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் 4000 கிலோ இரும்பு உருக்கப்பட்டு அஸ்திவாரமாக உள்ளது. இக்கோட்டை 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 9.2 மீ உயரமும் 3.7 மீ தடிமனும் கொண்ட சுற்றுச் சுவர்கள் சுமார் 4 கி.மீ. தூரத்திற்கு அமைந்துள்ளது.  கோட்டையில் 42 தாக்குதல் கோபுரங்கள் உள்ளன.  

கான்கேரி குகைகள்!

கான்கேரி குகைகள் என்பது 109 பெளத்த குடைவரை குகைகளின் தொகுப்பாகும். இவை சஞசய் காந்தி தேசியப் பூங்காவின் மலைப்பகுதியில் அமைந்துள்ளன. இவை கி.மு. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. 10 - ஆம் நூற்றாண்டு முடிய உள்ள காலத்தில் உருவாக்கப்பட்டவை. 
மெளரிய மற்றும் குஷாணர்களின் ஆட்சி காலத்தில் கான்கேரி குகைகள் பெளத்த சமயப் பல்கலைக் கழகங்களாகத் திகழ்ந்தது. இக்குகைகளில் பெளத்த பிக்குகள் தங்கி தியானம் செய்துள்ளனர். 

பஞ்சவடி!

இராமாயணத்தில் இராமன் வனவாச காலத்தில் தங்கி இருந்ததாகக் கூறப்படும் இடம் இதுதான். இங்கிருந்துதான் சீதையை இராவணன் இலங்கைக்குக் கடத்திச் சென்றான்.

திரிரஷ்மி லேனி அல்லது பாண்டவர் குகைகள்!

இக்குகைகள் பஞ்சவடியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் நாசிக் மாவட்டத்தில் உள்ளன. பெளத்த சமயத்தின் 24 குடைவரைக் கோயில்கள் இங்குள்ளன. இங்கும் பெளத்த பிக்குகளின் விகாரங்களும், பிரார்த்தனைக் கூடங்களும் உள்ளன.

மகாகாளி குகைகள்!

மும்பைக்கு அருகேயுள்ள அந்தேரி நகரின் கிழக்கில் இக்குகைகள் உள்ளன. இவை 19 குடைவரைக் கோயில்களின் தொகுப்பாகும்! இங்கும் பெளத்த சமய விகாரங்களும், படுக்கைகளும் உள்ளன.

எலிபெண்டா தீவு மற்றும் குகைகள்!

மும்பை துறைமுகப் பகுதியிலுள்ள காராபுரி தீவுக்கு, போர்ச்சுகீசியர்கள் எலிபெண்டா தீவு என்று பெயரிட்டனர். இத்தீவு 16 கி.மீ. பரப்பளவு கொண்டது. இத்தீவில் மூன்று குக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள சென்ட்பந்தர் கிராமத்தில்தான் புகழ்பெற்ற எலிபெண்டா குகைகள் உள்ளன. இங்கு ஹீனாயான பெளத்த சமயத்தின் 24 குடைவரைக்கோயில்கள் உள்ளன. இதனை யுனெஸ்கோ அமைப்பு உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது. 

இக்குடைவரைக் கோயில்கள்  60,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளன. அழகிய புடைப்புச் சிற்பங்களும், ஒரு சிவன் கோயிலும் இங்குள்ளது.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் தொடருந்து நிலையம்!
மும்பையில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ரயில் நிலயம் இது. 1889 - இல் தொடங்கி 1897 - ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 18 நடைமேடைகள் கொண்டது. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய இடங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 

தோரணக்கோட்டை!

புணே மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளது. சத்ரபதி சிவாஜி தனது பதினாறாவது வயதில் 1643 - ஆம் ஆண்டில் முதலாவதாகக் கைப்பற்றிய இக்கோட்டையே மராட்டியப் பேரரசு நிறுவக் காரணமாக இருந்தது. இக்கோட்டை 1403 மீ உயரமுள்ளது! தோரணக் கோட்டையிலிருந்து புரந்தர் கோட்டை, ராய்கட் கோட்டை, சிங்ககாட் கோட்டைகளை கண்டு களிக்கலாம்.

ராய்கட் கோட்டை! 

1030 - இல் கட்டப்பட்ட இக்கோட்டை ராய்கட் மாவட்டத்தில் சகாயத்ரி மலையில் அமைந்துள்ளது. 1818 - இல் பேஷ்வாக்களிடமிருந்து கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகள் கைப்பற்றின.  தற்போது சீரழிந்த நிலையில் உள்ளது.


கர்லா குகைகள்!

புணே மாவட்டத்தில் உள்ள பண்டைய இந்தியாவின் பெளத்த சமயக் குடைவரைக் குகைகளே கர்லா குகைகள் ஆகும்.  இவை மூன்று அடுக்குகளாக உள்ளன. இவற்றை இந்தியத் தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட தேசிய நினைவுச் சின்னமாகப் பராமரித்து வருகிறது. இக்குகைகளில்அழகிய சிற்பங்களும், மண்டபங்களும் காணப்படுகின்றன. மேலும் மழைநீரைச் சேமித்துவைக்கும் குளம் ஒன்றும் இங்குள்ளது.

மகாராஷ்டிரா மாநிலக் கடற்கரைகள்!

 -கணபதி புலே, மற்றும் தாஹானு - போர்டி  கடற்கரைகள்
சாகச விளையாட்டுக்கு ஏற்றவை!  இயற்கை எழில் கொஞ்சும் மாங்குரோவ் காடுகள், தென்னந்தோப்புகள் ஆகியவற்றோடு இருக்கும் அழகிய கடற்கரைகள்!

ஜுஹு கடற்கரை!

இந்தியாவின் மிகவும் பிரபலமான கடற்கரை இது. சற்று ஜன நெரிசலான கடற்கரை. திரைப்படப்பிடிப்புக்கு பிரசித்தி பெற்றது.
மேலும் எழில் மிக்க ஸ்ரீவர்தன் ஹரிஹரேஷ்வர், மாண்ட்வா, கிஹிம், மத் தீவுக் கடற்கரை முதலிய எழில் மிகுந்த கடற்கரைகளும் இங்குள்ளன.

சால்சேட்  தீவு!

இத்தீவு அரபிக்கடலில் அமைந்துள்ளது. சால்சேட் தீவின் மேற்கில், கிரிகாம் செளபாத்தி, தாதர், மஹிம், ஜுஹு, வெர்சோவா, அக்சா, ஏரங்கல், மனோரி, கோராய் மற்றும் உத்தன் கடற்கரைகள் இத்தீவின் முக்கியக் கடற்கரைகளாகும்.

மும்பையின் ஏழு தீவுகள்!

மும்பை நகரம் நாம் இப்போது காண்பதுபோல் நில அமைப்பில் முன்னர் இருக்கவில்லை! முன்பு ஏழு தீவுகளாக இருந்தது!  அவை, மாஃகிம், வொர்லி, பரேல், மச்சாகான், பம்பாய், கொலாபா மற்றும் ஓல்ட் உமன் தீவு ஆகியவையாகும். இத்தீவுகள் அருகருகே இருந்தன. இவற்றைச் சுற்றியிருந்த கடல் ஆழமற்றதாகவும், சதுப்பு நிலங்களாகவும் இருந்தன. இத்தீவுகளைச் சுற்றி 22 மலைகள் இருந்தன. 

இந்த ஏழு தீவுகளிலும் பண்டைய காலத்திலேயே மக்கள் வசித்துள்ளனர். கி.மு. 3 - ஆம் நூற்றாண்டில் மெளரியப் பேரரசு இந்தத் தீவுகளை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்து இந்து மற்றும் புத்த பண்பாட்டின் மையமாக மாற்றியது. அதன் பின்னர் பல்வேறு அரச குலத்தவர்களின் கட்டுப்பாட்டில் இத்தீவுகள் இருந்தன. 

பின்னர் கி.பி. 1534 - இல் இந்த ஏழு தீவுகளும் போர்ச்சுகீசியரின் வசம் வந்தது. 1661 - இல் போர்ச்சுகல் இளவரசி கேத்தரின் பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த இரண்டாம் சார்லசை மணந்தார். அப்போது திருமணச் சீராக போர்ச்சுகீசீயர் இந்த ஏழு தீவுகளையும் பிரிட்டிஷாருக்கு அளித்தனர்.
கி.பி. 1668 - இல் இரண்டாம் சார்லஸ் அந்த ஏழு தீவுகளையும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு ஆண்டுக்கு 10 பவுண்டுக்கு வாடகைககுக் கொடுத்தார். கி.பி. 1782 - ஆம் ஆண்டு பல நிலமீட்பு திட்டங்கள் மூலம் மும்பையின் ஏழு தீவுகளையும் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டது. அதற்கான வழிமுறைகளும் தொடங்கப்பட்டது. அதன்படி அந்தத் தீவுகளில் இருந்த 22 மலைகளில் 9 மலைகளை அடியோடு தகர்த்து ஆழமற்ற கடல் பகுதிகளில் நிரப்பி நிலமாக மாற்றப்பட்டது. இப்போது 13 மலைகள் மட்டும் உள்ளன. 1845 -இல் ஏழு தீவுகளும் 435 ச.கி.மீ. பரப்பளவில் தெற்கு மும்பையை உருவாக்க இணைக்கப்பட்டன.

இப்போது மிகப் பெரிய சல்செட் தீவின் தெற்கே நீண்டுகொண்டிருக்கும் தீபகற்பப் பகுதியே அந்த ஏழு தீவுகளாகும். அந்த ஒருங்கிணைக்கப்பட்ட தீவுப் பகுதியே இன்று மும்பை மாநகரமாக உள்ளது. 

பாந்த்ரா - வொர்லி கடல் பாலம்!

பாந்த்ரா - வொர்லி பகுதிகளை இணைக்கும் பாலம்தான் இந்தியாவிலேயே மிக நீளமான கடல் பாலமாகும். இதன் மொத்த நீளம் 5.6 கி.மீ. ஆகும்! 

கொங்கன் இருப்புப் பாதை!

மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும், அரபிக்கடலுக்கும் இடைப்பட்ட , வடக்கிலிருந்து தெற்கே 530 கி.மீ. நீளமுள்ள வளமான கடற்கரை மற்றும் மலைப்பகுதி "கொங்கண் மண்டலம்' எனப்படுகிறது. இது மகாராஷ்டிரா மாநிலம் ராய்கரிலிருந்து கர்நாடக மாநிலத்தின் மங்களூர் வரை பரந்திருக்கும் கடலோர நிலப்பரப்பு ஆகும். இங்குள்ள "கொங்கன் இருப்புப் பாதை' புகழ் பெற்றது. இது மகாராஷ்டிராவில் உள்ள மும்பை முதல் கோவா வழியாக கர்நாடகாவில் உள்ள மங்களூர் வரை 1998 முதல் இயங்குகிறது. 
கரடுமுரடான மலைப்பாங்கான கொங்கன் பிரதேசத்தில் இப்பாதையானது கட்டுமானத்தின் போது மிகவும் சவால் வாய்ந்ததாக இருந்தது. 756 கி.மீ. நீளமுள்ள இப்பாதையில் 69 ரயில் நிலையங்களும், 2000 - க்கும் மேற்பட்ட பாலங்களும், மலைகளைக் குடைந்து ஏற்படுத்திய 91 குகைப் பாதைகளும் உள்ளன. இந்த ரயில் பாதையில் 371 கி.மீ. நீளப் பாதையும், 67 குகைப் பாதைகளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது.

இந்தப் பாதையில் செல்லும் ரயில்களின் பயணம் செய்யும்போது கண்ணைக் கவரும் கடல், கடற்கரை, மலைச்சரிவுகள், ஆறுகள், தென்னந்தோப்புகள், என பல்வேறு இயற்கைக் காட்சிகளை ரசித்துக்கொண்டே செல்லலாம்! 
சரித்திரப் புகழ் வாய்ந்த கோட்டைகளும், பெளத்த இந்து கலாச்சாரங்களைப் பறைசாற்றும் குடைவரைக் கோயில்களும், , மலைகள், அருவிகள், ஆறுகள், கடற்கரைகள் ஆகியவை சூழ்ந்த எழிலும், செல்வச் செழிப்பும், வளமையும் உள்ள மாநிலம் மககாராஷ்டிரா என்றால் அதில் மிகை ஏதுமில்லை.

நிறைவு

Tags : மகாராஷ்டிரா மாநிலம்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT