சிறுவர்மணி

அரங்கம்!: தாத்தா தாத்தாதான்!

31st Jul 2021 06:00 AM | எஸ். ஆர். ஜி. சுந்தரம்

ADVERTISEMENT


காட்சி - 1
இடம்: அருண் வீடு             
மாந்தர்: அருண், தாத்தா, அருண் அப்பா, பாட்டி, வித்யா

(அருண் அப்பா வீட்டிற்குள் நுழைந்தபடி)

அப்பா : அருண்! அருண்! இந்தா!
அருண் : என்னப்பா இது,  நீளமா பெட்டி?
அப்பா : திறந்து பார்!
அருண் : ஹை... புது கிரிக்கெட்பேட் - பால் - ஸ்டெம்ப் செட்! தாங்க்யூப்பா!
அப்பா : இரு, தாத்தாகிட்டே தரேன் - அவரை நமஸ்காரம் பண்ணிட்டு வாங்கிக்க!
தாத்தா : ஓஹ், சூப்பர், பேட்.... நானும் சின்ன வயசுலே சிக்ஸர் அடிக்காத ஓவரே கிடையாது... நீயும் அதுபோல வந்துகிட்டிருக்கே!... ஆல் தி பெஸ்ட்! இந்தா!
அருண் : தாங்க்ஸ் ராணுவ தாத்தா!
தாத்தா : அருண், நீ இப்படி என்னை ராணுவ தாத்தான்னு சொல்றது ரொம்பப் பெருமையாயிருக்கு!
வித்யா : ஆனா தப்பித்தவறி நாதடுமாறி ராவணத்தாத்தான்னு  மட்டும் சொல்லிடாதே!
        (நால்வரும் சிரிக்கிறார்கள்)
தாத்தா: அருண், பொருளை வாங்கறது பெரிசில்லை. அதைப் பாதுகாப்பாவும் வச்சுக்கணும். சரி சரி ஓடு, நான் வாக்கிங் போக டைம் வந்தாச்சு!
அருண் : தாத்தா ஒரு நிமிஷம்! இந்த பேட் செட்டை வச்சுக்க பாதுகாப்பா ஒரு இடத்தைக் காட்டுங்க!
தாத்தா : சரி! நம்ம வீட்லே எல்லாம் சின்ன சின்ன ரூம்! வேண்டாத சாமானே அங்கங்கே இடத்தை அடைச்சுக்கிட்டிருக்கு...  அந்த பீரோவிலே அடிதட்டு காலி. உன் புது பேட் செட்டுக்கு அந்த இடம் சிம்மாசனம் போல இருக்கும். எப்படி ஐடியா? 
அருண் : சூப்பர் ஐடியா!
பாட்டி : (சமையலறையிலிருந்து வெளியே வந்து) என்ன.... என் பீரோவிலே இடம் தேடறீங்களா? அது நடக்காது! அந்தத் தட்டுலே இருந்த புடவையெல்லாம் டிரைவாஷ் போயிருக்கு... நாளைக்கே திரும்பி வந்துடும்! அதை வைக்கவே இடம் பத்தாது. இதுக்குதான் நாலு பெட்ரூம் ஃப்ளாட்டா பாருங்களேன்னு சொன்னேன். யாரும் கேக்கலே! பேரனுக்கு வேற இடத்தைச் சொல்லுங்க!
அருண் : தாத்தா அந்த வேற இடத்தை நானே சொல்றேன். நம்ம வீட்லே ஒரு இடத்துலே வேண்டாத சாமான், துருப்பிடிச்ச சாமான்னு இதெல்லாம் இருக்கு! 
தாத்தா : டேய் நீ எந்த இடத்தைச் சொல்லப்போறேன்னு எனக்குத் தெரியும்டா! நாலு பல்லு உடைஞ்ச மத்து, லட்டு பிழியற ஓட்ட கண் சல்லடைக் கரண்டி, ஒரு பக்கம் கை இல்லாத முறுக்குப் பிழியற அச்சு - இப்படி ஓட்டை ஒடசல் எல்லாம் வருஷக்கணக்கா, ஸ்டோர் ரூம் கப்போர்டுலே போட்டு வச்சிருக்காளே உன் பாட்டி, அந்த இடத்தைத்தானே சொல்ல வரே!
பாட்டி : அருண், அதையாடா சொல்லவந்தே - சாயந்திரம் உனக்கு ஜாங்கிரி கிடையாது பாத்துக்க! அதெல்லாம் எங்கம்மா செய்து கொடுத்த சீருக்கு அடையாளம்.
அருண் : ஐய்யோ பாட்டி நான் அதை சொல்ல வரல்லே!
பாட்டி : அப்படி சொல்லு! எதுக்கு வெண்ணையைக் கையிலே வச்சுகிட்டு நெய்க்கு அலையறே!
அருண் : பாட்டி எனக்குத் தெரியும் நீங்க சொல்லப்போற இடம்!
பாட்டி : சொல்றேன்... சரியான்னு பாத்துக்க. அந்த இடத்திலே சிலம்பாட்டம் ஆடற தேய்ஞ்சுபோன மூங்கில் நாலைஞ்சு, பொத்தல் விழுந்த ராணுவத் தொப்பி, துருப்பிடிச்ச சைக்கிள் ரிம், தேய்ஞ்சு போன வாக்கிங் ஸ்டிக், எருமைத் தோல்மாதிரி மஞ்சள் கலர்லே அங்கங்கே விட்டுப்போன கம்பளம்...
தாத்தா : ஏய், பாட்டியும் பேரனுமா சேர்ந்து என்னோட குட்டி இடத்துக்கு வேட்டு வைக்கப் பாக்கறேளா?
பாட்டி : குட்டி இடந்தான் - ஆனா அந்த இடத்துக்கு அப்படி என்ன அலங்காரம்... மூணுபக்கச் சுவருக்கும் தரைக்கும் டைல்ஸ் ஒட்டி அதுக்குள்ளே எதுக்கு இந்த ஓட்டை ஒடசல் எல்லாம்! போதாக்குறைக்கு அந்த இடத்தைத் தினமும் பாத்து "சபாஷ்! சபாஷ்'னு ஒரு குரல்! ஹால் அலமாரியிலேதான் ஏகப்பட்ட ஆல்பம் வச்சிருக்கீங்களே! அது போதாதா?
தாத்தா : அருண்!  அந்தப் பொருளோட மகிமை என்னன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்.
பாட்டி : அருண்மேல உங்களுக்குப் பாசம்தானே விட்டுத்தான் கொடுங்களேன்! எத்தனையோ வருஷம் ஆயிடுத்து - பேசாம பழைய பேப்பர் கடைக்குப் போட்டுடுங்க!
அப்பா : ஏம்ப்பா! நீங்களே அதையெல்லாம் மத்தவங்க கண்ணுக்குப் பட்டா அசிங்கம்னு வீட்டுப் பின் கட்டுலே கொண்டுபோய் பம்ப் செட் பக்கத்துலே வச்சிருக்கீங்க! அப்போ அதெல்லாம் எதுக்கு?
தாத்தா : ஆமாம்! மத்தவங்க பார்த்தா முகஞ் சுளிப்பாங்கன்னு பின்கட்டுலே அதையெல்லாம் வச்சிருக்கேன். நான் மட்டும் பார்த்து சந்தோஷப்பட்டுக்கிட்டிருந்தா போதும்.
அப்பா : சரி இப்போ அந்த இடத்தை பேரனுக்காகத்தான் விட்டுக்கொடுங்களேன். வேணும்னா பழைய பேப்பர் கடைக்காரனை நாளைக்கே வரச்சொல்றேன்.
தாத்தா : நிறுத்துடா... ஒரு ராணுவ அதிகாரியா இருந்த உன் அப்பாவைப் பார்த்து, கணவனைப் பார்த்து பேசற பேச்சாடா இது? இப்ப தெளிவா சொல்றேன். அந்தக் குட்டி கூண்டுக்குள்ளே இருக்கற பூட்ஸ், வாக்கிங் ஸ்டிக், ஏழெட்டு மூங்கில் குச்சிகள், சைக்கிள் ரிம் - இதையெல்லாம் நான் தினம் தினம் பாக்கிறபோதெல்லாம் அது சம்பந்தமான சம்பவங்களை நினைச்சுப் பார்ப்பேன்.  நீங்க கேலி செய்யற அந்தப் பொருளெல்லாம் எனக்கு ராணுவ காலத்து மிடுக்கான நாட்களை நினைவுபடுத்தும். அந்த நினைப்பு என்னை சந்தோஷப்படுத்தும். அந்த சந்தோஷத்துனாலதான் தினம் நான் "சபாஷ்! சபாஷ்!' சொல்றேன்!
அப்பா : இருந்தாலும் பழசு பழசுதானே! அந்த இடத்துலே நீண்ட கண்ணாடிக் கதவு வழியா, அருண் கிரிக்கெட் பேட் செட்டை பார்த்தால் எவ்வளவு சந்தோஷப்படுவான்!
அருண் : ஆமாம் தாத்தா! - அந்த இடத்தை எனக்குக் கொடுங்க தாத்தா! கொடுத்துத்தான் ஆகணும்!
தாத்தா : சரி, நாளைக்கே எல்லாத்தையும் பேப்பர்காரனுக்குப் போட்டுடறேன். ஆனா ஒண்ணு! நீங்க யாரும் என்னோட ஒரு மாசம் பேசக்கூடாது. ஆமாம்!
அருண் : ஆனா தாத்தா அடுத்த வாரம் நான் ஒரு தனி நடிப்புப் போட்டியிலே வாமனனா வேஷம் போட்டு நடிக்கப்போறேன்! நீங்க கட்டாயம் வரணும்! அம்மாகூட வேலை விஷயமா வெளியூர்ல இருக்காங்க.
தாத்தா : மாட்டேன் - அருண் மாட்டேன்!
பாட்டி : (அருணிடம் ரகசியமாக)  அருண் நீ கவலைப்படாதே! தாத்தா அப்படித்தான் கோபத்துலே பேசுவார்.
(எல்லோரும் போனபின் தாத்தா பேத்தி வித்யாவை அழைத்து)
தாத்தா : வித்யா! நாளைக்கு என்னோட அந்தப் பொருளெலாம் என் கண்ணைவிட்டு மறைஞ்சுடும். அதுக்கு முன்னால பின்கட்டுப் பகுதியிலே இருக்கற என் ராணுவ நினைவுப் பொருள் எல்லாத்தையும் தனித்தனியா வச்சு, என் செல்போன்லே ஒரு போட்டோ எடுத்துக் கொடுத்துடு. இந்தப் போட்டோக்களைப் பார்த்து நான் தினம் சபாஷ் சொல்லிக்கறேன்.
வித்யா : தாத்தா,  நீங்க ஒரு அதிசயத் தாத்தாதான்! ஓய்வுக்குப் பிறகும் வேலை பார்த்த இடம், பொருள் இதையெல்லாம் நினைச்சு நினைச்சு சந்தோஷப்படறீங்க! அதனாலதான் ராணுவத்துலே நிறைய ஸ்டார் வாங்கியிருக்கீங்க! எங்க தாத்தா சூப்பர் ஸ்டாருதான்!


காட்சி -2
இடம்: அருண் வீடு                      
மாந்தர்: அருண், பாட்டி, வித்யா

ADVERTISEMENT


பாட்டி : என்னடா அருண் மூஞ்சியை உம்முன்னு வச்சுக்கிட்டு உட்கார்ந்துக்கிட்டிருக்கே? அடுத்த  வாரம் மாறுவேடப் போட்டி இருக்கு இல்லே?
வித்யா : ஆமாம் பாட்டி, இவன் போடப்போற வாமனன் வேஷத்துக்கு வேண்டிய கமண்டலம், பூணூல் குட்டி வேட்டி, தலைமுடி மறைக்க டோப்பா எல்லாம் கிடைச்சாச்சு! முக்கியமா தாழங்குடைதான் கிடைக்கல்லே! பல இடத்துலே முயற்சி பண்ணியாச்சு, குடை இருந்தாதான் இவனுக்கு நல்லா நடிக்க வருமாம்!
பாட்டி : அதனால என்ன,  ஒரு குடையை விரிச்சுண்டு நடி.
அருண் : போ பாட்டி, கறுப்புக் குடையோடு நான் நடிக்கலாம், ஆனா பரிசு கிடைக்காது. 
பாட்டி : அதுக்காக போட்டியிலே கலந்துக்காம விட்டுடாதே!

காட்சி - 3
இடம் : அருண் வீடு                  
மாந்தர் : அருண், பாட்டி, வித்யா, தாத்தா

(போட்டியில் அருண் முதல் பரிசு பெறுகிறான்)

வித்யா : தாத்தா, பாட்டி எல்லாரும் வாங்க! வந்து இங்கே பாருங்க! வாமனன் வந்திருக்கார்.
பாட்டி : அருண், வாமனன் மேக்-அப் ஓஹோனு இருக்குடா உனக்கு!
வித்யா : முதல் பரிசு கிடைச்சிருக்கு பாட்டி!
பாட்டி : ரொம்ப சந்தோஷம் அருண்! ஏய், உனக்கு தாழங்குடையும் கிடைச்சுட்டுதா?
அருண் : ம்! அதனாலதான் என்னால உற்சாகமா நடிக்க முடிஞ்சது!
பாட்டி :  எப்படி இந்தத் தாழங்குடை கிடைச்சது? 
அருண் : கடைசி நிமிஷத்துலே வித்யாதான் கொண்டுவந்து கொடுத்தா... எப்படிக் கிடைச்சதுன்னு அவ இதுவரைக்கும் சொல்லலே பாட்டி!.. வித்யா உனக்கு ரொம்ப நன்றி.
வித்யா :  உன் நன்றியைத் தாத்தாக்கிட்டே சொல்லு!  அதோ தாத்தாவே இங்கே வரார். நீயே கேளு.
அருண் : தாத்தா இந்தத் தாழங்குடையாலதான் எனக்கு முதல் பரிசு கிடைச்சது. இந்தத் தாழங்குடை கிடைக்க நீங்கதான் காரணம்னு வித்யா சொன்னா! உங்களுக்கு ரொம்ப நன்றி தாத்தா!
தாத்தா : (சிரித்துக் கொண்டே) இந்தக் குடை பழைய பேப்பர் கடையிலேந்துதான் கிடைச்சது அருண்!
அருண் :என்ன தாத்தா சொல்றீங்க?
வித்யா : தாத்தா நானே இவனுக்குச் சொல்லிடறேன். தாத்தா நாம நினைச்சபடி, பழைய ராணுவ நினைவுப் பொருட்களை பழைய பேப்பர் கடைக்குப் போடல்லே! யாருக்கும் தெரியாம வெளிமாடிப் படிக்கட்டு கீழே சுத்தம் பண்ணி, அங்கே வச்சுட்டார். இது எனக்கு மட்டும்தான் தெரியும். நீ தாழங்குடை கிடைக்கலேன்னு தவிச்சதை தாத்தாக்கிட்டே சொன்னேன். உடனே சிலம்பாட்டக் கொம்புகளை எதிர்வீட்டு தச்சர்கிட்டே கொடுத்து வளையக்கூடிய மூங்கில் பிளாச்சுகளாக்கினார். சைக்கிள் ரிம்லே அழகான துணியைச் சுத்தினார். அப்புறம் ரிங் டென்னிஸ் வட்டத்தை மூங்கில் பிளாச்சுகளால இணைச்சார். கைத்தடியை குடையோட கைப்பிடியா மாத்தினார். குடையோட மேற்புறத்த மஞ்சள் நிற பொத்தல் விழுந்த தடிக்கம்பளத்தால போத்தினார், அவ்வளவுதான் குடை உருவாயிடுத்து! அந்தக் குடையைத்தான் தாத்தா எங்கிட்டே ரகசியமா கொடுத்து உங்கிட்டே கொடுக்கச் சொன்னார். 
அருண் : தாத்தான்னா தாத்தாதான்! எப்படித் தாத்தா உங்களுக்குக் குடை பண்ணத் தெரிஞ்சது?
தாத்தா : அருண், ராணுவத்திலே இதுமாதிரி பல விஷயங்களைக் கத்துக்கொடுப்பாங்க! எதையும் சமாளிக்க எதுவும் எங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும்.
அருண் : தாத்தா உங்க பொருளை அலட்சியமா நினைச்சு பேசினதுக்கு, என்னை, பாட்டியை, அப்பாவை எல்லோரையும் மன்னிச்சிடுங்க தாத்தா! தாத்தா இப்ப ஒண்ணு கேக்கலாமா?
தாத்தா : ம்! கேளேன்!
அருண் : நானும் பாட்டியும்கூட தினமும் சபாஷ் போடப்போறோம்!
தாத்தா : எதைப் பார்த்து, இந்த கைப்பேசி போட்டோவைப் பார்த்தா?
அருண் : இல்லை! இந்தத் தாழங்குடையைப் பார்த்து!

(சிரிப்பலைகள்)

திரை

Tags : Siruvarmani Grandpa is Grandpa!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT