சிறுவர்மணி

கருவூலம்: வீடு கட்டும் ரோபோ!

24th Jul 2021 08:55 PM | கோட்டாறு ஆ . கோலப்பன் 

ADVERTISEMENT

 

மனிதனை விட பல மடங்கு வீடு கட்டும்  வேலைகளைச் செய்யக்கூடிய எந்திரம் வந்துவிட்டது! இந்த எந்திரத்திற்கு ஹார்டியன் என்று பெயரிட்டிருக்கிறார்கள்! கட்டுமானத் துறையில் இந்த ரோபோ துருதுருவென்று இயங்குகிறது! 
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மார்க் பிவேக் என்னும் பொறியாளர்தான்இந்த எந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளார். 
இங்கிலாந்தில் உள்ள பழைமையான ஹார்டியன் சுவரை நினைவூட்டும் வகையில் இந்தக் கருவிக்கு ஹார்டியன் என்று பெயரிட்டுள்ளார் மார்க் பிவேக்.
இந்தச் சுவர் நாட்டின் பாதுகாப்புக்காக இங்கிலாந்தில் கி.பி. 122 - இல் ஹார்டியன் என்பவரால் கட்டப்பட்டது. சுமார் 85 மைல் நீளமுள்ளது.  மிகவும் சரித்திரப் புகழ் வாய்ந்தது!
சரி, இந்த ஹாரிடியன் ரோபோவின் முக்கியப் பணி கற்களை அடுக்குவதுதான்! ஹார்டியன் எந்திரத்துடன் சிமென்ட் கலவையும் இணைக்கப்பட்டிருக்கும்!
ஹார்டியன் தனது எந்திரக் கை மூலம் முதலில் செங்கல்லை எடுத்து அந்த சிமென்ட் கலவையின் உள்ளே அதன் மேற்புறத்தில் படுமாறு அழுத்தும். இப்போது செங்கல்லின் ஒரு பக்கம் மட்டும் பிடிப்புக்கான சிமென்டுடன் இருக்கும். இதை அப்படியே அதன் கைகளைக் கொண்டு கட்டுமானத்தின் மீது வைக்கும். இப்படி ஒன்று ஒன்றாக அடிக்கி வைக்கப்பட்டு கட்டடம் உயரும்! 
ஹார்டியன் ஒரு மணி நேரத்தில் 1000 செங்கற்களை அடுக்கிவிடும்! ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? 3டி பிரிண்டரின் தொழில் நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது!
மார்க் பிவேக் இது பற்றிக் கூறும்போது, ""6000 வருடங்களுக்கு முன்பிருந்தே நாம் செங்கல்லை கட்டட வேலைகளுக்குப் பயன்படுத்தி வருகிறோம். இதில் ஏதாவது புதுமையைச் செய்ய விரும்பினேன்! அதன் விளைவுதான் ஹார்டியன்!'' என்கிறார்.
ஹார்டியன் முழுக்க முழுக்க கணினி மூலம் கட்டுப்படுத்தக் கூடியது. இதைத் தன் சகோதரருடன் இணைந்து உருவாக்கியுள்ள பிவேக், விமானத்துறையிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
""இன்னும் சில மாற்றங்கள் செய்தாலே போதும். இந்த ஹார்டியன் ரோபோவை பொது உபயோகத்திற்குக் கொண்டு வந்து விடலாம்! '' என்று கூறுகிறார்.
பாஸ்ட் பிரிக்ஸ் என்னும் நிறுவனத்தை தன் சகோதரருடன் இணைந்து பிவேக் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்துக்கு டி.எம்.ஒய் என்னும் முதலீட்டு நிறுவனம் பண உதவி செய்ய முன் வந்துள்ளது. இது மட்டுமல்லாது அவருக்கு அரசும் உதவத் தயாராக உள்ளது. 
இந்த ஹார்டியன் ரோபோவிற்கு சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டே நாளில் இரண்டு படுக்கையறை கொண்ட ஒரு வீட்டை முடித்து விடலாம்! கூடிய சீக்கிரம் நம் நாட்டிலும் ஹார்டியன் ரோபோ வேலை செய்யப்போவதை நாமும் பார்ப்போம்!

Tags : Siruvarmani Home Building Robot
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT