சிறுவர்மணி

அரங்கம்: க்ரோவா, காகத்ரி மற்றும் கண்ணாடிக்காரர்

24th Jul 2021 08:51 PM | - க. சங்கர்

ADVERTISEMENT

 

காட்சி : 1
இடம் : கண்ணாடிக்காரர் வீடு / மொட்டை மாடி
நேரம் : காலை / வெவ்வேறு மாதங்கள்
உறுப்பினர்  : கண்ணாடி மனிதர், க்ரோவா, காகத்ரி
முதல் மாதம் : 

கண்ணாடிக்காரர் தட்டில் சாப்பாடு வைக்கிறார். 
"கா கா கா' எனச் சத்தம் கொடுக்கிறார்.
மூன்றாம் மாதம் :
கண்ணாடிக்காரர் தட்டில் சாப்பாடு வைக்கிறார். க்ரோவா வந்து சாப்பிடுகிறது.
ஏழாவது மாதம் :
க்ரோவாவும் காகத்ரியும் காத்திருக்கின்றன. கண்ணாடிக்காரர் சாப்பாடு கொண்டுவருகிறார். 

 

ADVERTISEMENT

காட்சி : 2
இடம் : கண்ணாடிக்காரர் வீடு / மொட்டை மாடி
நேரம் : காலை 8.20
உறுப்பினர்கள் : க்ரோவா, காகத்ரி

(க்ரோவா தட்டில் இருக்கும் உணவைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.)

காகத்ரி : (அங்கே வந்து) என்ன க்ரோ.. பயங்கரமா யோசிக்கிற போலிருக்கு. ?
க்ரோவா  : அந்தக் கண்ணாடிக்காரர் ஒரு முழு இட்லிய அப்படியே படச்சிருக்காரு, பாரு ..
காகத்ரி : அதனால என்ன.. வழக்கம்போல கொத்தி சாப்பிடலாம்..
க்ரோவா : அவங்க மட்டும்  நல்லா பிசஞ்சு சாப்டுவாங்க.. நாம இட்லி தனியா சாம்பார் தனியா சாப்டணும்? ஆறாவது அறிவு இதயெல்லாம்  சொல்லிக் கொடுக்காதா ?
காகத்ரி : ஏய், நீ ரொம்ப பேசற.. நாம சாப்ட்டதுக்கு அப்றம்தான அவங்க சாப்பட்றாங்க.. அது அவங்க நமக்குக் கொடுக்கற மரியாதை இல்லையா ?
க்ரோவா  : ம்ம்ம்.. மரியாதைய வெச்சு இந்த இட்லிய பிசஞ்சு சாப்ட முடியுமா ?
(காகத்ரியின் முகத்தில் புன்னகை தோன்றுகிறது.)


காட்சி : 3
இடம் : வேப்பமரம் 
நேரம் : முற்பகல் 11.15
உறுப்பினர்கள் : க்ரோவா, காகத்ரி

(க்ரோவாவின் அருகில் வந்து அமர்கிறது காகத்ரி.) 

க்ரோவா  : முடிஞ்சுதா..?
காகத்ரி : (அலட்சியமாக) முடிஞ்சுது ! இன்னிக்கு எங்க பகுதில ஒழுங்கான சாப்பாடே இல்ல.. தண்ணிக்கும் கஷ்டமாப் போச்சு.. யாரும் மாத்தி வெக்கவேல்ல.. நேத்தைய தண்ணி !
க்ரோவா  : ஆறாவது அறிவுக்குத் தெரியுதா நாம ஒருநாள் குடிச்சத அடுத்த நாள் குடிக்கமாட்டோம்னு ? செங்கல் டப்பா வந்ததுக்கப்றம் பாதி பேர் சரியில்ல.. இதையெல்லாம் கண்டுக்க மாட்டேங்கறாங்க..
காகத்ரி : (புரியாமல்) செங்கல் டப்பாவா ?
க்ரோவா  : அதான்.. கையில எதையோ வெச்சுட்டுப் பாத்துட்டே இருக்காங்களே..
காகத்ரி : ஸ்ஸ்ஸ்.. அதுக்குப் பேர் ஸ்மார்ட்போன்.. அதுக்குள்ள பெரிய உலகமே இருக்கு..
க்ரோவா : ம்ம்ம்.. உலகம் வெளிய இருக்கு.. அதுக்குள்ள பாத்துட்டிருக்காங்க.. பாவம், இதுகூடத் தெரியல !
காகத்ரி : போதும்.. எனக்கு இப்போ தண்ணி 
வேணும் !

காட்சி : 4
இடம் : கண்ணாடிக்காரர் வீடு / மொட்டை மாடி
நேரம் : முற்பகல் 11.25
உறுப்பினர்கள் : கண்ணாடிக்காரர், க்ரோவா

(கண்ணாடிக்காரர் கோதுமையைக் காயப்போட்டுக்கொண்டிருக்
கிறார்.)

க்ரோவா  : (ஆச்சர்யமாக) இவர் என்ன, இந்த நேரத்துல இங்க இருக்காரு !
காகத்ரி : சிக்னல் கெடச்சிருக்காது, மேல வந்துட்டார்.. சரி, அவர் கெடக்கறார்.. தண்ணி எங்க ?
க்ரோவா  : இதோ..  தண்ணி டேங்க்கு பக்கத்துல.. 
பக்கெட்ல பார்.. 
காகத்ரி பறந்து செல்கிறது.
க்ரோவா  : (கோதுமையைப் பார்த்து) ஓஹோ.. இதான் சப்பாத்தி பண்றதா ? காகத்ரி.. இங்க வா.. ரெண்டு மூனு மணி தின்னு பார்ப்போம், எப்டி இருக்குனு..
(காகத்ரி தண்ணீர் குடிப்பதில் மும்முரமாய் 
இருக்கிறது)

க்ரோவா  : (மெதுவாக) ம்ம்ம்.. உனக்குக் கொடுத்துவெக்கல.. நானாவது ருசி பாக்கறேன்..
(க்ரோவா  கோதுமைமணிகளில் ஒன்றிரண்டைக் கொத்துகிறது.)
கண்ணாடிக்காரர் :  (அதிர்ந்து) ஆ.. மொத்த கோதுமையையும் காக்கா திங்குதே.. ச்சூ.. ச்சூ.. ஏய்..
(கண்ணாடிக்காரர் கையில் கிடைத்த சோப்புத்
துண்டால் க்ரோவாவை அடிக்கிறார்.)

காகத்ரி : (அடிபட்டு தூக்கி எறியப்படும் க்ரோவாவைப் பார்த்து) ஐயோ !
 
காட்சி : 5
இடம் : வேப்பமரம் 
நேரம் : மாலை 6.50
காகங்கள் : க்ரோவா, காகத்ரி

(க்ரோவா  மெதுவாகக் கண்களைத் திறக்கிறது.)

காகத்ரி : (மகிழ்ச்சியாக) யம்மா.. 
இப்பாவது கண்ணைத் திறந்தயே! சோப்புத் துண்டுக்கே இந்த மயக்கமா ?
க்ரோவா  : (பலவீனமாக) என்ன.. என்னாச்சு ?
காகத்ரி : ஒன்னும் ஆகல.. இரு, இரை கொண்டு வரேன்.. 
(க்ரோவா கோதுமணிகளைக் கொண்டுவந்து வைக்கிறது.)

க்ரோவா : (வியப்பாக) இது.. இப்பத்தான் ஞாபகம் வருது..  அந்த ஆள் என்னை எதிலயோ அடிச்சார்.. ஆமா, இது உனக்கு எப்டிக் கிடச்சுது ?
(காகத்ரி அமைதியாகப் பார்க்கிறது)

காட்சி : 6
இடம் : கண்ணாடிக்காரர் வீடு / மொட்டை மாடி
நேரம் : காலை 7.20
உறுப்பினர்கள் : க்ரோவா, காகத்ரி

(க்ரோவா பதற்றத்துடன் அமர்ந்திருக்கிறது.)

காகத்ரி : (அங்கே வந்து) என்ன நேரத்துலயே வந்துட்டே ? எட்டு மணிக்கு மேலதான வருவாரு..
(க்ரோவா அமைதியாக இருக்கிறது.)

காகத்ரி : (உரக்க) க்ரோ.. உங்ககிட்டத்தான்.. என்னாச்சு உனக்கு ?
க்ரோவா : (கோபமாக) நேத்து அந்த ஆள் என்னை அடிச்சார்ல.. பதிலுக்கு நான் அவர உச்சந்தலையில கொத்தப்போறேன்!
(காகத்ரி அதிர்ச்சியடைகிறது.)

க்ரோவா  : காலங்காத்தால காக்கா கொத்துனா, என்ன அர்த்தம் ? நேரம் சரியில்லனு.. என்னைத் தாக்கினதுக்கு வருஷம் முழுக்க அவரு அனுபவிக்கட்டும்..  
காகத்ரி : (பயத்தில்) க்ரோ.. க்ரோ.. சொன்னாக்கேளு.. அப்டியெல்லாம் செய்யாத.. மனிதர்கள் நம்மள முன்னோர்களா நினைக்கிறாங்க.. ரொம்ப மாசமா இவர் சாப்பாட நாம சாப்டிருக்கோம்..
க்ரோவா  : (கோபத்துடன்) அடிவாங்கினது நான்..  உனக்கென்ன..  நான் பழிவாங்கியே ஆகணும்.. 
காகத்ரி : உனக்கு இப்போ பழி வாங்கணும்.. அவ்ளோதானே.. நான் சொல்றதக் கேளு..
(க்ரோவா கவனிக்கிறது.)

காட்சி : 7
இடம் : கண்ணாடிக்காரர் வீடு / மொட்டை மாடி
நேரம் : காலை 8.05
உறுப்பினர்கள் : கண்ணாடிக்காரர், க்ரோவா, காகத்ரி.

(க்ரோவாவும் காகத்ரியும் தண்ணீர்த் தேக்கியின் பின்னால் அமர்ந்திருக்கின்றன.)

க்ரோவா : (சந்தேகமாக) இது சரியா வருமா ? இப்பகூடக் கெட்டுப்போகல.. அவர் வந்ததும் ஒரு கொத்து கொத்திரட்டுமா..?
காகத்ரி : உஷ்ஷ்.. நல்லா ஒளிஞ்சுக்கோ.. வர்றார்..
(கண்ணாடிக்காரர் தட்டில் சாப்பாடு வைக்கிறார்.) 

கண்ணாடிக்காரர் : (சத்தமாக) கா.. கா.. கா.. 
(காகத்ரி சிரிப்பை அடக்கிக்கொண்டு க்ரோவாவைப் பார்க்கிறது.)
க்ரோவா : (மெதுவாக) கத்து ஆறறிவு..  கத்து.. தெனம் அரை மணி நேரம் கத்து.. அப்றம் வர்றோம்.. பாவி, என்னையவா அடிக்கற ?
காகத்ரி : போதுமா.. நாம சாப்படாம அவர் சாப்டமாட்டார்.. உனக்கு எப்போ அவர மன்னிக்கணும்னு தோணுதோ.. அதுவரைக்கும் இப்டியே பண்ணு.. ஆனா, கொத்தமட்டும் கூடாது..
க்ரோவா : உன் யோசனை சரிதான்.. தப்பு செஞ்சவங்களுக்கு நாம கொடுக்கற பெரிய தண்டனை அத உணரவெக்கறதுதான்.. ரெண்டு மூனு நாள்ல இந்த ஆறறிவுக்கு எல்லாம் புரிஞ்சிரும்..
காகத்ரி : அதே ! அதே !
கண்ணாடிக்காரர் : (இன்னும் சத்தமாக) கா.. கா.. கா.. 
(க்ரோவாவும் காகத்ரியும் மறைந்திருந்தபடியே சிரிக்கிறார்கள்.)

(திரை)

Tags : Siruvarmani Grova Kagatri and Glassman
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT