சிறுவர்மணி

குடியரசு நன்னாள்!

23rd Jan 2021 06:00 AM | சுமன்

ADVERTISEMENT

நம்மை நாம் ஆள்வதற்கு 
அரசியல் சட்டம் வகுத்து
அதன்படி நாம் நடக்க 
உறுதியை ஏற்ற நாளாம்!

குடியரசுத் தலைவர் அன்று 
கொடியினை ஏற்றி வைப்பார்!
மறைந்த நம் வீரர்க்கெல்லாம் 
மரியாதை, வணக்கம் செய்வார்!

ஏற்றி வைத்த கொடியை நிமிர்ந்து 
நோக்கி நாம் வணங்கி நின்று 
போற்றுகின்ற பொன் நாளே இங்கு  
குடியரசு நன்னாளாகும்!

வீரர்க ளெல்லாம் சேர்ந்து 
விருந்தளிப்பர் கண்களுக்கு! 
சிறந்ததோர் அணிவகுப்பு!
சிந்தையிலே நாட்டுப் பற்று!

ADVERTISEMENT

இந்திய விடுதலைக்குப்
பாடுபட்ட தியாகிகளை நாம்
நன்றியுடன் நினைவில் வைத்துக்
கொண்டாடும் நன்னாள் இதுவே!

எல்லையின் நமது வீரர் 
இரவு பகல் கண் விழித்து 
நாட்டினைக் காத்திடுகின்ற  
பணியினை போற்றும் நாளாம்!
 பற்பல துறைகள் தனிலே 
சாதனைகள் செய்தோருக்குப் 
பாராட்டி விருதுகள் தந்து 
போற்றிச்சிறப் பளிக்கும் நாளாம்!

வேற்றுமைகள் ஒழிந்து இங்கு 
ஒற்றுமையாய் சேர்ந்து, நாடு 
உயர்வடைய வழிகள் காண்போம்!
உண்மையுடன் உழைத்து வெல்வோம்
 
கண்ணை இமை காப்பதுபோலே
காத்திடுவோம் தாய்நாட்டை நாமும்!
ஆர்வமுடன்  கடமை செய்வோம்!
அனைத்திலும் வெற்றி காண்போம்!

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT