சிறுவர்மணி

இளம் படைப்பாளி!

9th Jan 2021 06:00 AM | -அபிநயா

ADVERTISEMENT

 

எஸ். அபிநயா,
12 - ஆம் வகுப்பு. நாலந்தா ஹையர் செகண்டரி பள்ளி,
திருச்செங்கோடு.


புதருக்குள் புகுந்து கொண்ட சுண்டெலியைப் பிடிப்பதற்காக முயற்சித்த கீரிப்பிள்ளை முள்ளில் வசமாக சிக்கிக்கொண்டது. எலி தப்பி ஓடிவிட்டது! பலமுறை முயற்சித்தும் உடம்பில் ரத்தகாயங்கள் ஏற்பட்டனவே தவிர அதனால் வெளிவர முடியவில்லை. காயங்கள் எரிச்சலை ஏற்படுத்தின. அந்தப் பக்கம் ஏதேனும் விலங்குகள் வந்து தன்னைக் காப்பாற்றாதா என எதிர் நோக்கி அழத்தொடங்கியது!

சற்று நேரத்தில் இரை தேடி அவ்வழியாக ஒரு பாம்பு வந்தது. முட்புதரில் அழும் சத்தத்தைக் கேட்டது. யாரெனப் பார்த்தது. கீரிப்பிள்ளை மாட்டிக்கொண்டிருந்ததை அறிந்தது. பயத்தில் மிரண்டு திரும்பிச் செல்ல ஆரம்பித்தது.

ADVERTISEMENT

""நண்பா!....நில்!.... முள்ளில் மாட்டிக்கொண்டு வெகு நேரமாக வெளியே வர முடியாமல் தவிக்கிறேன்!.... என்னைக் காப்பாற்ற நினைக்காமல் திரும்பிச் செல்கிறாயே?.... '' என அழுதுகொண்டே கேட்டது கீரிப்பிள்ளை.

எப்போதும் தன் இனத்திற்கு எதிரியாக இருக்கும் கீரிப்பிள்ளை, "நண்பா' என்று அழைத்ததில் பாம்பிற்கு திகைப்பு ஏற்பட்டது!

""உன்னைக் காப்பாற்றும் எண்ணமிருக்கிறது..... ஆனால் நீ என் எதிரி!.... இப்போது காப்பாற்றுகிறேன்!.... இனிமேல் என்னை மட்டுமின்றி எங்கள் இனத்தவர்களுக்கும் எக்காலத்திலும் தீங்கிழைக்கக் கூடாது!.... சரியா?'' என்று கேட்டது பாம்பு.

""உயிரைக் காப்பாற்ற நினைக்கும் உன்னை மறப்பேனா?.... உன் சொல்படி நிச்சயமாக நடந்து கொள்வேன்!.... முட்புதரில் இருந்து என்னை விடுவிக்க உதவி செய்...'' என்று கெஞ்சியது கீரிப்பிள்ளை.

""நல்லது நண்பா!.... என் ஒருவனால் மட்டுமே இந்த முட்களை எடுப்பது மிகவும் சிரமமான காரியம். அதனால் கரடி நண்பரை அழைத்து வருகிறேன்.... கவலைப்படாதே!'' என்று சொல்லிவிட்டு வேகமாக ஊர்ந்து சென்றது.

சிறிது தொலைவில் இருந்த குட்டையான மரத்தில் தேனடைகளை சாப்பிட்டுக் கொண்டிருந்த கரடியை அழைத்தது பாம்பு.

அழைப்பைக் கேட்டு, உடனடியாக கீழே இறங்கி வந்த கரடி, ""என்ன விஷயம்? என்று கேட்டது.

கீரிப்பிள்ளை உயிருக்காகப் போராடிக்கொண்டிருப்பதை கூறியது பாம்பு.

""வேண்டாம் நண்பா!.....கீரிப்பிள்ளையைக் காப்பாற்ற நினைக்காதே!.....

ளியே வந்தால் உன்னைக் கொன்றுவிடும்!.... உங்கள் இனத்தின் மீது நிரந்தரப்பகை கொண்ட அதன் பேச்சைக் கேட்காதே!.... எந்த மிருகங்களுக்கும் பிறவிகுணம் மாறாது!.... அது வெகுநேரமாகச் சிக்கித் தவிப்பதால் இப்போது அதிக பசியுடனும் இருக்கும்!..... வீணாக மாட்டிக் கொள்ளாதே! '' என அறிவுறுத்தியது கரடி.

""எங்கள் இனத்திற்கே இனி கெடுதல் செய்ய மாட்டேன் என்று அது வாக்குக் கொடுத்துள்ளது!.... அதை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லை.... தயவு செய்து என் நட்புக்கு மதிப்பளித்து அதைக் காப்பாற்ற உதவி செய்!''

பாம்பின் விடாப்பிடியான கெஞ்சலுக்கு கரடி மனமிரங்கியது.

""சரி,.... உன் விருப்பத்திற்காக உதவி செய்கிறேன்!'' என்று கூறி பாம்புடன் விரைந்தது.

""நண்பனை அழைத்து வர இவ்வளவு நேரமா?'' என்று வலி தாங்காமல் பாம்பைக் கடிந்து கொண்டது கீரிப்பிள்ளை. பின்பு கரடியைப் பார்த்து, ""கரடியாரே!.... சீக்கிரம் என்னைக் காப்பாற்றுங்கள்...'' என கோபமாகக் கூறியது.

""பார்த்தாயா நண்பா!.... இன்னும் காப்பாற்றவே ஆரம்பிக்கவில்லை!.... அதற்குள் இந்த கீரிப்பிள்ளை எப்படி கோபப்படுகிறது! உதவி செய்ய நினைப்பவர்களிடம் கோபப்பட்டால் என்ன ஆகும்... அதை அறியாத இதன் பேச்சைக் கேட்டு என்னை அழைத்து வந்து விட்டாயே...'' என்று பாம்பிடம் கூறியது கரடி.

""கீரிப்பிள்ளையின் நிலையில் எது இருந்தாலும் இவ்வாறுதான் பேசத் தோன்றும்!... வலி தாங்காமல் பேசுகின்றது!.... தவறாக எடுத்துக் கொள்ளாதே.... முட்களை எடுத்து அதனைக் காப்பாற்று!'' என்றது பாம்பு.

""சரி, நான் ஒவ்வொரு முள்ளாக அகற்றி, வெளியே வரச் செய்கிறேன்.... நீ இங்கே இருக்க வேண்டாம்!.... அருகிலிருக்கும் மரத்தின் மேல் ஏறிக்கொள். இந்தக் கீரிப்பிள்ளை நன்றி சொல்வதற்காக உன்னை அழைத்தாலும் நீ கீழே இறங்காதே!...'' என்றது கரடி.

""வீணாக அதை சந்தேகப்படுகிறாய்!.... பரவாயில்லை... உனக்காக மரத்தில் ஏறிக்கொள்கிறேன்...'' என்று அருகில் இருந்த மரத்திற்கு ஊர்ந்து சென்று பாதுகாப்பாக கிளையில் தங்கிக்கொண்டது.

கரடி முட்கிளைகளை ஒவ்வொன்றாக அகற்றியபின் கீரிப்பிள்ளை மெதுவாக வெளியே வந்தது. பசியும், வலியும் ஒன்று சேர, ஆத்திரத்தில் திட்டத் தொடங்கியது!

""உதவி செய்வதற்கு என வந்து நீண்ட நேரமாக வசனம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்!..... உடனடியாகச் செய்யத் தெரியாதா?... எனக்கிருக்கும் ஆத்திரத்தில் அந்தப் பாம்பு கீழே இருந்திருந்தால் பசியாறியிருப்பேன்!.... இந்த முறை தப்பித்தாலும் இன்னொரு முறை மாட்டாமலா போய்விடும்?...'' என்று திட்டிய கீரிப்பிள்ளை நன்றி கூட கூறாமல் ஓடியது.

மரத்தின் மேலிருந்த பாம்பை நோக்கிய கரடி, ""திருந்தவே திருந்தாத பகைவனுக்கு உதவ நினைத்தாயே,.... இப்போது புரிந்து கொண்டாயா?'' என்று பாம்பை நோக்கிக் கேட்டது கரடி.

""தவறுதான் மன்னித்துக்கொள்....'' என்றது பாம்பு.

ADVERTISEMENT
ADVERTISEMENT