சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: பித்தம் போக்கும்  நாரத்தை  மரம்

31st Oct 2020 06:00 AM | - பா.இராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT

 

குழந்தைகளே நலமா?

நான் தான் நாரத்தை மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் சிட்ரஸ் மெடிக்கா என்பதாகும். நான் ரட்டாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் நூறு ஆண்டுகளுக்கும் மேல வாழ்ந்து உங்களுக்கு பயன்கள் பல தருவேன்.எனது பிஞ்சு, காய், பழம் வேர், மலர், மருத்துவக் குணம் கொண்டவை. என் காய்கள் நன்கு பச்சை நிறத்தில் நல்ல மணமுடன் இருக்கும். என் மணம் மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும்.

எனது நன்கு கனிந்த பழம் மஞ்சள், பச்சை கலந்து, தோல்பகுதி கனத்துடன் இருக்கும். இதில் நீர் நிரம்பியிருக்கும்.

ADVERTISEMENT

என் காயை அல்லது பழத்தை ஊறுகாய் செய்து உணவில் சேர்த்து உண்டு வந்தால் உங்கள் இரத்தம் சுத்தமடையும். அதோட, பசியைத் தூண்டி வாதம், வயிற்றுப்புண், வயிற்றுப் புழு நீக்கும். என் பழத்தின் மேல் தோலை தேன் அல்லது சர்க்கரையில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்று வயிறு சுத்தமாகும். குழந்தைகளே உங்களுக்குத் தெரியுமா, பித்தம் அதிகரித்தால் இரத்தம் அசுத்தமடைந்து அதனால் பல நோய்கள் உருவாகும்.

இதனால், தலைசுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஈரலும் பாதிப்படையும். நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால், பித்தம் தணியும், நோய்கள் தீரும்.

வெள்ளையணுக்கள் குறைவாக உள்ளவர்களும், உடல் வெப்பத்தால் பாதிப்படைந்தவர்களும் என் பழத்தை சாறு பிழிந்து, தேன் கலந்து குடித்து வந்தால், குளிர்ச்சியைத் தந்து, உடல் வலு பெறுவதுடன், இரத்தத்தை சுத்திகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உங்களுக்கு புத்துணர்வை அளிப்பேன். என் பழச்சாறை மதிய வேளையில் அருந்தினால் வெயிலின் தாக்கம் குறையும். இந்த பானம் வாந்தியையும் தாகத்தையும் கூட தணிக்கும்.

என் பழத்தில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள், பல உள்ளன. என் மலர்களை துவையல் செய்து சாப்பிடலாம். அது உங்கள் தசைகளை பலமுள்ளதாக்கும். என் வேர், வாந்தியால் ஏற்படும் குமட்டலைக் நீக்கி, வயிற்றுப் புழுக்களைப் போக்கும் அது மட்டுமா,சிறுநீரகக்கல் நோய்களுக்கு நல்ல மருந்து.

என் இலைகளின் நரம்புகளை நீக்கி, தேங்காய் துருவலுடன் வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டால் பித்தம் குறையும். குறிப்பாக, கர்ப்ப காலத்தில் ஏற்படும் சுவையின்மை, குமட்டல், வாந்திபசியின்மை குறையும். கர்ப்பிணிகள் காலையும், மாலையும் என் பழச்சாறுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் சுகப்பிரசவம் நடக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உங்களுக்கு செரிமானப்பிரச்னை இருக்கா, அந்தக் கவலையை விடுங்க, உணவுடன் நார்த்தாங்காய் ஊறுகாயை சாப்பிடுங்க. வயிற்றில் ஏற்பட்ட புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்து. வயிறு உப்புசம் உடையவர்கள் என் பழத்தை சாறு பிழிந்து சுடுதண்ணீருடன் கலந்து அடிக்கடி பருகினால் வாயுத் தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்று பொருமல் ஓடிடும். குழந்தைகளே, உங்களுக்குத் தெரியுமா, மரங்கள் மட்டுமே உலகில் சுயமான உணவைத்தயாரிக்கும் திறனைப் பெற்றிருக்கின்றன.

ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டை ஆக்சைடின் அளவு 1000 கிலோ. இதனால் புவி வெப்பமடைவது பெரும்பாலும் குறைகிறது. ஒவ்வொரு மரமும் இறைவன் உங்களுக்குத் தந்த அருட்கொடை. நான் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், திருப்பேரையூர் (ஓகைப்பேரையூர்) அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோவிலின் தலவிருட்சமாக இருக்கேன். நன்றி, குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

ADVERTISEMENT
ADVERTISEMENT