சிறுவர்மணி

நல்ல தம்பியின் நற்செயல்!

17th Oct 2020 06:00 AM | -கே. பி. பத்மநாபன்

ADVERTISEMENT


அறம்செய்தலின் நன்மைகளைப் பற்றி வகுப்பில் பாடம் நடத்திய ஆசிரியர், மாணவர்களிடம், ""இனிவருகிற பதினைந்து நாள்களில், நீங்கள் ஒவ்வொருவரும், சிறிதோ பெரிதோ, மற்றவர்க்கு ஏதேனும் நன்மை செய்து, அவற்றைத் தாளில் பட்டியலிட்டு எழுதி, பதினைந்து நாள்கள் கழித்துக் கொண்டுவர வேண்டும்'' என்று கூறினார்.

எப்போதும் பிறருக்குத் தன்னாலான உதவிகளைச் செய்யும்  நல்லதம்பி புதுமையாக ஏதேனும் செய்ய விரும்பி, சிந்தித்தான்.

பதினைந்து நாள்கள் முடிந்தது. ஆசிரியர் அனைவரிடமிருந்தும் அவரவர் செய்திருந்த நல்ல செயல்களின் பட்டியல்களின் தாள்களை வாங்கிக் நோக்கினார். அம்மாவுக்கு உதவியாகச் சிறுசிறு வீட்டு வேலைகள் செய்தது, பால் வாங்கிக் கொண்டு வந்தது, அப்பாவுக்காகப் பத்திரிகை வாங்கி வந்தது, வீட்டைச் சுத்தம் செய்தது, பிச்சை எடுப்பவர்களுக்கு உணவளித்தது, சாலையில் நடக்கும் வழியிலிருந்த கூரான கற்கள், முட்கள், கண்ணாடித்துண்டுகள் போன்றவற்றை அகற்றியது, பார்வையற்றவர்களுக்குச் சாலையைக் கடக்க உதவியது போன்ற பலவற்றைச் செய்ததாக யாவரும் எழுதியிருந்தனர்.

நல்லதம்பியிடம் ஆசிரியர் கேட்டபோது, தான் எழுதிக்கொண்டு வரவில்லை என்று கூறி, வகுப்புக்கு வெளியே சென்றான். ஓரிரு நிமிடங்களில் ஓர் ஏழைச் சிறுவனை அழைத்து வந்தான். ஆசிரியர் உட்பட அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். நல்லதம்பி, ஆசிரியரிடம், ""ஐயா, இந்த ஏழைச் சிறுவன் இப்போது ஓரிரண்டு பாடல்களைப் பாடுவான். தயவுசெய்து கேட்க வேண்டும்'' என்று வேண்ட, ஆசிரியரும் அதற்குச் சம்மதித்தார்.

ADVERTISEMENT

எட்டு வயதுக்குள்ளிருக்கும் அந்த ஏழைச் சிறுவன், கணீரென்ற குரலில், பாரதியாரின் "செந்தமிழ் நாடெனும் போதினிலே', "தாயின் மணிக்கொடி பாரீர்', "பாரத சமுதாயம் வாழ்கவே' போன்ற தேசபக்திப் பாடல்களை மிக அழகாகப் பாடுவதைக் கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டு நிற்கையில், நல்லதம்பி ஆசிரியரிடம் கூறினான்:

""ஐயா, இந்த ஏழைச் சிறுவன், தெருக்கோடியில் நின்று, பொருள்புரியாத, அருவருப்பான, சில திரைப்படப் பாடல்களைப் பாடி, பிச்சை கேட்டுக் கொண்டிருப்பது வழக்கம். அவை சரியல்ல என்று சொல்லி, தினமும் அவனுக்குப் பாரதியின் பாடல்களைப் பாடக் கற்றுக் கொடுத்து, அப்பாடல்களின் பொருளையும் சொல்லிக் கொடுத்தேன். எதையும் ஒருமுறை கேட்டவுடனேயே கற்றுக் கொள்ளும் திறனுள்ள இவன் இப்பாடல்களையெல்லாம் மிக வேகமாகக் கற்றுக்கொண்டு, இப்போதெல்லாம் இவற்றை மட்டுமேதான் தினமும் பாடுகிறான்.''

நல்லதம்பியின் நற்செயலை வெகுவாகப் பாராட்டிய ஆசிரியர், ""எல்லோரும் சிறப்பான நன்மைகளைச் செய்திருந்தாலும், நல்லதம்பி, பாரதியார் கூறியபடி "அங்கோர் ஏழைக்குக் கற்பித்தலே மிக உயர்ந்த அறம்' என்று நிரூபித்து விட்டான். அவன் ஆற்றிய இந்த நற்செயலுக்காக அவனுக்கு நூறு ரூபாயும், அந்த ஏழைச் சிறுவனுக்கு நூறு ரூபாயும் பரிசளிக்கிறேன்'' என்று கூறிப் பரிசளித்தார்.

நல்லதம்பி உடனே தனது பரிசுப் பணத்தையும் அந்த ஏழைச் சிறுவனுக்கே கொடுத்ததைக் கண்ட ஆசிரியருக்கும் , அறத்தின் பெருமையை நன்குணர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் மனதில் பெருமிதம் ஏற்பட்டது. 

ஆசிரியர், ""நம் தலைமை ஆசிரியரிடம் கூறி, இச்சிறுவனை நாம் நமது பள்ளியில் சேர்த்து, கல்வி கற்பிக்க உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் போகிறேன்'' என்றதும், அனைத்து மாணவர்களும் பெருத்த கரவொலி எழுப்பி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

நல்லதம்பியின் அறச்செயல், ஒரு புதிய நல்ல மாணவனை உருவாக்கும் நன்மையில் முடிந்தது.               

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT