சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: வறட்சியைத் தாங்கி வளரும் மரம்  - தொரைட்டி மரம்

5th Dec 2020 06:21 PM | - பா.இராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT


குழந்தைகளே நலமா ?

நான் தான் தொரைட்டி மரம் பேசுகிறேன்.  எனது தாவரவியல்  பெயர் கப்பாரிஸ் கிராண்டிஸ், பொதுப்பெயர் கேப்பர் புஷ்சஸ்.   நான் கப்பாரேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.  குழந்தைகளே, கிராமங்களில் மரங்களிலிருந்து காய், கனிகளைப் பறிக்க தொரட்டி என்ற ஒரு வகை கொம்பை பயன்படுத்துவாங்க, அதன் பெயரிலேயே ஒரு மரமான்னு தானே நினைக்கிறீங்க, சரியா?  அதன் பெயர் தொரடு. என் பெயர் தொரைட்டி.  

எனக்கு செங்கம் என்ற வேறு பெயருமுண்டு. நான் வறண்ட நிலப் பகுதிகளிலும், பாலைவன பகுதிகளிலும் வளருவேன்.  என் உயரம் சுமார் 8 முதல் 15 அடி வரை கூட இருக்கும்.  என் இலைகள் மிகுந்த பச்சையாக இருக்கும். நான் உஷ்ணம் மற்றும் வறட்சித் தன்மையைக் கொண்டிருப்பேன். 

நான் ஒரு முட்கள் நிறைந்த மரமாவேன். என் இலைகளிலும் முட்களிருக்கும். என் மரத்தின் கிளைகள் படர்ந்து விரிந்திருக்கும். என் மொட்டு துவக்கத்தில் பச்சையாகவும், மலர்ந்த பிறகு வெண்மையாகவும் இருக்கும். என் பூக்களை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.  

ADVERTISEMENT

என் பழத்தின் சதைப் பகுதி சிவப்பு நிறத்தில், இனிப்பும், கசப்புமான சுவையைக் கொண்டு நுண்ணூட்டச் சத்துகள் அதிகமாயிருக்கு, சமைத்தும் சாப்பிடலாம். என் பழங்களையும், பூக்களையும் பறவைகளும், பிராணிகளும் விரும்பி சாப்பிடுவாங்க. 

என் மரத்தின் பட்டைகள் உங்களின் சிறுநீரக பிரச்னைகளுக்கும், இருமலுக்கும் சிறந்த மருந்து.  அது இரத்தநாளங்களையும் சுத்தம் செய்யும்.  என் இலைகளின் சாறாகப் பிழிந்து நீரில் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள கிருமிகள் அழிந்து போகும். 

உங்களுக்கு காது வலி இருக்கா, என் இலைச்சாறு காதுவலியைப் போக்கும். அதுமட்டுமா? கல்லீரல், மண்ணீரலையும் பலப்படுத்தும்.  கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கவும்  பயன்படுது. என் மரத்தின் வேர் மற்றும் பட்டை நரம்பு வலி, கீல்வாதம் போன்றவற்றிற்கு அருமருந்து.  

குழந்தைகளே,  மரங்கள் சுற்றுப்புறத்திலுள்ள அசுத்த காற்றை உள்வாங்கி உங்களுக்காக புதிய காற்றை தருகிறது.  மண் அரிப்பை தடுத்து, நிலத்தை உறுதியாக வைத்திருக்கிறது. பூமியிலிருந்து நீரை சுழற்சி செய்து, காற்றின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.


நீங்கள் வாழ மட்டுமின்றி பறவைகள், பூச்சிகள் விலங்குகளுக்கு உணவும், அடைக்கலமும் கொடுக்கிறது.  காடுகள் அழியும் போது, மரங்கள் மட்டுமல்ல, வனவாழ் உயிரினங்களும் அழிந்து விடுகின்றன.  இதனால், பூமியில் சமநிலை தன்மை பாதிக்கப்பட்டு,  புவி வெப்பம் அதிகமாகும்.  இயற்கை சீற்றமடைந்து தட்பவெப்ப நிலை சீர்குலையும்.  இதனால், இப்போது நீங்கள் துன்பப்பட்டு உழலும் கரோனா தீநுண்மி போல, பல பெயர் சொல்ல முடியாத கொள்ளை நோய்கள் உருவாகி மனிதர்களைத் தாக்கக்கூடும். இது தேவையா ?  

எனவே, இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழுங்கள் குழந்தைகளே.  மழைக்கு முக்கிய காரணங்களே மரங்கள் தானே.  மரங்கள் அழிவதால் மழையும் அருகி வருகிறது.  மழை இல்லையெனில் வறட்சி தாண்டவ கூத்தாடும்.  இதனால் எங்கும், பசியும், பஞ்சமும் தலைவிரித்தாடும். இந்த நிலை வேண்டாம் குழைந்தைகளே, எனவே, மரங்கள் பல நடுங்கள், வளங்கள் பல பெறுங்கள். 

நான் திருப்பூர் மாவட்டம், காங்கேயம், சிவன்மலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, சிவகங்கை மாவட்டம், கொளிங்குன்றம், அருள்மிகு கொடுங்கநாதர், கோயம்புத்தூர் மாவட்டம், புதூர் கோட்டை அருள்மிகு தண்டுமாரியம்மன், அருள்மிகு கோட்டைக்கரையம்மன் ஆகிய திருக்கோவில்களில் தலவிருட்சமாக இருக்கேன். மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

(வளருவேன்)

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT