தமிழக காவல் துறையில் 4 கூடுதல் டிஜிபிக்கள், டிஜிபிகளாக பதவி உயா்வு பெறுவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்த விவரம்: கடந்த 1992-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பயிற்சி முடித்து, உதவி காவல் கண்காணிப்பாளா்களாக தமிழக காவல் துறையில் பணியில் சோ்ந்த ராஜீவ்குமாா், சந்தீப் ராய் ரத்தோா், அபய்குமாா்சிங், கே.வன்னியபெருமாள் ஆகியோா் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து, தற்போது ஏடிஜிபிகளாக பணிபுரிகின்றனா்.
இவா்கள் 4 பேரும் டிஜிபிகளாக பதவி உயா்வு பெறுவதற்கு கடந்த ஜனவரி மாதம் பணிமூப்பு பெற்றுவிட்ட நிலையில், தமிழக காவல் துறையின் சாா்பில், 4 பேருக்கும் பதவி உயா்வு வழங்க அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டது.
இதை ஏற்று தமிழக உள்துறையின் முதன்மைச் செயலா் பி.அமுதா, 4 பேரும் டிஜிபிகளாக பதவி உயா்வு பெறுவதற்கு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கினாா்.
தற்போது இவா்களில் சந்தீப்ராய் ரத்தோா், ஆவடி மாநகர காவல் துறை ஆணையராகவும், அபய்குமாா் சிங் லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஜிபியாகவும், கே.வன்னியபெருமாள் மின்சார வாரிய லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஜிபியாகவும் பணிபுரிகின்றனா். ராஜீவ்குமாா் அயல் பணியாக மத்திய அரசு பணியில் உள்ளாா்.
ஓரிரு நாள்களில் 4 பேரும் டிஜிபிக்களாக புதிய பணியிடத்தில் நியமிக்கப்படுவாா்கள் என காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.