மகளிர்மணி

நம்பிக்கை.. முயற்சி.. வெற்றி!

12th Jan 2022 06:00 AM | ஸ்ரீதேவிகுமரேசன்

ADVERTISEMENT


டைரி, நோட்டு புத்தகங்கள், காபி மக்குகள், ஸ்டேஷனரி பரிசு பொருட்கள் போன்றவற்றில் தன் கை வண்ணத்தை குழைத்து, தமிழ் எழுத்துகளை நவீன வடிவில் வண்ணமயமாக உருவாக்கி இன்றைய இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார் தீபிகா வைஷ்ணவி. பள்ளி, கல்லூரி மாணவர்களைத் தாண்டி , கார்ப்பரேட் நிறுவனங்களையும் இவரது தமிழ் எழுத்துக்கள் கவர்ந்துள்ளது என்பது இவரது முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். எதிர்காலத்தில் இன்னும் பல தமிழ் சார்ந்த பொருட்களை உருவாக்கி, உலக சந்தையில் உலவ விட வேண்டும் என்பதே இவரது இலக்கு. இது குறித்து அவர், நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
""சென்னையில் பிறந்து வளர்ந்து, தற்போது பெங்களூரில் வசித்து வருகிறேன். சின்ன வயதில் இருந்தே ஆர்ட் அண்ட் கிராஃப்ட் மீது ஆர்வம் அதிகம். இதனால், பி.காம் முடித்த பின், டெக்ஸ்டைல் டிசைனிங் படித்தேன். அப்பா ஒரு பிசினஸ்மேன் என்பதால் சிறு வயதிலிருந்தே எனக்கும் சொந்தத் தொழிலில்தான் ஆர்வம் இருந்தது.

இருந்தாலும் படிப்பு முடித்துவிட்டு அனுபவ அறிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக, கொஞ்ச நாள்கள் ஒரு பொட்டிக்கில் வேலை பார்த்தேன்.

அங்குதான், கலையை எப்படி தொழிலாக மாற்றுவது என்பதை தெரிந்து கொண்டேன். பின்னர், சொந்தமாகத் தொழில் தொடங்க முடிவு செய்தேன். என்ன செய்வது என்று யோசித்தபோது, ஸ்டேஷனரி பொருள்கள் மீதுதான் என் கவனம் போனது. இதனால், ஸ்டேஷனரி பொருள்களில் நானே டிசைன் செய்து விற்கத் தொடங்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. அதன்பின் "டிராமா டிசைன்ஸ்' என்ற ஆன் லைன் நிறுவனத்தை தொடங்கி நான் தயாரிக்கும் பொருள்களை எல்லாம் அதன்மூலம் விற்க தொடங்கினேன்.
இதற்காக, நான் முதலில் ஆரம்பித்தது டிசைனர் யோகா மேட் விற்பனை தான். பொதுவாகவே டிசைனர் பொருட்கள் என்றாலே, சந்தையில் விலை அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் எனக்கு அதிக விலையில் விற்பதில் உடன்பாடில்லை. தரமான பொருளை நியாயமான விலையில் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், டிசைனர் யோகா மேட்டை குறைந்த விலையில் கொடுப்பது கடினமாக இருந்தது. அதனால் அதை தொடர்ந்து செய்ய முடியவில்லை.

இந்நிலையில்தான், ஸ்டேஷனரி பொருள்களிலேயே வேறு ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று தோன்றியது. ஏனென்றால், இன்றைய காலசூழலில், இளைஞர்கள் பயன்படுத்தும் ஸ்டேஷனரி பொருள்கள் எல்லாம் பெரும்பாலும், மேற்கத்திய மயமாகத்தான் இருக்கின்றன. ஹாலிவுட் படங்கள், சூப்பர் ஹீரோ பாத்திரங்கள் அல்லது பாலிவுட் சாயலில்தான் சந்தையில் கிடைக்கிறது. அதனால், நம்ம ஊரில் பயன்படுத்தும் ஸ்டேஷனரி பொருள்களில் தமிழைக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

ADVERTISEMENT

அந்த சமயத்தில்தான் வட மாநிலங்கள் பக்கம் பயணம் சென்றேன். அப்போது, அங்கே காபி மக்குகளில் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தேன். அதேபோன்று தமிழ் எழுத்துகளையும் காபி மக்குகளில் எழுதினால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது.

அதற்காக நான் தேர்ந்தெடுத்தது "ஆத்திசூடி'. அதில் இருந்து சில வரிகளை மட்டும் எடுத்து அதை நவீன வடிவில் வண்ணமயமாக காபி மக்குகளில் டிசைன் செய்தேன். தமிழ் எழுத்துகள் உள்ள காபி மக்குகளை தமிழர்கள்தான் விரும்புவார்கள் என நினைத்தேன். ஆனால், வட மாநிலங்களான பஞ்சாப், சிம்லா போன்ற இடங்களிலும் தமிழ் எழுத்துகள் பொரித்த காபி மக்குகளை மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.

தற்போது, எனது கலைப் பொருள்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை விரிவடைந்துள்ளது. அவ்வப்போது, கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும் பரிசுப்பொருட்கள், ஸ்டேஷனரி பொருட்கள், டிசைனர் பொருள்கள் போன்றவற்றை ஆர்டரின் பேரில் செய்து தருகிறேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அப்படியே காபி கோப்பைகள், சோபா மெத்தைகள் போன்றவற்றை டிசைன் செய்து வழங்கி வருகின்றேன்.

பொதுவாக, நாம் உடுத்தும் உடை, பயன்படுத்தும் பொருட்கள் எல்லாமே நம்மை பற்றிய பிம்பத்தை, தகவல்களை பரைசாற்றுகின்றன. எனவே, நம்முடைய பிம்பத்தை மகிழ்ச்சியானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் மாற்ற இதுபோன்ற கலைநயம் மிக்க பொருட்கள் பயன்படும்.

இந்த நிறுவனம் தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. சில சமயம் உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனை ஆகாமல் தேங்கிவிடும். ஆனால் அடுத்த சில மாதங்களில் மொத்த பொருள்களும் விற்றுத் தீர்ந்து பற்றாகுறையாகிவிடும். இத்தனை வருடங்களில் எனது சொந்தத் தொழில் நிறைய அனுபவங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. இருந்தாலும் எந்தவித சூழலிலும் நம்பிக்கையை இழக்காமல் புத்துணர்ச்சியுடன் செயல்படுகிறேன். என்னுடைய இந்த முயற்சிகளே, ஒருநாளில் என் இலக்குகளை அடைய வெற்றிப் பாதையை உருவாக்கித் தரும் என்று நம்புகிறேன்'' என்கிறார் தீபிகா.

ADVERTISEMENT
ADVERTISEMENT