மகளிர்மணி

வீடே கல்விக் கூடம்!

22nd Sep 2021 06:00 AM | - ச.பாலசுந்தரராஜ் 

ADVERTISEMENT


பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள்  தற்போது  திறக்கப்பட்டாலும், இன்னும்  தொடக்கப்பள்ளி மாணவர்கள் வீட்டிலேயேதான்  முடங்கிக் கிடக்கிறார்கள்.  இந்நிலையில், பள்ளிக்குச் செல்லாமல் மாணவர்கள் பாடங்களை மறந்துவிடக்கூடாது என விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஆசாரிகாலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் சோ.சுப்புலட்சுமி மாணவர்களின் வீட்டிற்கே சென்று பாடம் நடத்தி வருகிறார்.

இவரது பள்ளிக்கு வரும் அப்பகுதி மாணவர்கள் மற்றும் வேறு பள்ளியில் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு  மாணவர்களுக்கும் வீட்டிற்கே சென்று பாடங்களை கற்பித்து வருகிறார். ஆசிரியர் சோ.சுப்புலட்சுமி நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

""தொடக்கப்பள்ளி மாணவர்கள் பாடங்களை மறந்து விடக்கூடாது. வாசிக்கும் திறன் குறைந்து விடக்கூடாது என ஜூன் முதல் வாரத்திலிருந்து மாணவர்களின் வீட்டிற்கே சென்று பாடம் கற்பித்து வருகிறேன். 

பாடம் நடத்துதல், கையெழுத்துப் பயிற்சி, வாசிப்பு பயிற்சி அளித்து வருகிறேன். தமிழ்ப் பாடத்தில் திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், இலக்கணம் உள்ளிட்டவைகளும், சூழ்நிலையியலில் நீர்நிலை பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுவது குறித்தும், கணிதத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல் உள்ளிட்டவையும், ஆங்கிலத்தில் பாடம் மற்றும் இலக்கணமும், சமூக அறிவியலில் தலைநகரம் , அரசு முத்திரைகள் குறித்தும் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறேன். 

ADVERTISEMENT

ஒரு வீட்டில் கற்பிக்கச் சென்றால், அருகில் உள்ள வீட்டில் உள்ள மாணவர்களையும் வரவழைத்து கற்பித்து வருகிறேன். இதற்கு நான் எவ்வித கட்டணமும் பெறுவதில்லை.  ஒவ்வொரு வீட்டிலும் சுமார் 40 நிமிடம் பாடங்களை கற்பிப்பேன். நேரில் சென்று பாடங்களை கற்பிப்பதால் எனக்கு மனதிற்கு முழு திருப்தி அளிக்கிறது. மாணவர்களும் சிறப்பாக படிக்கிறார்கள்'' என்றார். இவர், 2020- ஆம் ஆண்டு தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

Tags : magaliarmani Weed Education!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT