மகளிர்மணி

பற்களின் ஆரோக்கியம்: அத்தியாவசிய உணவுகள்

20th Oct 2021 06:00 AM | ப. வண்டார்குழலி  இராஜசேகர், அவ்வையார் அரசு மகளிர்

ADVERTISEMENT

 

மனித உடலில், உள்ளுறுப்புகளான இதயம், நுரையீரல், மூளை, கல்லீரல், சிறுநீரகம் போன்றவையே மிக முக்கியமானவை - இந்த உறுப்புகளில் நோய் வந்தால் மட்டுமே உணவு, ஊட்டச்சத்து, உணவுக் கட்டுப்பாடு போன்றவை அவசியம் என்று பெரும்பாலானோர் நினைத்துக்,கொண்டிருக்கின்றனர். அதனால், வெளிப்புற உறுப்புகளான கண், காது, மூக்கு, வாய், பற்கள், தொண்டை போன்றவற்றின் ஆரோக்கியத்தில் அவ்வளவாக கவனம் எடுத்துக்,கொள்வது கிடையாது. இந்த வெளிப்புற உறுப்புகளின் சீரான செயல்பாடுகளுக்கு, அவற்றிற்கான சிறப்பு ஊட்டங்களும், பிற சத்துகளும் அவசியம் என்பதுடன் அவற்றில் ஏதேனும் சிக்கல்; அல்லது  நோய் ஏற்படினும் உணவு முறையை மாற்றியமைத்துக்,கொள்ள வேண்டும் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.

வாய் என்ற பிரதான வெளிப்புற அமைப்பிற்குள் பற்கள், நாக்கு, அன்னம், உள்நாக்கு என்று பல சிறு உறுப்புகள் உள்ளன. குழந்தைப் பருவத்திலிருந்தே இவையனைத்தையும் மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும், வாயிலுள்ள பற்களின் உருவாக்கம், பற்கள் மற்றும்  ஈறுகளின் உறுதித்தன்மை  எச்சிலின் அமிலத்தன்மை என்பதெல்லாம் உண்ணும் உணவைப் பொருத்து அமைவது மட்டுமல்லாமல், இந்த உறுப்புகளில் சிக்கல் ஏற்பட்டால், சிறிய அளவு உணவு கூடக் கிடைக்காமல்,  மொத்த உடலும் நலிவடைந்துவிடும். 

பற்களின் அமைப்பு: மனிதப் பற்கள் ஒவ்வொன்றும் நான்கு  மிக முக்கியமான பகுதிகளைக் கொண்டுள்ளது. பல்லின் வெளிப்புற கடினமான அமைப்பான பற்சிப்பி எனப்படும் (1) எனாமல் அதற்கடுத்து இருக்கும் (2) டென்டைன் எனப்படும் பற்களை வலுவாக வைத்திருக்கும் அமைப்பு, பல் வேரினைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் (3) சிமென்டம் என்ற உறை, இணைப்புத் திசுக்களுடன் கூடிய உள்ளிருக்கும் கூழ்போன்ற அமைப்பான (4) பல்ப் என்ற இந்த நான்கு பகுதிகளும் சரியாக இருந்தால்தான் ஒருவரின் பற்களும் உறுதியாக இருப்பதாகக் கொள்ள வேண்டும். 

ADVERTISEMENT

பற்சொத்தைக்கான காரணிகள்: குழந்தைகள் அல்லது பெரியவர்களுக்கு பற்சொத்தை ஏற்படுவதற்கு பின்வரும் காரணிகளுள்  ஏதேனும் ஒன்றுதான் நிச்சயமாக இருக்கமுடியும். அவை (1) பற்களின் உறுதித்தன்மை மற்றும் அதன் அமைவிடம் (2) வாயிலுள்ள கிருமிகள் (3) எளிதில் நொதிக்கப்பட்டுவிடும் மாவுச்சத்துள்ள உணவுகள் (4) உணவு பற்களிடையில் தங்கி, கிருமிகளால் சிதைக்கப்படும் நேரம். வளரும் பற்கள் என்பதாலும் அதிக சர்க்கரை சேர்த்த உணவுகளான மிட்டாய்கள், சாக்லேட் போன்றவற்றை உண்பதாலும் பற்களை சுத்தப்படுத்தும் பக்குவம் சரியாகத் தெரியாததாலும் குழந்தைகளே பற்சொத்தையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏறக்குறைய 50 சதவிகிதக் குழந்தைகள் தங்களுடைய 8 வயதிற்குள்ளாகவே பற்சொத்தையை அனுபவித்துவிடுகிறார்கள் என்று தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து ஆய்வுக்கான கணக்கெடுப்பு விவரமும் உறுதிப்படுத்துகிறது. 

மாவுச்சத்து நிறைந்த தானியங்கள், குறிப்பாக நார்ச்சத்து நீக்கியும் பளபளப்பூட்டியும் விற்கப்படும் தானியங்களின்  மாவு  பிரக்டோஸ், லாக்டோஸ் போன்ற எளிமையான குளுக்கோஸ் இருக்கும் பழச்சாறு, பால் போன்றவைகள் பற்சொத்தைக்கு மிக எளிதாக வழிவகுப்பவை. பற்களை சுத்தம் செய்ய இயலாத நிலையில் ஏதேனும் நோய் அல்லது காயம் இருப்பவர்களுக்கு இந்த குளுக்கோஸ் பொருட்கள் எச்சிலுடன் கலந்து பற்களில் அடர்ந்த படிமானத்தை உருவாக்கிவிடும். இந்த படிமானம் நாளடைவில் பற்களின் வெளிப்புறப் பாதுகாப்பு அரணாக இருக்கும் எனாமலை அழித்துவிடுவதால் பற்சொத்தை 
ஏற்படுகிறது. 

வாய் மற்றும் பற்களில் ஏற்படும் பிற பாதிப்புகள்: பற்சொத்தைத் தவிர ஈறு வீக்கம், சீழ் வைத்தல், அனைத்துப் பற்களும் விழுந்த நிலை, சிறுநீரக நோய்கள், வயதானவர்கள் மற்றும் நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் வரை பற்கள் சார்ந்த பிற பாதிப்புகளும் இருக்கின்றன. இவைத் தவிர, எதிர்பாராத விபத்துகளினால் வாயில் ஏற்படும் சிக்கலான காயங்கள், நுண்ணிய எலும்புகள் நொறுங்கிவிடுதல், பற்கள் பதிந்து, உடைந்து அல்லது வேருடன் வெளியே வந்துவிடுவது,  தாடை, பற்கள் சீர் படுத்தும் முறைகள் அல்லது அழகுபடுத்தும் அறுவை சிகிச்சைகள், வாய் புற்றுநோய் போன்ற நிலைகளும் மிகுந்த வலியையும், வேதனையும் கொடுத்து, ஒருவரின் அன்றாட செயல்பாடுகளையும் முடக்கிவிடுபவை. இந்நிலைகளில் பாதிப்படைந்தவரின் உடல்நிலையை முன்னேற்றுவதற்கான ஆரோக்கிய உணவுகளைக் கொடுப்பதென்பது மிகவும் சவாலான விஷயம்தான். 

பற்களுக்கான ஊட்டங்களும் அவற்றின் குறைபாடும் தாயின் கருவறைக்குள் இருக்கும் குழந்தைக்கு 2 முதல் 3 மாதங்களிலேயே பற்களின் வளர்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் துவங்கிவிட்டாலும், முழுமையான வளர்ச்சி முடியும் 10 முதல் 12 வயதுவரையிலுமே ஊட்டச்சத்துகள் முக்கியமானவை. குழந்தைகளுக்கு சரிவிகித உணவைக் கொடுக்காதபோது, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, பற்களின் வளர்ச்சியும் பாதிப்படைகிறது. பெரியவர்களுக்குக் குறைபாடு ஏற்படும்போது பற்கள் விழுந்துவிடுதல், சொத்தை. ஈறு நோய்கள், வாயில் துர்நாற்றம் ஏற்படுவதுடன் மட்டுமல்லாமல், பிற நோய்களால் பற்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் தீவிரமடைந்துவிடும். 

பற்களின் முக்கியப் பகுதிகளான பல் எனாமல், டென்டைன் உருவாவதற்குக் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இன்றியமையாதவை என்றால், பற்களில் சொத்தை ஏற்படாதவாறு பாதுகாப்பு அளிப்பது புஃரைடு சத்து. பற்களின் ஒட்டுமொத்த அமைப்பும் இந்த மூன்று முக்கிய சத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருப்பினும், பிற சத்துக்களும் முக்கியப் பணிகளைச் செய்கின்றன. 

கலோரி என்னும் ஆற்றலும் புரதமும் குறைபாடானால், பற்களின் வளர்ச்சி தாமதமாகும் என்பது மட்டுமல்லாமல், சராசரி அளவிற்கும் பெரியதாக வளர்ந்து விடுதல், உமிழ்நீர் சுரப்பிகள் சரிவர வேலை செய்யாதிருத்தல் ஏற்படும். இதை சரி செய்வதற்கு தானியங்கள், மீன், முட்டை, பால், மாமிச உணவுகள், பருப்பு வகைகள் தினசரி உணவில் இருக்க வேண்டும்.

வைட்டமின் "ஏ' குறைந்தால் பற்களின் இணைப்புத் திசுக்கள் வளர்ச்சி குறைபாடு ஏற்பட்டு அடிக்கடி பற்கள் விழுந்துகொண்டே இருக்கும். எனவே, இந்த ஊட்டத்தைக் கொடுக்கும் பால், தயிர், முட்டை மஞ்சள் கரு, ஆட்டு ஈரல், கருவேப்பிலை, பசலைக்கீரை, முருங்ககைக்கீரை, மாம்பழம், பப்பாளி, மஞ்சள் பூசணி போன்ற உணவுகளை குழந்தைப் பருவத்திலேயே அறிமுகப்படுத்திவிட வேண்டும். 

வைட்டமின் "சி' குறைபாடு இருந்தால், பற்கள் உருவாகி வெளியில் வருவது தாமதமாகும் என்பதுடன், ஈறுகளின் உட்புறத்திலிருந்து அவை வெளியில் வருவதற்கு உதவிடும் இணைப்புத்திசுக்களும் சரியாக உருவாகாது. இக்குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு, நெல்லிக்காய், முளைகட்டிய தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள், எலுமிச்சை, சாத்துக்குடி, கொய்யாப்பழம் போன்ற வற்றைக் கொடுக்க வேண்டும். 

மேல்வரிசை மற்றும் கீழ்வரிசைப் பற்கள் அனைத்தும் சரியாகப் பொருந்தாமல், பற்கள் மேல்நோக்கி வளருதல் வாய்க்கு வெளியில் நீட்டிக் கொண்டிருத்தல், ஒன்றின் மேல் ஒன்றாக அல்லது இருபற்களின் இடுக்குகளில் மற்றொரு பல் உருவாதல் போன்ற அசாதாரண பற்களின் அமைப்புக்கும் வளர்ச்சிக்கும் பிரதான காரணமாக இருப்பது அயோடின் சத்தாகும். இதுத்தவிர மிகத் தாமதமான பற்களின் வளர்ச்சிக்கும், உமிழ்நீர் சுரப்பிகள் போதுமான அளவிற்கு உமிழ்நீரைச் சுரக்காமல் இருப்பதற்கும் இரும்புச்சத்து குறைபாடு காரணமாகிறது. இவ்விரு சத்துக்களும் முறையே அயோடின் கலந்த உப்பு, குடிநீர், சிறு மீன்கள், முட்டை, பால், முழுதானியங்கள், சிறுதானியங்கள், அடர் பச்சை கீரைகள் போன்றவற்றில் உள்ளன. 

வாய் மற்றும் பற்களில் ஏற்படும் சிறு பிரச்னைகளுக்கும் நீண்டகால நோய்களுக்கும் எவ்வாறு உணவுமுறை மாற்றம் செய்வது என்பது குறித்து தொடர்ந்து  பார்க்கலாம்.

( அடுத்த இதழில்) 

Tags : magaliarmani Dental Health Essential Foods
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT