மகளிர்மணி

சட்டப் பேரவையில் மங்கைகள்!

தி. நந்​த​கு​மார்


நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவையிலும் 33 சதவீதம் இடஒதுக்கீடு பெண்களுக்கு அளிக்க வேண்டும் என்ற சட்டம் மக்களவையில் இயற்றப்பட்டாலும், மாநிலங்களவையில் இயற்றப்படாததால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டும், நாடாளுமன்ற, சட்டப் பேரவைகளில் மட்டும் கானல் நீராக இருக்கிறது.

இந்த நிலையில், தற்போது நடந்து முடிந்துள்ள 2021-க்கான பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் போட்டியிட்ட 3,998 வேட்பாளர்களில் பெண்கள் 411 பேர். ஆனால்,இவர்களில் 12 பெண்கள் மட்டுமே வெற்றி பெற்றனர்.

இவர்களில் பாஜக சார்பில் 2 பேரும், காங்கிரஸில் ஒருவரும், திமுகவில் 6 பேரும், அதிமுகவில் 3 பேரும் அடங்குவர்.

வெற்றி பெற்று, பேரவைக்குள் நுழையும் பெண்களைப் பற்றி பார்ப்போம்..

வானதி சீனிவாசன் (கோவை தெற்கு)

பாஜக தேசிய மகளிரணித் தலைவரான வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் மநீம சார்பில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசனை தோற்கடித்தார்.

கல்லூரியில் படிக்கும்போதே பாஜக மாணவர் அமைப்பான ஏ..பி. வி..பி. 1989-இல் சேர்ந்த இவர் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியிலும், 2016 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியிலும் வெற்றி வாய்ப்பை இழந்தார். இம்முறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

சி.ஆர்.சரஸ்வதி ( மொடக்குறிச்சி)

ஈரோடு மாவட்டம்- மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சி.கே சரஸ்வதி , திமுக சார்பாக போட்டியிட்ட முன்னாள் அமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசனை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
40 ஆண்டுகளாக மருத்துவச் சேவை புரிந்தவர் சி.கே.சரஸ்வதி, சிறந்த சமூக சேவகியும்கூட. 30 ஆண்டுகளாக பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளில் இருந்தவர். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பேரவைக்குள் நுழை
கிறார்.

விஜயதாரணி (விளவங்கோடு)

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பேத்தியான வழக்குரைஞர் விஜயதாரணி, சிவகுமார் கென்னடி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டவர்.
இதே தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டவர் இவர். இளம்வயதிலேயே மாணவர் காங்கிரஸில் பணியாற்றத் தொடங்கியவர் பல்வேறு பொறுப்புகளை வகித்து, தற்போது மகளிர் காங்கிரஸில் தேசிய பொதுச்செயலாளராக உள்ளார். சட்டப் பேரவையில் காங்கிரஸ் கொறடாவாக இருந்தவர்.

கீதா ஜீவன் (தூத்துக்குடி)

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால் "முரட்டு பக்தர்' என்று அழைக்கப்பட்ட தூத்துக்குடி என்.பெரியசாமியின் மகளான கீதா ஜீவன் அடிப்படையில் ஆசிரியை. தனியார் பள்ளியை நடத்தி வந்தவர்.. 1996-2001-இல் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர். பின்னர், 2006-இல் தூத்துக்குடிதொகுதி உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, சமூக நலத் துறை அமைச்சராக 5 ஆண்டுகள் பதவி வகித்தவர். கடந்த முறையும், 2016-ஆம் ஆண்டிலும் எம்எல்ஏவாக இருந்தார். தற்போது மீண்டும் எம்எல்ஏவாக மூன்றாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2-வது முறையாக சமூக நலத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

தமிழரசி (மானாமதுரை)

மதுரையைச் சேர்ந்த தமிழரசி ரவிக்குமார், எளிய குடும்பத்தில் பிறந்தவர். பட்டதாரியான இவர், தனது இளம் வயதிலேயே 1996-2001-இல் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகப் பணியாற்றியவர்.
2006-இல் சமயநல்லூர் (தனி) தொகுதி எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டு, ஆதிதிராவிடர் நலத் தறை அமைச்சராக 5 ஆண்டுகள் பதவி வகித்தவர்.. இந்த முறை மானாமதுரை தொகுதியில் இருந்து எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வரலட்சுமி மதுசூதனன் (செங்கல்பட்டு)

தொடக்கக் காலத்தில் செவிலியராகப் பணியாற்றியவர். தற்போது இவரது குடும்பத்தினர் மென்பொருள் நிறுவனத்தை நடத்திவருகின்றனர். 2011-இல் ஊராட்சி மன்றத் தலைவர். 2016-ஆம் ஆண்டில் திமுக சார்பில் எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்ட இவர் 2-வது முறையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமலு விஜயன் (குடியாத்தம்)

சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர், 2011-இல் திமுக சார்பில் குடியாத்தம் ஒன்றியக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2016-இல் கே.வி.குப்பம் தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த முறை குடியாத்தம் தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் அதிமுகவில் பரிதா, அமமுக சார்பில் மாஜி எம்எல்ஏ சி.ஜெயந்தி பத்மநாபன், நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்குரைஞர் கலையேந்திரி.. என்று 7 பெண் வேட்பாளர்கள் (மொத்த வேட்பாளர்கள் 14) அதிகம் களம் கண்ட தொகுதியில், அமலு விஜயன் வெற்றி பெற்றுள்ளார்.

கயல்விழி, (தாராபுரம் )

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனை தோற்கடித்து வெற்றி பெற்றவர் கயல்விழி. விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றியவர். மகளிரணியில் பொறுப்பு வகித்துவந்தவர், திமுக சார்பில் போட்டியிட்ட கயல்விழி தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றுள்ளார்.

சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்)

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் திமுக சார்பில் சிவகாமசுந்தரி முதல் முறையாகப் போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளார்.

மரகதம் குமரவேல் ( மதுராந்தகம்)

எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். மதுராந்தகம் தனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஏற்கெனவே ஊராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ளார். 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினரானார்.

தேன்மொழி (நிலக்கோட்டை)

2006- ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் நிலக்கோட்டை (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதன்பின்னர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தால், இந்தத் தொகுதியில் 2019-இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் வாய்ப்பு கிடைக்கவே போட்டியிட்டு எம்எல்ஏவாக தேன்மொழி தேர்வு செய்யப்பட்டார். இப்போது 3-வது முறையாக இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

சித்ரா (ஏற்காடு )

மலைக் கிராமங்கள் சூழ்ந்த இயற்கை எழில் மிகுந்த ஏற்காட்டில், சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். சேலம் மாவட்டம்- ஏற்காடு (தனி) தொகுதியில் 2016- ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சித்ரா. இவர் மீண்டும் இரண்டாவது முறையாக அதே தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி
பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT