மகளிர்மணி

ஆஸ்கர் விருது பெறும் ஆசியப் பெண்மணி..!

பிஸ்மி பரிணாமன்

சென்ற பிப்ரவரி மாதமே "ஆஸ்கர் விருது விழா' நடந்திருக்க வேண்டும். உலகை முடக்கிப் போட்டிருக்கும் கரோனா தொற்று ஆஸ்கர் விழாவையும் இரண்டு மாதங்களுக்கு ஒத்திப்போட வைத்தது.

சமீபத்தில் ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடந்து முடிந்த ஆஸ்கர் விழாவுக்கு 93 வயதாகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி தியேட்டரில்தான் வழக்கமாக ஆஸ்கர் விருது விழா நடக்கும். இந்த முறை டால்பி தியேட்டர் மற்றும் யூனியன் ஸ்டேஷன் (ரயில் -பஸ் -மெட்ரோ நிலையம்) ஆகிய இரண்டு இடங்களில் குறைந்த பார்வையாளர்கள், சமூக இடைவெளிவிட்டு அமர... விழா தொகுப்பாளர் இல்லாமல், மேடையில் ஆடல் பாடல் இல்லாமல் ஆஸ்கர் விழா நடந்து முடிந்துள்ளது.

93 ஆண்டு கால இடைவெளியில் திரைப்பட இயக்கத்திற்கு இரண்டே இரண்டு பெண்மணிகள்தான் ஆஸ்கர் விருது பெற்றுள்ளார்கள். 11 ஆண்டுகளுக்கு முன்பு 2009 -இல் "தி ஹர்ட் லாக்கர்' திரைப்படத்துக்காக கேத்ரின் பிகலோ என்ற ஆங்கிலப் பெண்மணி சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்று "ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண் இயக்குநர்' என்ற பெருமையைப் பெற்றார்.
இந்த ஆண்டு திரைப்பட இயக்கத்துக்கான ஆஸ்கர் விருதினை வென்ற "இரண்டாவது பெண்மணி' மற்றும் "முதல் ஆசியப் பெண்மணி' என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் க்ளோயி ஸாவ்.

"நோ மேட்லேண்ட்' படத்தை சிறப்பாக இயக்கிய க்ளோயி ஸாவ், அதில் நாயகியாக நடித்த "ஃப்ரான்சிஸ் மெக்டார்மண்ட்'டிற்கு மூன்றாவது முறையாகச் சிறந்த நடிகைக்கான ஆஸ்கரைப் பெற்றுத் தந்ததுடன், "நோ மேட்லேண்ட்'டிற்கு சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது கிடைக்கவும் காரணமாகியுள்ளார்.

"நோ மேட்லேண்ட்' திரைப்படத்தை தயாரித்திருப்பவர் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக விருது பெற்றிருக்கும் ஃப்ரான்சிஸ் மெக்டார்மண்ட்.

"கோல்டன் குளோப்ஸ்', "கிரிட்டிக்ஸ் சாய்ஸ்', "டைரக்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா', "பிரிட்டிஷ் அகாடமி பிலிம் அவார்ட்ஸ்' போன்ற விருதுகளைப் பெற்ற "நோ மேட்லேண்ட்' படத்திற்கு எப்படியாவது ஒரு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பட இயக்கம், நடிப்பு, சிறந்த படம் ஆக மூன்று ஆஸ்கர் விருதுகளை "நோ மேட்லேண்ட்' அள்ளிக் கொண்டது.
யார் இந்த க்ளோயி ஸாவ்?

சீனாவில் பிறந்த, க்ளோயி ஸாவ்வுக்கு பள்ளியில் படிக்கும் வரை ஆங்கிலம் தெரியாது. மேற்கத்திய கலாசாரத்தில் ஆர்வமாக இருந்த க்ளோயி ஸாவ் மேற்படிப்பிற்காக லண்டன் சென்றவர், தொடர்ந்து படிப்பிற்காக அமெரிக்கா சென்றார், பிறகு அங்கேயே தங்கிவிட்டார்.

முறையான படிப்பிற்குப் பிறகு பட இயக்கம், தயாரிப்பு குறித்தும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படித்தார். பயிற்சி பெற்றார்.

க்ளோயிக்கு 39 வயதாகிறது. க்ளோயி தயாரித்த குறும்படங்கள் பல்வேறு பட விழாக்களில் பாராட்டு பெற்றன. அவை தந்த உற்சாகத்தில் 2015 -இல் "சாங்க்ஸ் மை பிரதர்ஸ் தாட் மீ' படத்தை இயக்கினார். இரண்டாவது படம் "தி ரைடர்' 2017-இல் வெளியானது.

2020 -இல் வெளியான மூன்றாம் படமான "நோ மேட்லேண்ட்' மூலம் ஆஸ்கர் விருதை க்ளோயி வென்றுள்ளார். மூன்று படங்களுமே க்ளோயிக்கு பாராட்டுகளைப் பெற்றுக் கொடுத்தன.

அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சி காரணமாகப் வேலையை இழந்த ஒரு விதவைப் பெண் தனக்கு சொந்தமான பொருள்களை விற்றுவிட்டு வேனில் ஊர் ஊராகப் பயணிக்கும் கதைதான் "நோ மேட்லேண்ட்'. ஐந்து ஆண்டுகளில் மூன்று ஆங்கிலப் படங்களை க்ளோயி இயக்கியிருப்பது ஹாலிவுட்டைப் பொருத்தமட்டில் ஒரு சாதனைதான்..!

சீனப் பெண்மணி ஒருவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் கொண்டாடி மகிழ வேண்டிய சீனா, க்ளோயிக்கு ஆஸ்கர் விருது கிடைத்த செய்தியை இருட்டடிப்பு செய்துவிட்டது. சீன சமூக வலைதளங்களில் கூட க்ளோயி குறித்த செய்திகளை வரவிடாமல் சீனா கட்டுப்பாடுகளைப் போட்டிருந்தாலும், அதையும் மீறி க்ளோயியின் சீன ரசிகர்கள் சமூக வலைதளங்களில் க்ளோயி குறித்த செய்திகளைக் கசிய விட்டனர் என்பது தனிக்கதை.

சென்ற மார்ச் மாதம் "நோ மேட்லேண்ட்' படத்திற்கு "கோல்டன் குளோப்ஸ்' விருது வழங்கப்பட்ட போது "க்ளோயி, சீனாவின் பெருமை' என்று சீன ஊடகங்கள் பாராட்டின. அதற்குள் சீனாவில் சிலர் க்ளோயி "சீனாவில் எங்கு பார்த்தாலும் பொய்தான் பரவியுள்ளது' என்று அமெரிக்காவில் 2013- இல் ஒரு பேட்டியில் க்ளோயி சொல்லியதைத் தோண்டி எடுத்து வெளியிட... வந்தது வினை..!
க்ளோயியின் சீனா குறித்த விமர்சனம் வெளியானதைத் தொடர்ந்து "நோ மேட்லேண்ட்' படச் செய்திகள் எதுவும் சீன ஊடகங்களில் வெளியாகவில்லை. ஏப்ரல் 23-இல் "நோ மேட்லேண்ட்' சீனாவில் வெளியாகும் என்று சொல்லப்பட்டாலும், படம் இன்னமும் திரையிடப்படவில்லை.

கலிஃபோர்னியாவில் வசித்துவரும் க்ளோயி, தனது நண்பரும் தனது எல்லா திரைப்படங்களுக்கும் கேமராமேனாக இருந்த ஜோஷுவா ஜேம்ஸ் ரிச்சர்ட்ஸ் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

க்ளோயி இயக்கியிருக்கும் சாகசப் படமான "எட்டனல்ஸ்' இந்த ஆண்டு இறுதியில் வெளியாகுமாம்..!

ஆஸ்கர் விருதை ஏற்று பாரம்பரிய சீன உடை அணிந்து ஏற்பு உரை நிகழ்த்திய க்ளோயி தனது சீன வம்சாவளி குறித்தும், தந்தையுடன் சேர்ந்து சீன பழங் கவிதைகளை சொல்வதையும், பாடுவதையும் நினைவு கூர்ந்தார். க்ளோயிக்கு பிடித்த சீனக் கவிதை வரியான "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே..!' என்பதைச் சொல்லி, "சிக்கலான தருணங்களில் என்னை வழி நடத்தியது இந்த வரிகள்தான்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT