மகளிர்மணி

மாற்றம் தந்த  மாற்றங்கள்!

கோதை ஜோதிலட்சுமி

"வாழ்க்கை மலர்ப் படுக்கை அல்ல' என்பார்கள். குடும்பம் சமூகம் இரண்டாலும் நிராகரிக்கப்பட்டவர் என்றாலும் "வாழ்க்கை என்பது ஒரு கொண்டாட்டம்' என்று பார்ப்பவர் பத்மினி பிரகாஷ். பல கொடுமைகளுக்கு மத்தியில் சுயமரியாதை யோடும் நேர்மையோடும் வாழமுடிவெடுத்து நெருப்பாற்றில் நீந்திவந்தவர். 

பன்முகத்திறமைகொண்டவர், மானுட சமூகத்திற்குத் தன்னால் இயன்றதைச் செய்துவிட துடிப்போடு செயல்படுபவர். 

பத்மினி நடனக் கலைஞர் மட்டுமல்ல; அன்பான அன்னையும் கூட. காதலும் தாய்மையும் மிளிரும் அவரது செயல்களில்...

நம்மோடு அவரின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் பத்மினி பிரகாஷ்:

சிறுவயது நினைவுகள்...

கோவை மாநகரில் நடுத்தரக் குடும்பத்தில் மூன்று சகோதரர்களோடு பிறந்தேன். எனக்கு எட்டு வயது இருக்கும் பொழுது மனதளவில் மாற்றங்களை உணர ஆரம்பித்தேன். ஊர் ஒதுங்கி நின்றாலும் அம்மா அன்பைப் பொழிந்தார்கள். 

பள்ளிக்கூடத்தில் நடன வகுப்பில் சேர்வதற்காக அம்மாவிடம் மன்றாடி சேர்ந்தேன். பரதம் கற்றுக் கொண்டது என்னுடைய மனதுக்கு நெருக்கமாக ஆறுதலாக இருந்தது. பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் அம்மா காலமானார். 

அப்பா மற்றொரு திருமணம் செய்து கொண்டதோடு குடும்பம் என்னை நிராகரித்து விட்டது.  அடி, உதை, சித்ரவதை வீடற்றவள் ஆகி, ஊரை விட்டே நகர்ந்தேன். பசிக் கொடுமை, சென்ற இடத்தில் பிச்சை எடுப்பதைத் தவிர வேறு மார்க்கம் வாழ்வதற்கு இல்லை! 

அதையும் சுயமரியாதை கொண்ட மனம் ஏற்கவில்லை. என்னைப் பாதுகாத்துக் கொள்வதும் எளிதல்ல என்பதை உணர்ந்து வீடு திரும்பினேன். இன்னும் அதிக வசைகள்... கொடுமைகள்... விரட்டியடிப்பு. 

அம்மாவிடம் போய் விடுவதென்று மயானத்திற்கே சென்று அரளி விதைகளை அரைத்துத் தின்று விட்டு மயங்கினேன். அது வெட்டியானாக இருந்தவரின் கண்களில் பட அவர் காப்பாற்றி சித்தர் பீடம் ஆசிரமத்தில் சேர்த்தார். 

அது எனக்கு மறு ஜென்மம். பாதுகாப்பாய் உணர்ந்தேன். படிக்க வைத்தார்கள். தெரிந்த ஒரே விஷயம்... அம்மா படிக்க வைத்திருந்த நடனம் மட்டும். நடன ஆசிரியராகப் பணி கிடைத்தது. கெளரவமாக சொந்தக்காலில் நின்று வாழ்வது சாத்தியமானது. 

நடனம் தாண்டி அழகிப் போட்டி சின்னத்திரை நடிகை என்று எப்படி வளர்ந்தீர்கள்?

"தாய்' என்ற அமைப்பு எங்கள் திறமைகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து புகலிடமாக விளங்கியது. நாட்டியக் கலையே என் அடையாளம் என்பதால் பத்மினி என்று பெயர் வைத்தார்கள்; ஏற்றுக்கொண்டேன்.

அங்கே அடுத்தடுத்து பல வாய்ப்புகளைப் பெற்றேன்.  2007-ஆம் ஆண்டு திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் "மிஸ் தமிழ்நாடு' பட்டம் வென்றேன். 2009- ஆம் ஆண்டு "மிஸ் இந்தியா' பட்டம் வெல்லும் வாய்ப்புக் கிடைத்தது. நடிகை குஷ்பூ என் நடனத்தைப் பார்த்து அவர் தயாரித்த தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் வாய்ப்புத் தந்தார். பல கருத்தரங்குகள் நடன நிகழ்ச்சிகள் என்று சுறுசுறுப்பாக இயங்கினேன்.

சமூகப் பணிகளிலும் உங்கள் கவனம் எப்படி?

காவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயிற்சி வகுப்புகள், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என்று தொடர் நிகழ்ச்சிகள் வழங்கிக் கொண்டிருந்தேன். 

2014-இல் உச்சநீதிமன்றம் எங்களை மூன்றாம் பாலினத்தவர் என்று அங்கீகரித்தது. அதன்பின் வாய்ப்புகளின் வாசல் திறந்தது. அதுபற்றிய தகவல்களை ஆதரவற்று நிற்கும் சமூகத்திற்குத் தேவையான வழிகாட்டல்களைக் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்ற துடிப்பு. 

கலைவடிவம் எளிதில் மக்களைச் சென்றடையும் என்பதால் பல விழிப்புணர்வு நாடகங்களை என் மாணவர்களோடு சேர்ந்து நடத்துவதில் ஈடுபாடு, பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய், கர்ப்பப் பை புற்றுநோய் போன்றவற்றுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள் என்று சமூகப்பணிகளில் என்னைக் கரைத்துக் கொண்டேன். 

இன்றைக்கும் சமூக வலைதளம் வழியாக வாய்ப்புகளை அடையாளப்படுத்துவது, வாழ்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளைக் கண்டடைவது என்று என்னால் இயன்ற அளவுக்கு சமூகத்திற்குத் தொண்டாற்றுகிறேன்.

செய்தி வாசிப்பாளரானது எப்படி?  

தமிழ் படித்ததால் பட்டிமன்றங்கள், கருத்தரங்கங்களில் பங்கேற்றேன். சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் பேசுவதைப் பார்த்துவிட்டு தனியார் தொலைக்காட்சியின் தலைவர் எனக்கு செய்தி வாசிப்பாளர் வேலைகொடுத்தார். அதை ஏற்றுக் கொண்டு அதற்கு என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். இந்தியாவின் முதல் திருநங்கை செய்திவாசிப்பாளராக அங்கீகரிக்கப்பட்டேன். 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதன் முதலில் செய்தி வாசித்தேன். 

எனக்கான சுதந்திரத்தை அன்றைக்கு உணர்ந்தேன். உலகின் பல மொழிகளிலும் என் பெயரை முதல் செய்தி வாசிப்பாளர் என்று அறிவித்த நேரத்தில் அந்த விமர்சனங்கள் காணாமல் போய்விட்டன.

எழுத்தாளராகவும் அறியப்படுகிறீர்களே...  

ஆம்..!  நான் கடந்து வந்த பாதையை என்னுடைய வாழ்க்கையை சுயசரிதமாக "நெருப்பாற்றில் நீந்தி வந்தேன்' என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன். பலரும் பாராட்டி வரவேற்றனர். 

பல பத்திரிகைகளில் கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகிறேன். எழுத்துப் பணியில் எங்களைப் போல சிலரே இருக்கிறோம். கல்வி அவசியம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஈடுபட்டிருக்கிறோம். எங்கள் படைப்புகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்கினால் சமூகத்தில் புரிதல் சுலபமாகும்.  

கரோனா ஊரடங்கு காலத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

தமிழ் இலக்கியத்தில் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்கு உழைக்கிறேன். வீட்டில் அதிக நேரம் இருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அடுத்த ஆண்டில் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வை முடிக்க வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கிறேன்.  

குடும்பத் தலைவியாய்...

பதினெட்டு வயதில் கோவையில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். என்னோடு பள்ளியில் படித்தவர் பிரகாஷ் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொன்னார். 

எனக்கு நம்பிக்கை வரவில்லை. சில ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் எனக்கும் நம்பிக்கை வந்தது. மணம் செய்து கொண்டேன். அன்பானகணவர் எட்டு வயதில் அழகான ஆண் குழந்தை என்று குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டவள் இன்றைக்குக் குடும்பத் தலைவியாக நிறைவாக வாழ்கிறேன். 

சமூகத்திற்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

வாழ்க்கை கடினமானதாகவோ, துன்பங்கள் நிறைந்ததாகவோ இருக்கலாம். ஆனால், அதிலிருந்து விடுபடுவதற்கான ஒரே கருவி கல்வி மட்டுமே. கல்விதான் காற்றில் அலையும் துரும்பாய் இருந்த என் வாழ்வை மண்ணில் நிலை நிறுத்தியது. 

"கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' இந்த வாசகத்தை வைராக்கியமாக வைத்துக் கொண்டால் போதும். 

கல்வி பண்பாட்டை கற்றுத் தரும். பாதையைக் காட்டும். மனித சமூகத்திற்கு நலம் தரும். பிரச்னைகள் எல்லாருக்கும் உண்டு. அதை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதில் நமக்கான மதிப்பும் சிறப்பும் இருக்கின்றன. இப்படித்தான் வாழவேண்டும் என்று நேர்மையான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு "போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து' என வாழ்ந்தால் நிம்மதி, மரியாதை தானே தேடி வரும்..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருட வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

ஒசூா் அரசனட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை கருத்தரங்கு

சேலத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ. 6.55 லட்சம் மோசடி

குன்னூா் ரேலியா அணையில் நீா்மட்டம் சரிவு

SCROLL FOR NEXT