மகளிர்மணி

கதை சொல்லும் குறள்- 17: பிறர் உயர்வு கண்டு...!

கணேஷ் சுந்தரமூர்த்தி

""வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்'' என்று அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் அனைவரும் காமினியின் அறைக்குள் வந்து அவளை வாழ்த்திவிட்டுச் சென்றனர்.

காலையில்தான் போர்ட் மீட்டிங் முடிந்தது, காமினியை ஜெர்மனிக்கு இரண்டு ஆண்டுகள் கம்பெனியின் செலவிலேயே அனுப்பி, அங்கே வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் பெரிய லெதர் ஃபேக்டரியில், டிரைனிங் எடுக்க முடிவு செய்யப்பட்டது.

காமினிக்கு வயது இருபத்து இரண்டுதான், அதற்குள் எப்பேர்ப்பட்ட வாய்ப்பு வந்திருக்கிறது. "மைக்கேல் லெதர் எக்ஸ்போர்ட்டர்ஸ் அண்டு இம்போர்ட்டர்ஸ்' என்ற இந்தக் கம்பெனி, இந்தியாவில் பல கிளைகளைக் கொண்டது. தரமான தோல் உற்பத்தியாளர்கள் என்ற பெயரைப் பெற்றது மட்டுமல்லாமல், தோலினால் ஆன பொருட்களையும் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. தங்களுடைய தொழிற்சாலைகளுக்கு வேண்டிய உபகரணங்களைப் பிறநாடுகளிலிருந்து இறக்குமதியும் செய்கிறது.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மைக்கேலுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். அப்பாவிடம் இருந்து தொழிலைக் கற்று, அதை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். சென்னையில் இயங்கும் அவர்களுடைய கம்பெனி அகில உலக அளவில் பெயர் பெற்று விளங்குகிறது.

காமினி, மேற்குவங்கத்தில் உள்ள கவர்ன்மெண்ட் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்டு லெதர் டெக்னாலஜியில் படித்தவள். இங்கே வேலையில் சேர்ந்து, ஒரு வருடம்தான் ஆகிறது. ஆனால் வணிகமயமாக்குவதில் அதாவது தோலினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, நுகர்வோர்களிடம் எப்படிக் கொண்டுச் சேர்ப்பது என்கின்ற கலையில் சிறந்து விளங்கினாள். விளம்பரம், மைக்கேல் தோல் பொருட்களை எப்படி ஷோரூம்களில் அழகுற அடுக்கி வைப்பது, பருவத்திற்கு ஏற்றாற்போல தோல் உடைகளை வடிவமைப்பது, இது தவிர உபயோகப்படுத்தப்படும் தோலின் தரத்தை நிர்ணயிப்பது என்று காமினி காட்டிய திறமைகளைக் கண்டு, அவளை மேலும் பல தொழில்நுட்பங்களைக் கற்றுத்தேற, ஜெர்மனிக்கு அனுப்பி வைக்க மைக்கேல் முடிவு செய்திருந்தார்.

இவ்வளவு சிறிய வயதில் இப்படிப்பட்ட உயர்வைக் காமினி எட்டியது சக ஊழியர்கள் பலருக்குப் பொறாமையை உண்டு பண்ணியது. வயிற்றெரிச்சலை மறைத்துக் கொண்டு அவளுக்கு வாழ்த்து சொன்னவர்களில் ஸ்வாதி முதல் இடத்தில் நிற்கிறாள் என்றே சொல்லவேண்டும்.

வீட்டிற்கு வந்தவுடன், சிடுசிடுப்புடன் உலா வந்தாள். மூன்று வயது மகனைக் காரணம் எதுவும் பெரியதாக இல்லாமல் சுளீர் என்று அடித்தாள். கணினியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த கணவன் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கேட்டதற்கு,

""ஏன் உங்களுக்கு கை கால்கள் இல்லை? எழுந்துபோய் குடிங்க. நாள் பூரா உழைச்சுட்டு வரேன். கொஞ்சமாவது கருணை இருக்கா?'' என்றாள்.

""ஸ்வாதி என்ன ஆச்சு? நீ வந்ததிலே இருந்து பார்க்கிறேன், இப்படி மூடு அவுட் ஆகி இருக்கிறியே என்ன காரணம்?''

""ஆமாம், காரணத்தைச் சொன்னா உடனே சரி செஞ்சு விடுவீங்களாக்கும். எல்லாம் என் தலைவிதி. இப்போ கல்யாணம் வேண்டாம் என்றேன், உங்களுக்குக் கட்டி வெச்சுட்டாங்க. குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடலாம் என்றேன். அடம்புடிச்சி, குழந்தையைப் பெத்துக்க வெச்சுட்டீங்க''.

""அதனால என்ன இப்போ?''

""ஏன் சொல்ல மாட்டீங்க. முப்பது வயசுலேயே எல்லாம் முடிஞ்சிப் போயிடுச்சு. எனக்கு ஜூனியர் காமினி, அவளுக்கு ஜெர்மனி போகிற வாய்ப்பை எங்க கம்பெனி முதலாளி அள்ளிக் கொடுத்திருக்கான். பத்து வருஷம் அவன் கம்பெனியிலே குப்பை கொட்டியிருக்கேன். அதன் உயர்வுக்குப் பாடுபட்டிருக்கேன், என்னைக் கறிவேப்பிலைக் கொத்தாட்டம் தூக்கி எறிஞ்சுட்டாங்க. அவளை ரெண்டு வருஷத்திற்கு ஜெர்மனியில் டிரைனிங்குக்கு அனுப்பறாங்க''.

""ஸ்வாதி, ஏன் இப்படிப் பேசுற? போன வருஷம்தானே உனக்கு பதினைந்தாயிரம் ரூபாய் சம்பளத்திலே ஏற்றிக் கொடுத்தாங்க. அதுமட்டுமா? வீட்டு லோனுக்காக நீ விண்ணப்பித்ததை, மேலிடத்திலே ஒப்புதல் அளித்ததனாலே தானே, இதோ வேளச்சேரியில ரெண்டு கிரவுண்டுல சொந்த வீட்டைக் கட்டி அதிலே வசதியாக வாழறோம்''.

""நானும் நல்லா சம்பாதிக்கிறேன். நமக்கு என்ன கொறைச்சல் சொல்லு. காமினி கல்யாணம் ஆகாதவ, ரெண்டு வருஷம் போயிட்டு வந்து பிறகுகூடக் கல்யாணம் பண்ணிக்கலாம். உன்னை என்னால ரெண்டு வருஷம் பிரிந்து இருக்க முடியுமா. நம்ம பையனையும் என்னையும் விட்டுட்டு நீ மட்டும் ஜெர்மனிக்கு, அம்மாடி! என்னால நினைச்சே பார்க்க முடியலை''.

""சுரேஷ், இப்படியே நொண்டிச்சாக்கு சொல்லியே என்னை அடக்கிடுங்க. என் வயிறு பத்தி எரியுது. எனக்கு வரவேண்டிய சான்ûஸத் தட்டிப் பறிச்சவ நல்லாவே இருக்க மாட்டா''.

""இந்த ஐந்தடி ஐந்து அங்குல உடம்புக்குள்ளே இவ்வளவு வக்கிர புத்தியா!'' சுரேஷ் கல்லாகச் சமைந்தான்.

மாதங்கள் இரண்டு ஓடி மறைந்தன. காமினி அடுத்த வாரம் ஜெர்மனிக்குக் கிளம்ப இருந்தாள்.

""ஹேய் காமினி, என்ன இன்னைக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்க?'' காழ்ப்புணர்ச்சியுடன் ஸ்வாதி வினவினாள்.

""அதுவா ஸ்வாதி அக்கா, இன்றைக்குத்தான் எனக்கு விசா உறுதியாகி வந்திருக்கு. மேனேஜர் கூப்பிட்டுக் கொடுத்தார்''.

""கையிலே வேறு எதையோ வெச்சிருக்கியே''.

""நான் ஜெர்மனிக்குப் போற கம்பெனியோடு, வர்த்தக உறவுகளை வெச்சிக்கிறதுக்கான ஒப்புதலைக் கொண்ட ஃபைல், இப்பதான் கொடுத்தார், மேலிடத்திலே இருந்து வந்திருக்கு''.

""அப்படியா, ரொம்ப சந்தோஷம் காமினி. ஜெர்மனிக்கு போனா என்னையெல்லாம் மறந்துடாதே''.

""மறப்பேனா அக்கா, அப்பப்ப வாட்ஸ்அப்லே பேசிக்கலாம் அக்கா''.
காமினி தன் அறைக்குள் செல்ல, கதவு மூடிக்கொண்டது.

ஸ்வாதியின் வஞ்சக எண்ணங்களைத் தன்னகத்தே கொண்ட அவளின் மனக்கதவு திறந்துகொண்டது.

மாலை மணி ஐந்து இருக்கும், காமினி ஏதோ ஒரு வேலையாகத் தன் அறையை விட்டு வெளியே செல்வதை ஸ்வாதி கவனித்துவிட்டாள். காலையில், காமினி கையில் முக்கியமான ஃபைல், விசா மற்றும் பாஸ்போர்ட் அடங்கிய உறையை வைத்திருப்பதை அறிந்தவுடனே, யாரும் அறியாதபடி நான்கு மணி அளவில், சிசிடிவி கேமராக்கள் இயங்காத வண்ணம் அவற்றை செயல் இழக்கச் செய்துவிட்டாள்.

மின்னல் வேகத்தில் காமினியின் அறைக்குள் சென்று, அந்தப் பச்சை வண்ண ஃபைலையும்,, பாஸ்போர்ட் அடங்கிய உறையையும் எடுத்துக்கொண்டுத் தன் அறையை அடைந்து கதவைச் சாத்திக்கொண்டாள்.

இதயம் வெடித்துவிடுமோ என்கின்ற அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக அடித்துக் கொண்டது.

ஏற்கெனவே தயாராக வைத்திருந்த பையில், கொண்டு வந்ததை எல்லாம் போட்டு, அதைத் தோளில் மாட்டிக்கொண்டு விறுவிறுவென்று தெருவில் இறங்கி ஆட்டோவைப் பிடித்து, கடற்கரையை அடைந்தாள்.
அன்றைக்கு ஏனோ, கடலில் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. பேரலைகள் பொங்கிப் புறப்பட்டுக் கரையில் மோதிக்கொண்டிருந்தன. நன்றாக இருட்டும் வரைக் காத்திருந்தாள்.

பிறகு பெரியதாக ஒரு பள்ளத்தைத் தோண்டினாள். ஜன நடமாட்டம் அதிகம் இல்லாத இடமாக இருந்ததால் அவள் செயலை யாரும் கவனிக்கவில்லை. கையில் கொண்டு வந்ததை எல்லாம் கிழித்து அந்தப் பள்ளத்தில் போட்டாள். தன்னுடைய கைப்பையில் கொண்டு வந்திருந்த தீப்பெட்டியை எடுத்து, அதிலிருந்து ஒரு குச்சியை எடுத்துப் பற்றவைத்தாள். காற்றின் வேகம் தாளாமல் குச்சியின் தீ அணைந்து போனது. மொத்தம் பத்துக் குச்சிகள் கைவிட்டப் பிறகு, ஒரு குச்சி பற்றிக் கொண்டது, அது அணையாவண்ணம் தன் உள்ளங்கைகளைக் கொண்டு அரவணைத்துப் பள்ளத்தில் உள்ள காகிதங்கள் பற்றி எரியும்படி செய்தாள்.

""கைக்கடிகாரம் மணி இரவு எட்டு என்று காட்டியது. கைபேசியை எடுத்து சுரேஷிடம், குழந்தையைக் கிரஷ்ஷிலிருந்து பத்திரமாகக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டானா என்று கேட்கலாம் என்று நினைத்தபொழுது, அதில் சுரேஷ் பத்து கால்களுக்கு மேல் செய்திருப்பது தெரிந்தது. ஐயோ, போனை சைலண்ட்டில் வைத்திருந்தேனே, இவ்வளவு கால்கள் செய்திருக்கிறாரே, ஸ்வாதிக்கு அடிவயிறு ஜில்லிட்டுப் போனது. ஐயோ, குழந்தைக்கு ஏதாவது ஆகியிருக்குமா?

நெஞ்சு அடைப்பதுபோல ஆகிவிட்டது. ஒரு ஆட்டோவை பிடித்துக்கொண்டு வீட்டை அடைய, சந்து முனையில் திரும்பியபொழுது, பெரும் ஜனக்கூட்டம் அந்தத் தெருவை அடைத்துக் கொண்டு இருந்தது. தீயணைக்கும் வாகனங்கள் வரிசைகட்டி நின்று, கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க முயன்று கொண்டிருந்தன.

எரிவது யார் வீடு? ஸ்வாதியின் வீடாக அது இருந்தது. யார் செய்த புண்ணியமோ, அவள் கணவரும், குழந்தையும் தப்பிப் பிழைத்துவிட்டனர். மீதி எல்லாமே தீக்கிரையாகிவிட்டது.

ஸ்வாதியின் வீட்டில் குடியிருந்த திருமகள், அவள் செயல்கள் மீது வெறுப்புக்கொண்டு, தன் அக்காள் மூதேவிக்கு, ஸ்வாதியின் வீட்டை அடையாளம் காட்டிவிட்டாள்போலும்!

அவ்வித் தழுக்காறுடையானைச்செய்யவள்
தவ்வையைக் காட்டிவிடும்.

(குறள் எண்: 167)

பொருள் :

பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT