மகளிர்மணி

துணை ஆட்சியராகும் துப்புரவு பணியாளர்!

28th Jul 2021 06:00 AM | - ஸ்ரீதேவி குமரேசன்

ADVERTISEMENT

 

துப்புரவு பணியாளர் படிப்படியாக உயர் பதவிக்கு வருவது கூட சாத்தியம். ஆனால், மாவட்ட துணை ஆட்சியராக முடியுமா? முடியும் என்று நிருபித்திருக்கிறார் ஆஷா கந்தாரா. இவர், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் துப்புரவுப் பணியாளராக இருந்து தற்போது மாவட்ட துணை ஆட்சியராக மாறியிருக்கிறார்.
ஆஷாவின் வயது 40 . ஜோத்பூரை சேர்ந்தவர் . சமீபத்தில் வெளியான ராஜஸ்தான் நிர்வாகச் சேவை தேர்வில் தேர்ச்சி பெற்று அம்மாநில துணை ஆட்சியராகப் பணியாற்ற இருக்கிறார்.
1997-இல் இளம் வயதிலேயே ஆஷாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. சில ஆண்டுகள் நன்றாக சென்று கொண்டிருந்த இவரது திருமண வாழ்க்கையில், பிரச்னை ஏற்பட கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரின் கணவர் பிரிந்து சென்றுள்ளார். கணவன் கைவிட்ட நிலையில், இரண்டு குழந்தைகளுடன் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார் ஆஷா.
இந்நிலையில், ஆஷா குழந்தைகளுடன் தனது பிறந்தவீட்டில் தஞ்சம் புக, அவரது தந்தை, ஆஷாவை விட்ட படிப்பை மீண்டும் தொடரும்படி அறிவுறுத்தியுள்ளார். அதன்படியே ஆஷா மீண்டும் பட்டப்படிப்பை மேற்கொண்டு முடித்துள்ளார்.
அதன்பின், அரசுப்பணிக்கு தன்னை தயார்படுத்திக் கொண்ட ஆஷா, 2018 -ஆம் ஆண்டில் நடந்த ராஜஸ்தான் மாநில அரசுப்பணி தேர்வில் கலந்து கொண்டுள்ளார்.
இரண்டு கட்டங்களாக நடைபெற்ற அந்தத் தேர்வில் இவரும் பங்கேற்றார். இந்தநிலையில்தான் கரோனாத் தொற்று தீவிரமாக, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால், தேர்வு முடிவுகள் தாமதமானது. அதேநேரம், கரோனாவினால் அவரின் வருவாய் நிலையும் கேள்விக்குறியானது.

இதனால், மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த அவரது தாயாருடன் இணைந்து துப்பரவுப் பணிகளில் ஈடுபட முடிவு செய்தார். ஜோத்பூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக சேர்ந்து பணியாற்றினார்.
இந்நிலையில் சமீபத்தில் 2018-இல் அவர் எழுதிய தேர்வின் முடிவுகள் வெளியாகின. அதில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார் ஆஷா. இதனையடுத்து தற்போது மாவட்ட துணை ஆட்சியராகப் பணியாற்ற இருக்கிறார்.
முன்னதாக, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராக திட்டமிட்டு இருந்தார் ஆஷா. ஆனால் அவரின் வயது வரம்பு அதிகமாக இருக்க, அந்த முடிவை விடுத்து மாநில அரசுத் தேர்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.
தனிமைத்தாயாகவும், துப்புரவு பணியாளராகவும் தனக்கு நேர்ந்த விமர்சனங்களையும், கேலிகளையும் உந்துதலாக மாற்றி வெற்றி கண்டுள்ள ஆஷா கூறுகையில்,
""இது ஒரு கடினமான பயணம். இதில் நான் நிறைய சவால்களை எதிர்கொண்டேன். இப்போது நான் ஒரு நிலையில் இருப்பதாகக் கருதுகிறேன். வறியவர்களுக்கும் அநீதிக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கும் ஏதாவது செய்ய விரும்பு
கிறேன். அர்ப்பணிப்பு மற்றும் மன உறுதியுடன் முயன்றால் எந்த சவாலும் பெரிதானது அல்ல என்பதற்கு நானே தற்போது சான்று'' என்கிறார் ஆஷா.

ADVERTISEMENT

Tags : magaliarmani Deputy Collector
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT