மகளிர்மணி

தொழில்நுட்பம்... தெய்வீகம்... திருப்பாவை!

ஜி. அசோக்


""மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.....''

- என விரியும் திருப்பாவை பாசுர முதல் பாடல் இந்த முறை சுஹாசினி, அனுஹாசன், ரேவதி உள்ளிட்ட நடிகைகளின் குரலில் ஒலிக்கப் போகிறது.

சுஹாசினி, உமா பத்மநாபன், ரேவதி, நித்யா மேனன், ரம்யா நம்பீசன், அனுஹாசன், ஷோபனா, கனிகா, ஜெயஸ்ரீ என தொழில் ரீதி பாடகிகளாக இல்லாத இவர்கள் இணைந்து திருப்பாவையின் முதல் பாசுரத்தை பாடி அசத்தியுள்ளனர்.

இது குறித்து படப்பிடிப்பில் பரபரப்பாக இயங்கி வரும் ரம்யா நம்பீசனை வாட்ஸ்அப் காலில் தொடர்பு கொண்டு பேசினோம்...

""இது ஒரு கூட்டு முயற்சி. சுஹாசினிதான் இது குறித்து முதலில் சொன்னார். அவர் சொன்னதுமே, ஆவல் உண்டாகி விட்டது. ஆனால், எல்லோரும் ஒன்று சேர முடியாத சமயம் இது. ஆங்காங்கே இருந்துக் கொண்டு பாடுவதும் சாத்தியமில்லை. இருந்தாலும், இதை சரியாக செய்து முடிக்க வேண்டும் என நினைத்தோம். நல்ல எண்ணம் ஒன்றாகும் போது எதுவும் சாத்தியமாகும் என்பார்கள். அதுதான் இது.

பாடுவதில் அவரவர்களுக்கு ஒரு பாணி இருக்கும். அப்படி எதுவும் இல்லாமல் எட்டு நடிகைகள் இணைந்து பாடியிருக்கிறோம் என்பதுதான் இதன் சிறப்பு. தொலைபேசிதான் இப்போது எல்லோருக்கும் உலகம். அதனால் பாடலை தொலைபேசி வாயிலாக பதிவு செய்து விடலாம் என முடிவு எடுத்தோம்.

இவற்றை அற்புதமாக அமைத்து தொகுத்தவர் சுபஸ்ரீ தணிகாசலம். நான் பாட வேண்டிய வரிகளின் ரஃப் டிராக்கை எனக்கு அனுப்பி வைத்தார். கேட்டவுடனே மனசுக்குள் ஒரு தெய்வீக உணர்வு. உடனே ஓ.கே. சொல்லிவிட்டேன். இப்படித்தான் இந்தப் பாடல் பதிவானது. எப்படி வந்திருக்கிறது என்பதை கேட்க எல்லோர் போலவும் நானும் ஆவலாக இருக்கிறேன்.'' என்றார் ரம்யா நம்பீசன்.

"" பல மாதங்களாக மூடி இருந்த ஸ்டூடியோவுக்குள் போய் பாடுவது பாதுகாப்பு கிடையாது. என்ன செய்யப் போறீங்க?' என்று கேட்டேன். "நாம நெனைச்சா முடியும்' என்று தைரியம் சொன்னார் சுபஸ்ரீ. மைக், லேப்டாப் என்று பாட்டை ரெக்கார்டிங் செய்வதற்கான உபகரணங்களையெல்லாம் என் வீட்டுக்கு டெலிவரி செய்ய வைத்தார். அப்புறம், விடியோ காலில் அதையெல்லாம் எப்படி செட் செய்வது, எந்த ஒயரை எங்கே இணைப்பது என்று, மைக்கை எப்படி வைப்பது என எல்லாவற்றையும் சொல்லி கொடுத்தார்.

அவர் சொன்னதையெல்லாம் தனி ஆளாக செய்து, நான் ஆன்லைனில் பாட, சென்னையில் ஓரிடத்தில் இருந்து அவர் எல்லாவற்றையும் தொகுத்தார். கடவுளே... மாடர்ன் டெக்னாலஜியும் தெய்வீகமும் சேர்ந்த அழகான அனுபவம் இது.

இந்த அனுபவத்தை ஆண்டாளின் அருளாகத்தான் நான் பார்க்கிறேன்'' சிலிர்ப்புடன் பேச்சை முடித்தார் நடிகை ரேவதி.

இந்த முயற்சிக்கு நடிகை சுஹாசினியின் பங்கு முக்கியம். ஒவ்வொருவரிடமும் பேசியது முதல், அனைவரையும் இணைத்தது இவரின் பெரும் பணி. அவர் சொல்கிறார்:

""தென்னிந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை இன்றைய இளைய சமுதாயத்துக்கு மறு அறிமுகம் செய்யும் முயற்சியாக, கடந்த வருடம் ரவிவர்மாவின் ஓவியங்களை நம் தென்னிந்திய நடிகைகளின் படங்களுடன் உருவாக்கியதைப் போலவே, இந்த வருடம் மாற்று முயற்சி ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினோம்.

அப்போதுதான் திருப்பாவை பாடல் திட்டம் வந்தது. தொழில் ரீதி பாடகிகள் இல்லாமல் நடிகைகள் பாடினால் இந்த முயற்சி கவனம் கொள்ளும் என எண்ணினோம்.

அப்படித்தான் இந்த முயற்சி இப்போது கைக்கு வந்து சேர்ந்துள்ளது. ஒரு சினிமாவுக்கு எப்படி உழைப்போமோ அது மாதிரி ஒவ்வொருத்தரும் தனி முயற்சி எடுத்து இதை செய்து முடித்தோம். இது இத்தோடு நின்று விடாது. அடுத்த வருடம் இன்னொரு திருப்பாவை பாசுரம். அது இன்னும் பிரம்மாண்டமாக, வித்தியாசமான முயற்சிகளில் வரவுள்ளது'' என அடுத்த திட்டத்தை கையில் வைத்திருக்கிறார் சுஹாசினி.

""இந்த மாற்று முயற்சிக்கு தனது தனித்துவ ஒளிப்பதிவு மூலம் மெருகேற்றியுள்ளார் பகத்.

அவர் கூறுகிறார்:

""தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடிகைகள் முத்திரைப் பதித்து வருகின்றனர். சிறந்த நடிப்பு, நடனம், வசனம், இயக்கம் எனப் பல பிரிவுகளில் நடிகைகள், ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிடுகின்றனர்.

தமிழ் இலக்கியத்தின் உச்ச சாதனைகளில் ஒன்றான திருப்பாவை பாசுர பாடலை தனித்துவமாக கொண்டு வந்திருக்கிறோம். பாடலின் வரிகளுக்கேற்ப பல இசை வடிவங்களையும் ஒன்றாய்க் கோர்த்து ஆன்மிக உலகம்பெருமை கொள்ளும் வகையில் அற்புதமான இசை மாலையாக உருவாகி இருக்கிறது
இப்பாடல்.

பாடல் காட்சியின் முக்கிய அங்கமாக நடிகை ஷோபனாவின் நடனம் இருக்கும். அவரின் நடனம் என்பது எப்போதுமே சிறப்பு. அதுவும் ஆண்டாளின் திருப்பாவை பாசுர பாடலுக்கு அவர் தரும் நளினங்கள் வெகு சிறப்பானது. அதை நீங்கள் பார்க்கும் போது உணர்வீர்கள்.

இசை, நடனம், ஒளிப்பதிவு இவற்றோடு திருப்பாவை பாசுரம் வரிகள் உற்சாகமாக இணையும்போது, எப்படி இத்தனை வகைகளும் வேறுபாடின்றி இவ்வளவு எளிதாக ஒன்றுடன் ஒன்று கலக்க முடியும் என்ற வியப்பை அளிக்கும். முழுமை அடைந்து நம் இதயத்தையும், கண்களையும் நிறைக்கும்'' என்கிறார் ஒளிப்பதிவாளர் பகத்.""இந்தப் பாடலைப் பாடியதால் புதிய உற்சாகம் பெற்றேன்'' என்கிறார் நடிகை ஜெயஸ்ரீ. இசை, குரலில் பல வடிவங்களை இணைத்ததைப் போல, பல வகை நடனங்களையும் கலந்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள் விடியோவில். கனிகாவும் பரத நாட்டியம் தெரிந்தவர் என்பதால் அவரும் தன் பங்குக்கு நடனத்தை வழங்கியிருக்கிறார். விடியோவில் ஒன்றாக பாடுவது, ஒன்றாக நடனம் ஆடுவது என்று பாடலின் வரிகளுக்கேற்ப யோசித்துச் செய்திருக்கிறார்கள்.

கமல்ஹாசன், மாதவன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மூவரும் இதை முழு இசைத் தொகுப்பாக விரைவில் வெளியிடஇருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT