மகளிர்மணி

தாளமும் லயமும் இணைந்தது கோலம்!

கோதை ஜோதிலட்சுமி


""தென் தமிழகத்தில் செங்கோட்டை என்ற ஊரில் பிறந்து வளர்ந்தேன். சிறு வயதில் கோலம் போட ஆரம்பித்தேன். அன்றாடம் எங்கள் ஊரின் ஏழு தெருக்களிலும் போடப்பட்டிருக்கும் புதிய கோலங்களை நோட்டில் வரைந்துகொள்வேன். பின்னர், திருவனந்தபுரத்தில் இருந்தபோது அத்தப்பூக் கோலங்களை ஆசையாய் பார்த்து கற்றுக்கொண்டேன். மும்பையில் சில ஆண்டுகள் இருந்த போது ரங்கோலி என்ற வண்ணமயமான கோலங்களை கற்றுக்கொண்டு நிறைய கோலமிட்டிருக்கிறேன். அன்றாடம் விதவிதமான கோலங்களை வாசலில் போடுவேன். கோலப்போட்டிகளில் ஆண்டுதோறும் பரிசுகளை வென்றிருக்கிறேன். சில ஆண்டுகளாய் பல இடங்களிலும் நடைபெறும் கோலப் போட்டிகளுக்கு நடுவராக இருந்து வருகிறேன். கர்நாடக சங்கீதத்தை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் போது தாளமும் லயமும் கோலம் போடுவதில் எப்படி ஒத்து வருகின்றன என்றும் சொல்லிக்கொடுக்கிறேன்'' என்கிறார் கோலம் குறித்து ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் வாங்கியிருக்கும் கோலம் காயத்ரி. அவர் மேலும் கூறியதாவது:

கோலம் போட கற்றுக்கொள்வதற்காகவே உங்களைத் தேடி வருகிறார்களாமே...

உண்மை தான். பல வகையான கோலங்கள் இருக்கின்றன. கோலமிடுவதில் ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒரு முறை இருக்கிறது. அவற்றில் சிலவற்றை முதலில் நான் தேடிச் சென்று சிலரோடு தங்கியிருந்து படித்திருக்கிறேன். இப்போது என் வீட்டில் என்னோடு இருந்து நான் கோலமிடுவதைப் பார்த்து பலரும் கற்றுக் கொள்கிறார்கள்.

குறிப்பாக சமீபத்தில் ஜப்பானிலிருந்து வந்து நவோ யமாஷிதா என்ற பெண் கோலமிடக் கற்றுக் கொண்டாள். குருகுல வாசம்போல அதிகாலை முதல் என்னோடு இருந்து கோலமிடுவதற்கு கற்றுக் கொண்டதோடு அதன் பயன்கள் வகைகள் என பலவற்றையும் நுட்பமாக கற்றுக்கொண்டாள். மன அமைதிக்கு கோலமிடுதல் எப்படியெல்லாம் பயன்படுகிறது என்பதை இங்கே இந்தியாவில் கற்றுக் கொண்டு ஜப்பானில் அவளது அன்றாட வாழ்வில் செயல்படுத்துகிறாள்.
என்னுடைய கோலம் ஒன்றினை இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நன்றி சொல்வதற்கான கொண்டாட்ட நாளின் வாழ்த்து அட்டையில் பயன்படுத்துகிறார்கள். இப்படி கோலமும் அதனைக் கற்றுக் கொள்வதற்கான ஆர்வமும் உலகம் முழுவதும் இருக்கிறது. தேடி வந்து கற்றுக்கொண்டு பயன்பெறுகிறார்கள்.

கோலத்திற்கான விளக்கம் தத்துவம் என்ன?

கோலம் என்பது புள்ளி என்ற பிரச்னைகளைத் தந்துவிட்டு கோடுகள் என்ற வழியில் தீர்வுகளைக் காண்பது. சரியான முறையில் பொறுமையும் நிதானமுமாய் புள்ளிகளை இணைக்கும் முறை மனதில் தெளிவையும் தீர்வு நோக்கி நகரும் சாதுர்யத்தையும் தருகிறது.

நம் நாட்டில் பெண்களுக்கு உடல் மனம் புத்தி மூன்றிற்கும் ஒருங்கே தரப்பட்ட சரியான பயிற்சி. கோல மாவினை கையில் பிடிக்கும் முறையே தியானப் பயிற்சியில் கற்றுத் தரப்படும் முத்திரைகள் தான். பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் இரண்டிற்கும் இடையில் கோல மாவினைப் பிடித்துக் கொண்டு விடும் முறையில் சின்முத்திரை இருப்பதை கவனியுங்கள். ஒரு ஜெபமாலையை வைத்துக் கொண்டு ஜபம் செய்வதான முறையை உணர்வீர்கள். குனிந்து கோலமிடும் பொழுது மூலாதாரச் சக்கரம் தூண்டப்படுகிறது. நீங்கள் குனியும் பொழுது வயிறு அழுந்தி சுவாசக் காற்று வெளியிடப்படுகிறது. கோலமாவினை எடுப்பதற்காக நிமிரும் பொழுது மூச்சை உள்ளிழுப்பீர்கள். தொடர்ந்து கவனம் முழுவதையும் கோலம் என்ற ஒற்றை நிலையில் வைத்து மூச்சை உள்ளிழுப்பதும் வெளியிடுவதும் சீராக நடைபெறும். அதே நேரத்தில் உங்கள் வலது கை சின்முத்திரை நிலையில் இருக்கும். சிறந்த யோகா பயிற்சி என்பதோடு ஆழ்ந்த தியான நிலையும் அப்போது வாய்க்கிறது கோலமிடுவதும் ஒரு தெய்வீக அனுபவம் என்று இதனால் தான் சொல்கிறோம்.

கோலம் எப்படி கலாசாரத்தின் அம்சமாகிறது?

கோலம் இடும் முறை ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபடுகிறது. நகரத்தார் கோலங்கள் புள்ளியை சுற்றி அமைந்திருக்கும். திருநெல்வேலிக்காரர்கள் புள்ளிகளை இணைத்து கோலமிடுவார்கள். வைணவ சம்பிரதாயத்தார் டைமன் வடிவத்தை ஆரம்பமாகக் கொண்டு தங்கள் கற்பனைக்கேற்ப கோலத்தை வரைவார்கள். சைவர்கள் சதுர வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு கோலமிடுகிறார்கள். ஒரு வீட்டின் கோலத்தைக் கொண்டே அந்த வீட்டின் மனிதர்களை, அவர்களின் கலாசாரத்தை சொல்லிவிடலாம்.

குழந்தை பிறந்தவுடன் தொட்டில் கோலத்தை வாசலில் இடுவார்கள். இது அந்த வீட்டில் குழந்தை பிறந்ததை அறிவிக்கும் முறை. இன்றும் நிறைய கிராமங்களில் இந்த முறை வழக்கத்தில் இருக்கிறது. ரதசப்தமி நாளில் தேர்க்கோலம், வெள்ளிக்கிழமைகளில் கன்யா கோலம் கார்த்திகை நாளில் தீபக் கோலம் என்று அந்தந்தக் கொண்டாட்டங்களுக்கு ஏற்ற படி கோலங்கள் கொட்டிவைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

கோலங்கள் இறைவனோடு தொடர்புடையனவா?

ஆமாம். இறைவனை வழிபடுவதற்கும் பூஜிப்பதற்கும் பல முறைகள் இருக்கிறதல்லவா? தூப தீபங்கள் காட்டி வழிபடுவது, மலர்களை இறைவனுக்கு சமர்ப்பிப்பது, இசையால் ஆராதிப்பது என்ற வரிசையில் ஓவிய ஆராதனை அதாவது ஓவியம் சமர்ப்பித்து வழிபடுவது என்பதன் வடிவமாகவே கோலமிடுவதை வைத்திருக்கிறோம். ஆலயமோ, வீடோ எந்த ஒரு வழிபாடும் கோலம் இல்லாமல் செய்யப்படுவதில்லை.

தெய்வத்தின் முன் இடப்படும் கோலங்கள், பூஜை அறை கோலங்கள் என்றே இருக்கின்றன. தெய்வங்களை ஆவாஹனம் செய்து இருத்தும் எந்திர கோலங்களும் இருக்கின்றன. ஸ்ரீ சக்ர கோலம், ஐஸ்வர்ய கோலம், ஹ்ருதய கமல கோலம், நவகிரஹ கோலம் இவையெல்லாம் எந்திரக் கோலங்கள். இவற்றை எதற்காகவும் வாசலில் இடுவதில்லை.

கேரளத்தில் கட்டக்கோலங்கள் என்று பகவதி பூஜைக்கென கட்டங்கட்டமாக விரித்து பெரிய கோலங்களை இடுவார்கள். இந்தக் கட்டங்கள் குங்குமம் மஞ்சள் அரிசிமாவு ஆகிய இயற்கை வர்ணங்கள் கொண்டு மட்டுமே இடப்படும். வெறும் கட்டங்கள் தானே என்று தோன்றலாம். ஆனால், பருந்துப் பார்வையில் பார்த்தால் அதிலே அம்பிகை வடிவத்தையே பார்க்க முடியும்.

கோலத்தின் அடிப்படை வடிவங்கள் என்னென்ன?

கோலம் சமச்சீரான வடிவத்தைக் கொண்டது. ஒரு கட்டடக்கலையின் நேர்த்தி கோலத்திலும் உண்டு. அதற்கான அடிப்படை வடிவங்கள் ஏழு தான். இயற்கையின் படைப்பில். சப்த ரிஷிகள், சப்த கன்னியர், சப்தஸ்வரங்கள், சப்த சமுத்திரங்கள் என்று இருப்பதைப் போல கோலத்திலும் ஏழு வடிவங்கள் தான் இருக்கின்றன. புள்ளி, கோடு, கோபத், அர்த்தவர்துல், பூர்ணவர்துல், வர்தினி, சரல்ரேகா என்ற வடிவங்களுக்குள் தான் எந்த வகைக் கோலமும் வரும்.

நம் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அதிகாலையிலேயே கூட்டி சுத்தம் செய்து கோலமிடுவது எதிர்மறையானவற்றை விலக்கி நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்துவது. அதிகாலை பிரம்மமுகூர்த்தத்தில் ஓசோன் கிடைக்கும் நேரத்தில் அதனை ஏற்பது. அதனை நம் பெண்கள் அன்றாட வாழ்வின் பகுதியாக மீண்டும் கொண்டு வந்துவிட்டால் ஆரோக்கியமான சமூகத்தையே நாம் கொண்டு வந்துவிட முடியும்.

கற்றலில் கோலம் என்பதை எப்படி செயல்படுத்தினீர்கள்?

2008-ஆம் ஆண்டு முதல் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான பயிற்சியில் கோலத்தைப் பயன்படுத்தினோம். ஒரு விரலால் இடும் கோலம் அதிலே கண், கை, மனம் ஒருமை அவர்களுக்கு பழக்கப்படுத்தினோம், பின்னர், இரண்டு விரல்கள், மூன்று விரல்கள் என பயிற்சி கொடுத்தோம். கோலம் எண்ணங்களை பிரதிபலிக்கிறது. இதனையே உளவியல் ரீதியான பயிற்சிக்கு பயன்படுத்த முடியும். இசைப் பயிற்சி தரும் போது ஸ்வர வரிசையில் ஏற்ற இறக்கங்களை உணர்ந்து கற்றுக்கொள்வதற்கும் இது உதவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT