மகளிர்மணி

கதை சொல்லும் குறள்- 16: நிலம் போல...!

சாந்தகுமாரி சிவகடாட்சம்

"வீல்' என்று சத்தம் போட்டு அந்தக் குழந்தை அழத் தொடங்கியது.

அந்த ஆபரேஷன் தியேட்டரில் பணியில் ஈடுபட்டிருந்த அனைவரின் முகத்திலும் புன்னகை விரியத் தொடங்கியது.

குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த குளிர்காற்றையும் மீறி ஜெயமாலாவின் நெற்றியில் பொடிப் பொடியாகப் பூத்திருந்த வியர்வையை, நர்ஸ் ஒருத்தி ஒரு துண்டைக் கொண்டு ஒற்றி எடுத்தாள்.

தன் கையுறைகளைக் கழற்றிப் பேசினில் போட்ட ஜெயமாலாவை, ஜூனியர் டாக்டர்ஸ் சூழ்ந்து கொண்டனர்.

""வாழ்த்துகள் ஜெயமாலா'' என்று மருத்துவர் சங்கரி, ஜெயமாலாவின் கையைப் பிடித்துக் குலுக்க, ஜூனியர்கள் ""வாழ்த்துகள் மேடம்'' என்று கோரஸாகக் குரல் கொடுத்தனர்.

ஓய்வு எடுக்கும் அறையில் சூடான டீயைச் சுவைத்து குடிக்கத் தொடங்கினாள் ஜெயமாலா. கைக்கடிகாரம் நள்ளிரவு மணி ஒன்று என்று காட்டிக் கொண்டிருந்தது.

சென்னை மாநகரத்தின், விரல்விட்டு எண்ணக்கூடிய தலைசிறந்த மகப்பேறு மருத்துவர்களில், ஜெயமாலாவும் ஒருவர். வயது என்னமோ நாற்பதுதான், அதற்குள் இப்படிப் புகழ் கிடைக்கிறது என்றால், கடின உழைப்பும், மிகச் சிக்கலான கேஸ்கள் என்றாலும் இவளின் கைபட்டால் சுகப்பிரசவம்தான் என்று எண்ணும்படியான கைராசியும், நோயாளிகளிடமு ம், கர்ப்பிணிகளிடமும் காட்டும் பரிவும், பேசும் அன்பான வார்த்தைகளும், ஜெயமாலா சென்றால் சக்ஸஸ்தான் என்கின்ற நல்லபேரை அவளுக்குக் கொடுத்திருந்தன. அவளுடைய அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கவே சில வாரங்கள் காத்திருக்க வேண்டும் என்கின்ற நிலை. ஆனாலும், அவசர கேஸ் என்றால் முதலில் நிற்பவள் அவளாகத்தான் இருப்பாள்.

அன்று வழக்கப்படி ஜெயமாலா தன்னுடைய பட்டியலில் இருக்கும் பேஷண்டுகளை எல்லாம் பார்த்து முடிக்கும் பொழுதே மணி இரவு பத்தைத் தாண்டிவிட்டது. ஜெயமாலாவின் கணவர் பிரபுவும் ஒரு மருத்துவர்தான். குழந்தைநல மருத்துவரான அவரும் தன் தொழிலில் சிறந்து விளங்கினார். ஆறு கிரவுண்டு இடத்தில் இவர்களுடைய வீடு பின்புறத்தை ஆக்ரமித்துக் கொண்டிருக்க, முன்புறத்தில் "தாய்சேய் நல மருத்துவமனை‘ என்ற பெயர்ப்பலகையைத் தாங்கிய, முப்பது படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனை கொலுவிருந்தது.

வலதுபுறம், ஜெயமாலாவின் கன்சல்டிங் அறையும், இடதுபுறம் பிரபுவின் ஆலோசனை அறையும் இருந்தது. பிரசவம் பார்க்கும் அறை, ஆபரேஷன் தியேட்டர், பார்மஸி, ஆய்வுக்கூடம் என்று அனைத்தும் இருக்கின்றன.

ஜெயமாலாவின் உடம்பில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அவளுடைய ஒரே பெண் ஷாலினிக்கு நாளைக்கு அரைப்பரீட்சை தொடங்குகிறது. நான்காம் கிளாஸ் படிக்கும் பத்து வயதுச் சிறுமிக்கு நாளை கணக்குப் பரீட்சை. அவளுக்கு சில கணக்குகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். பின்புறத்தில் இருக்கும் வீட்டை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கிய சமயத்தில், கைபேசி அலறியது.

எதிர்த்திசையில் பேசியவர், இவள் வயதையொத்த மற்றொரு மகப்பேறு மருத்துவர்.

"'ஜெயமாலா, ஒரு எமர்ஜென்ஸி, எப்படி ஹேண்டில் பண்றதுன்னு எனக்குக் குழப்பமாக இருக்கு. பேஷண்ட்டுக்கு சுகப்பிரசவத்திற்கு வழியில்லை என்று சிசேரியன் செய்ய முற்பட்டோம், கத்தியை வைக்கும் முன்னமே ஃபிட்ஸ் வந்துடுச்சி,  கொஞ்சம் வரியா. நீ இருந்தால் தைரியமாக இருக்கும்''.

""பதறாதே சங்கரி, இதோ நான் புறப்பட்டு வரேன்''.

தன் கணவன் பிரபுவைக் கைபேசியில் தொடர்பு கொண்டாள்.

""ப்ளீஸ் பிரபு, சங்கரிக்கு ஏதோ எமர்ஜென்சியாம், என்னைக் கூப்பிடறா, பேஷண்டுக்கு ஃபிட்ஸாம், நீங்க உங்க பிராக்டீஸை முடிச்ச உடன், வீட்டுக்குப் போய் ஷாலினிக்குக் கொஞ்சம் கணக்கு சொல்லிக் கொடுங்க. நான் வர நடுநிசியாகும் போல இருக்கு. அவளைச் சீக்கிரம் தூங்க வெச்சிடுங்க''.

""ஜெயமாலா, டிரைவர் கூட போயிட்டானே''.

""அதனாலே என்ன, நான் காரை ஓட்டிக்கிட்டுப் போயிடறேன். நீங்க வீணா கவலைப்படாதீங்க. ஷாலினியைப் பாத்துக்குங்க அதுபோதும். சமையல்காரம்மா மரகதம் கொடுக்கிற பாலை அவள் குடிக்கிறாளான்னு செக் பண்ணுங்க''.

ஜெயமாலா தியேட்டருக்குள் செல்வதற்கான உடையை மாற்றிக் கொள்ளும் பொழுதே, பெரியதாக "இடி' இடிக்கும் சத்தம் கேட்டது. பிறகு மழை கொட்டத் தொடங்கியது.

ஒருவழியாகப் பிரசவம் நல்லமுறையில் நடந்தது. ஆண் குழந்தை, தாயும் சேயும் நலம் என்பதைத் தியேட்டருக்கு வெளியே தவித்து நின்ற உறவினர்களிடம் சொல்லிவிட்டு, ஓய்வு அறைக்கு ஜெயமாலா வந்து, டீயைக் குடித்துக் கொண்டு இருந்தாள்.

""ஜெயமாலா, நீ ரொம்ப உயர்ந்தவள்டி. நான் கூப்பிட்டதும் ஓடி வந்து இரண்டு உயிர்களைக் காப்பாத்திட்ட, நன்றி சொல்ல வார்த்தைகளைத் தேடுகிறேன்'' என்று தன் தோழியை சங்கரி கட்டித் தழுவிக் கொண்டாள்.

""நான் என் கடமையைத்தான் செஞ்சேன். சரி கிளம்பறேன்''.

""ஜெயமாலா, சரியான மழை பெய்யுது. தெருவெல்லாம் வெள்ளமாம். எப்படித் தனியா காரை ஓட்டிக்கிட்டுப் போவே?''

""அட நீ வேறே. இந்த ஆழ்வார்ப்பேட்டையிலிருந்து, பனகல் பார்க்குக்குக் கார்லே போகப் பத்து நிமிஷம் கூட ஆகாது. கவலைப்படாதே.  நான் போய்ச் சேர்ந்ததும் உனக்குப் போன் செய்றேன்''.

சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாளே தவிர, காரை எடுத்துக்கொண்டு வெளியே வந்தபொழுதுதான் நிலைமையின் தீவிரம் புரிந்தது. ரோட்டில், "ஈ, காக்கா கூட இல்லை' என்பார்களே அப்படிப்பட்ட நிலைமை, கண்களுக்கு எட்டிய தூரம் வரை யாருமே இல்லை. 

டயோட்டா காரோ முன்னேறிச் செல்ல முனங்கியது. எப்படியோ தேனாம்பேட்டை சிக்னலைத் தாண்டி எல்லை அம்மன் கோயிலைக் கடக்கும்பொழுது கார், சடக்கென்று நின்றும்விட்டது.

"ஐயோ, கார்ப்பரேட்டருக்குள்ளே தண்ணீர் புகுந்துடுச்சோ?' என்ற ஜெயமாலாவின் மனம் பதறியது. காரை ஸ்டார்ட் செய்யப் பலமுறை முயன்றும் தோற்றுப்போனாள். 

சரி, கைபேசியில் கணவரை அழைத்து, வேறு காரை எடுத்துக் கொண்டு வரச் சொல்லலாமா, என்று யோசித்த ஜெயமாலா  மறுகணமே, அவளுடைய மனம் அந்த யோசனையை நிராகரித்தது. 

அந்தக் காரும், தண்ணீரில் சிக்கி நின்றுவிட்டால், ஷாலினி தனியாக இருப்பாளே. இடிச்சத்தம் என்றால் அவளுக்கு அப்படி ஒரு பயம். பெற்றோரைக் காணாமல் அவள் அழுவாள். காலையில் பரீட்சை வேறு இருக்கிறது. என்ன செய்வது என்று யோசித்து முடிக்கும் முன்னர், ஓர் ஆட்டோ தொலைவில் வருவதைப் பார்த்தாள். கடவுளே, அது காலியாக இருக்கவேண்டுமே, என்று அவள் உள்ளம் பிரார்த்தித்தது.

ஆட்டோவும் நெருங்கியது. ஜெயமாலா காரின் அருகே வந்து நின்றது. காரின் கதவைத் திறந்துகொண்டு ஜெயமாலா இறங்கினாள்.

""என்னம்மா, காரு நின்னுடுச்சா. எங்கே போவனும் சொல்லு''.

பனகல் பார்க்கில், தன் வீடு இருக்கும் தெருவின் பெயரைச் சொன்னாள்.

""சரி ஏறு, ஐநூறு ரூபாய் கொடுத்துடு''

""என்னது ஐநூறு ரூபாயா?''  என்றபடி காரைப் பூட்டிவிட்டு, தெப்பலாக நனைந்தபடி ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள்.

அந்த ஆட்டோக்காரன் குடித்திருந்தான் என்பது, குப்பென்று ஆட்டோவிற்குள் பரவி இருந்த நெடியிலிருந்து புரிந்தது.

ஜெயமாலாவின் மனம் பிரார்த்தனையில் ஈடுபட்டது. என்னென்னமோ உளறிக்கொண்டு, வண்டியை ஓட்டினான். ஒருவழியாக, ஜெயமாலா குடியிருக்கும் தெருவில் ஆட்டோ நுழைந்தது.

அம்மாடி என்று நிம்மதிப் பெருமூச்சை விட்டாள் ஜெயமாலா.

""அதோ, சந்தின் கடைசியில் இருக்கும் வீடு'' என்றாள்.

""கீழே இறங்கு'', என்று கர்ஜித்தான் அந்த ஆட்டோக்காரன்.

""ஏம்பா'', என்றாள் ஜெயமாலா.

""சந்து முனையிலே என்று இல்ல சொன்னே, இப்ப கடைசிக்குப் போகச் சொல்லறியே. கீழே இறங்கி நடந்து போ''.

""என்னப்பா, நான் ஒரு பொண்ணுன்னு கூடப் பார்க்காமல் இப்படிச் சொல்லறே‘‘.

""பெரிய பொண்ணு, உங்களைப் பத்தி எல்லாம் தெரியாது, பாதி ராத்திரியிலே ஊர் சுத்திட்டு வர, வூட்டுலே உன்னைத் தட்டிக் கேட்க ஆள் இல்லை. உன்னைப் பார்த்தாலே நடத்தை சரியில்லாதவள்னு தெரியுது.

பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டாள் ஜெயமாலா. குடிகாரன்கிட்ட என்ன பேச்சு வேண்டிக் கிடக்குது. என்னைப் பற்றி அவனுக்கு என்ன தெரியும். அவன் கிட்ட நான் எதை நிரூபிக்கணும். பர்ஸிலிருந்து ஐநூறு ரூபாய்த் தாளை, எடுத்து அவன் கையில் கொடுத்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் தன் வீட்டை நோக்கிச் சென்றாள் ஜெயமாலா.

பிரபு, வீட்டின் வாயிற்படியிலேயே நின்றிருந்தான்.

""ஜெயா, சங்கரி நீ கிளம்பிவிட்டாய் என்றாள், ஆனால் நீ இன்னும் வந்து சேரவில்லையே என்று கலங்கி நின்றேன். இன்னும் ஐந்து நிமிடம் தாமதமாகி இருந்தால், என் நண்பன் கணேசன் ஐ.பி.எஸ்ஸூக்கு போன் செய்து, அவனை ஜீப்பைக் கொண்டுவரச் சொல்லி உன்னைத் தேடி வந்திருப்பேன்''


""நல்லவேளை, நீங்கள் என்னைத் தேடி வரவில்லை. ஒரு நல்ல ஆட்டோக்காரன் என்னைப் பத்திரமாகக் கொண்டுவந்து சேர்த்தான்''.
""ஆனால் நீ நடந்து இல்ல வர''. 

""என் கார் ஸ்டார்ட் ஆகாததுபோல, அவன் ஆட்டோ இன்ஜினும் தெருமுனையிலே, தண்ணீர் புகுந்து நின்னுப்போச்சு, அதான் நடந்து வந்தேன்''.

வருடங்கள் நான்கு ஓடி மறைந்தன. காலை மணி பதினொன்று இருக்கும். ஜெயமாலா வார்டுகளில், ரவுண்ட்ஸ் சென்று கொண்டு இருந்தாள். அப்பொழுது வெளியிலே, ஒரே சத்தம். ஒரு நிறைமாதப் பெண்ணை அழைத்து வந்த கூட்டம் டாக்டரைக் கூப்பிடுங்க என்று பதறி நின்றது.

ஜெயமாலா வெளியிலே வந்தாள். ""அம்மா தாயி, என் பொண்ணுக்குப் பனிக்குடம் உடைஞ்சிடுச்சும்மா, கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு போறதுக்குள்ளே இப்படி ஆயிடுச்சும்மா, அதான் அவசரமா இங்கே கூட்டியாந்தோம்''.

""கமான், கீப் தி தியேட்டர் ரெடி''. குழந்தையின் தலை மிகவும் பெரியதாக இருந்தது. தாயின் கர்ப்பப்பை, சுருங்கி விரியவில்லை. அறுவை சிகிச்சையின் மூலம், அழகான பெண்குழந்தையை வெளியே எடுத்தாள் ஜெயமாலா.

""எல்லாம் நன்றாக முடிந்தது'', என்று சொந்த பந்தங்களுக்குச் சொல்ல வெளியே வந்தாள். 

""அம்மா, நீங்களா?'' என்று அலறியபடி, ஒரு இளைஞன் ஜெயமாலாவின் கால்களில் விழுந்து கதறினான்.

யார் இவன், ஏன் இப்படி அழுகிறான்? ஜெயமாலா திகைத்து நின்றாள்.

""அம்மா, இந்தப் பாவியை உங்களுக்கு நினைவு இருக்காதும்மா. சில வருஷங்களுக்கு முந்தி பாதி ராத்திரியில, நெஞ்சில் கொஞ்சம்கூட ஈவு இரக்கம் இல்லாம நடுத்தெருவில, கொட்டும் மழையில, வெள்ளத்தில உங்களை இறக்கிவிட்ட ஆட்டோக்காரன் நான்தாம்மா. இன்னைக்கி, என் பெண்டாட்டியையும் பொண் குழந்தையையும் காப்பாத்தியிருக்கீங்க. இந்தப் பாவியை மன்னிச்சிடுங்கம்மா''.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

(குறள் எண்: 151)

பொருள் :

தன்னைத் தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்து விடாதபடி தாங்கும் நிலம்போல, தன்னை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT