மகளிர்மணி

தொலைதூர சைக்கிள் வீராங்கனை!

21st Apr 2021 06:00 AM | - பொ.ஜெயச்சந்திரன்

ADVERTISEMENT


400 கி.மீ. தூரத்தை 24மணி நேரத்திலும், 600 கி. மீ. தூரத்தை 40 மணிநேரத்திலும், 1000 கி.மீ. தூரத்தை 75மணி நேரத்திலும் சைக்கிள் பயணத்தில் கடந்து சாதித்துக் கொண்டிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பத்மபிரியா. அவர் கூறியதாவது:

""சிறுவயதிலிருந்தே சைக்கிள் ஓட்டுவதில் எனக்கு ஆர்வம் அதிகம். அது படிபடியாக வளர்ந்து ஓரு கட்டத்தில் விடுமுறை நாட்களில் ரூபாய் 200 எடுத்துக் கொண்டு வழியில் கிடைக்கிற உணவுப் பொருட்களை மட்டும் வாங்கி சாப்பிட்டு சுமார், 150 கி.மீட்டருக்கு சைக்கிளில் பயணம் செய்து, மீண்டும் சரியான நேரத்தில் வீட்டுக்கு வந்து விடுவேன். இந்தப் பயிற்சி தான் எனக்கு பெரிய தூண்டுதலாக அமைந்தது என்றே சொல்லலாம்.

இன்றைக்கு 400கி.மீட்டர் தூரத்தை 24 மணிநேரத்திலும், 600கி.மீட்டரை 40 மணிநேரத்திலும், 1000 கி.மீட்டரை 75 மணிநேரத்திலும் கடந்துக் கொண்டிருக்கிறேன்.

எனது வாழ்க்கையில் இரண்டு தடவை 1000 கி.மீட்டர் தூரத்தை கடந்திருக்கிறேன். ஆனால் அதில் முதல் தடவை 75 மணிநேரத்தை தாண்டி அதிகமாக 45 நிமிடங்கள் ஆகிவிட்டது. அந்த தோல்வி தான் எனது அடுத்த வெற்றிக்கு அடித்தளமாக விளங்கியது என்று சொல்லலாம்.

ADVERTISEMENT

ஒரு பெண் இப்படி சைக்கிள் ஒட்டுவதற்கு முழு ஒத்துழைப்பும் தந்தது என்னுடைய பெற்றோர் தான் என பெருமையோடு சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

"தொலைதூரத்தை எப்படி சாதாரணமாக உங்களால் கடக்க முடிகிறது. சைக்கிள் ஒட்டுவதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது' என்றெல்லாம் கேட்க தொடங்கினார்கள். அப்படிப்பட்ட கேள்விகளை நான் சிரித்தபடியே கடந்து சென்று விடுவேன்.

அதுபோன்று, அலுவலகத்திற்கு சில நேரங்களில் சைக்கிள் ஒட்டிய வேர்வையோடு செல்வேன்.

சிலர் கேட்பார்கள் ""ஏன் மேடம் சைக்கிளில் வந்துள்ளீர்கள்'' என்று ஆனால் நாட்கள் போக, போக அது அவர்களுக்கும் பழகி விட்டது.

திடீரென்று பணிச்சுமை அதிகமானால் காரில் செல்வேன் அப்போதும் கேட்பார்கள் ""ஏன் மேடம் காரில் வந்துள்ளீர்கள் சைக்கிள் என்னாச்சு'' என்று. ஆகவே இச் சமூகம் நம்மை முழுவதுமாக கவனித்துக் கொண்டே இருக்கிறது அப்படிப்பட்ட சமூகத்திற்கு நாம் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும்.

இன்று விளையாட்டுத் துறையில் இருக்கும் நிறைய பெண்கள் சாதிக்க துடித்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கு சரியான திட்டமிடுதலும், பயிற்சியும் இருந்தால் தொடர்ந்து வெற்றி வாகை சூடிக் கொண்டே இருப்பார்கள்'' என்றார்.

Tags : தொலைதூர சைக்கிள் வீராங்கனை!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT