மகளிர்மணி

மறு ஜென்மம் எடுத்து வந்தேன்!

கோதை ஜோதிலட்சுமி


கலகலப்பான பெண் என்றாலும் கண்டிப்பும் கண்ணியமும் கொண்ட பெண் என்று சிவகங்கை மக்களால்அறியப்பட்டவர் சுபஜா. பெற்றோர் இல்லாத உலகில் பதினெட்டு வயதில் தன் இரு கால்களையும் இழந்து விட்ட போதும் முயற்சியை கை விடாமல் ஓடிக்கொண்டிருப்பவர் இவர். இருபத்தெட்டு வயதில் இவர் சிவகங்கைக்கு மட்டும் அடையாளமல்ல, தமிழகத்தின் அடையாளம். விரைவில் நடைபெறவுள்ள சர்வதேச பாரா ஒலிம்பிக் அரங்குக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார் இவர். மனதில் தெளிவிருந்தால் பாதையும் பயணமும் எளிதாகும் என்று வாழ்ந்து காட்டுபவர் இவர். தன்னம்பிக்கை மனிதரை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதற்கு இவர் உதாரணம். தன் அனுபவங்களை
நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

முதலில் உங்கள் வெற்றிப் பயணத்தைச் சொல்லுங்கள்...

சமீபமாக கோவையில் நீச்சல் போட்டியில் பங்கு கொண்டு மாநில அளவில் வெற்றி பெற்றிருக்கிறேன். குண்டு எறிதல், ஈட்டி எறிதல், போட்டிகளில் மாநில அளவில் முதல் பரிசுகளை வென்றிருக்கிறேன். அதோடு தேசிய அளவில் ஓட்டப்போட்டி மற்றும் கூடைப்பந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று ஜப்பான் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பதற்கான குழுவில் இடம் பெற்றிருக்கிறேன். இந்தியாவின் பிரதிநிதியாக ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கத்தைச் சுமக்க வேண்டும் என்ற கனவோடு அன்றாடம் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்...

நாகர்கோவிலில் பிறந்தேன். அப்பா எனக்கு நினைவு தெரியும் பொழுது உயிரோடு இல்லை. அம்மா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தான் நினைவில் இருக்கிறார்கள் எனக்குப் பத்து வயது இருக்கும் பொழுது அவர்களும் காலமாகிவிட்டார்கள். பெற்றோர் இல்லாத நிலையில் சுற்றத்தாரால் என் உடன் பிறந்தவர்கள் ஐந்து பேரும் ஹாஸ்டலில் விடப்பட்டோம். அவரவர் வாழ்க்கையை அவரவர் தேடிக்கொண்ட நிலை. வசதி வாய்ப்புகள் இல்லாத தனித்து விடப்பட்ட சூழலில் வளர்ந்தேன்.

மாற்றுத் திறனாளியாக...

நாகர்கோவிலில் படித்துக் கொண்டிருந்தேன். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறும்பொழுது ஏற்பட்ட விபத்தில் இரண்டு கால்களையும் இழந்தேன். இன்றைக்கும் அந்த கணம் நினைவில் இருக்கிறது. வயல்வெளியில் கால்கள் துண்டிக்கப்பட்டு விழுந்த பொழுது ஒரு பெரியவர் அங்கே கழனியில் இருந்த தண்ணீரை அள்ளி எடுத்து குடிக்கத் தந்தார். இடது கால் முழங்கால் வரை இல்லை. வலது காலில் விரல்கள் இல்லை. பெரிய போராட்டத்துக்குப் பிறகு கால் ரணம் குணமாகியது. தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்னை முதியோர் இல்லத்தில் சக்கர நாற்காலி உதவியுடன் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார்கள். அங்கே பாட்டிகள் அன்பைப் பொழிந்தார்கள். நானும் என்னுடைய பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வை எழுதி முடித்தேன். இல்லத்திலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். அங்கே தற்செயலாக சந்தித்த வெளிநாட்டுத் தம்பதியர் எனக்கு உதவ முன்வந்தார்கள். சென்னை ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் பிஎஸ்சி கணிப்பொறி அறிவியல் படிக்க வைத்ததோடு செயற்கைக் கால்கள் பொருத்துவதற்கும் உதவி செய்தார்கள். பெங்களூருவில் சிகிச்சை எடுத்துக் கொள்ள அழைத்துப் போனார்கள். விரல்கள் இல்லாத வலது காலையும் முழங்கால் வரை எடுத்துவிட வேண்டும் அப்போது தான் என்னால் செயற்கைக் கால்களுடன் நடக்க முடியும் என்று சொல்லி இரண்டு கால்களையும் முழங்கால் அளவுக்கு இழந்த நிலையில் செயற்கை கால்கள் பொருத்திக்கொண்டு நடக்கப் பயின்றேன். அந்த அனுபவங்களை மட்டுமே ஒரு புத்தகமாக எழுதலாம். விழுவதும் எழுந்து கொண்டு மீண்டும் நடக்க முயற்சிப்பதும் அன்றாடம் நடந்தன. கையில் ஒரு கோல் வைத்துக் கொண்டு நடக்க முயற்சியுங்கள் என்று அறிவுறுத்தினார்கள். ஆயுள் முழுவதும் கோல் பிடித்து நடப்பதை விட சில நாள் துன்பம் தாங்கி நடக்கப்பழகிக் கொண்டால் நல்லது என்று முயன்றேன். சகஜமாக நடக்கத் தொடங்கினேன்.

உங்கள் தொழில், ஜீவனம்...

இப்போது சிவகங்கையில் தாசில்தார் அலுவலகத்திற்கு அருகில் மனுக்கள் எழுதிக் கொடுத்து சிறிய வருமானம் கிடைக்கிறது. அது எனக்குப் போதுமானதாக இருக்கிறது. பலருக்கும் அரசு அலுவலகங்களில் எங்கே எப்படி அணுக வேண்டும் என்பதற்கு ஆலோசனை சொல்லியும் வழிகாட்டியும் வருகிறேன். அதிலே ஆத்ம திருப்தி. ரயில்விபத்தில் கால்களை இழந்ததால் ரயில்வே வேலைக்கு முயன்று வருகிறேன். ஆர்ஆர்.பி பரீட்சை எழுதித் தேறியிருக்கிறேன். அரசு வேலையை எதிர்பார்த்திருக்கிறேன்.

நாகர்கோவில் பெண்ணான நீங்கள் சிவகங்கையின் பெருமையாக எப்படி மாறினீர்கள்?

செயற்கைக் கால் சிகிச்சைக்குப் பிறகு சென்னையில் இருந்த என் அக்கா வீட்டில் விடப்பட்டேன் அங்கே வறுமையோடு பல பிரச்னைகளையும் எதிர்கொண்டேன். சகோதரிக்குச் சுமையாக இருக்க விரும்பாமல் என்னோடு படித்த தோழி உதவி செய்வாள் என்று நம்பி சென்னையை விட்டுப்புறப்பட்டேன். மதுரையில் அவளைத் தேடித் போனால் அவள் திருமணம் முடிந்து அங்கிருந்து சிவகங்கையில் இருப்பதாக அறிந்தேன்.

பல சிக்கல்களைத் தாண்டி அவளைக் கண்டுபிடித்தேன். துரதிர்ஷ்டம் பாருங்கள். அவளும் எனக்கு உதவும் நிலையில் இல்லை. தனியே ஒரு வீட்டை இருநூறு ரூபாய் வாடகைக்குப் பிடித்துக் கொண்டு ஒரு டெலிபோன் பூத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே நான் கால் இல்லாதவள் என்பதை அறிந்ததும் வேலைக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். பின்னர் மன்றாடி நூற்பாலையில் வேலைக்குச் சேர்ந்தேன். மாலை நேரத்தில் பள்ளிப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தேன். என்னை தனித்து வாழ்வதற்குத் தகுதிப் படுத்திக்கொண்டேன்.

விளையாட்டுத் துறைக்கு வந்தது எப்படி?

பொழுது போக்காக மொபைல் போனில் வீடியோக்கள் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு கால் இல்லாத சிறுவன் கூடைப்பந்து விளையாடுவதைப் பார்த்தேன். நாமும் இப்படி விளையாடினால் என்ன என்று விசாரித்தேன். சென்னையில் ஓர் அறக்கட்டளை சார்பில் கோச் சுப்பிரமணி என்பவர் பயிற்சி கொடுக்கிறார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் பயிற்சி எடுத்தேன். போட்டிகளில் கலந்து கொள்ள அவர்களே ஊக்கம் கொடுத்தார்கள். ஓட்டப்பந்தயம் மற்றும் கூடைப்பந்து விளையாட்டை முழு மூச்சோடு கற்றுக் கொண்டு களம் இறங்கினேன். 2019-ஆம் ஆண்டு மொகாலியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று தேசிய சாம்பியன் ஆனேன்.

உங்கள் இலக்கு..?

விளையாட்டுத் துறையில் சாதித்து இந்தியாவின் அடையாளமாக அங்கீகாரம் பெற வேண்டும். வாய்ப்புகளைத் தேடி அலைந்த கசப்பான அனுபவம் இருக்கிறது. அதனால் என் போன்றவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளை சொல்லி சாதனை படைக்க உதவ வேண்டும்.

நீங்கள் பெண்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி...

என்னுடைய இடது கால் நாகர்கோவிலில் புதைக்கப்பட்டுவிட்டது. வலது கால் பெங்களூரு மருத்துவமனையில் எரிக்கப்பட்டுவிட்டது. என்றாலும் வாழ்வதற்கான முயற்சியை நான் விட்டுவிடவில்லை. மறுஜென்மம் கொண்டவளைப் போல எழுந்து வந்தேன். தேசிய சாம்பியனாக மக்கள் என்னைக் கொண்டாடுகிறார்கள். மனதில் நம்பிக்கையும் துணிவும் கொண்டு நினைத்ததை சாதிக்க முயற்சி மேற்கொள்ளுங்கள். உங்கள் கனவுகள் நனவாகும். என்னால் இயலுமெனில் உங்களாலும் நிச்சயம் முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT