மகளிர்மணி

ஆரோக்கியத்தை காக்கும் தேங்காய் நார்! 

21st Apr 2021 06:00 AM | - ஸ்ரீதேவி

ADVERTISEMENT

 

""சில நேரங்களில் நாம் சாதாரணமாக நினைக்கும் சில பொருள்களும் நமது ஆரோக்கியத்திற்கு ஊறு விளைக்கக் கூடியதாக அமைந்துவிடுகிறது. அந்த வகையில், நாம் பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தும் நார் வகையும் ஒன்று. நம் உடலில் தோன்றும் பல ஆரோக்கிய சீர் கேட்டிற்கு அடித்தளமாக அமைவது இந்த பாத்திரங்கள் தேய்க்கும் நார்தான் என பல மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

அந்தக் காலங்களில் நம் வீடுகளில் பாத்திரம் தேய்ப்பதற்கு நம் முன்னோர்கள் பயன்படுத்தியது தேங்காய் நாரைத்தான். ஆனால் தற்போது கால ஓட்டத்தால் நாகரீக மாற்றத்தால் நாம் அனைவரும் தேங்காய் நாரை ஒதுக்கிவைத்துவிட்டு உடலுக்கு ஊறு விளைவிக்கும் பிளாஸ்டிக் நாரையும், இரும்பாலான நாரையும் பயன்படுத்தி பாத்திரம் தேய்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். இதன்மூலம், நம் உடலில் தோன்றும் பல பிரச்னைகளுக்கு கண்ணுக்கு தெரியாமல் நாமே வழி வகுத்துக் கொள்கிறோம்'' என்கிறார் தேங்காய்நார் ஸ்கரப்பர் தயாரிப்பில் இறங்கி சாதித்து வரும் சென்னையைச் சேர்ந்த சாந்தி. இது குறித்து அவர் கூறியதாவது:

""நான் சுமார் பதினைந்து ஆண்டுகளாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். பல பிரபல தொலைக்காட்சிகளில் பணிபுரிந்துள்ளேன். அப்படி ஜெயா டிவியில் பணிபுரிந்தபோது, "வானமே எல்லை' என்ற நிகழ்ச்சி தயாரித்து வழங்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சி வீட்டில் இருக்கும் பெண்கள் சுய தொழில் செய்து எப்படி வாழ்க்கையில் முன்னேறுவது என்பதை அடிப்படையாகக் கொண்டது.

ADVERTISEMENT

இதன்மூலம், ஏராளமான சுய தொழில் முனைவோரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்போதிலிருந்து நானும் தொழில் முனைவோராக மாற வேண்டும் என்ற கனவு என்னுள் எழுந்தது . அந்த கனவை செயல்படுத்த இந்த கரோனா காலம்தான் உதவியாக அமைந்தது.

இந்த நெருக்கடி காலத்தில் நன்கு படித்து லட்சத்தில் சம்பாதித்தவர்கள் கூட தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர் . அதே சமயம், சுய தொழில் செய்தவர்கள் பெரிய அளவில் பாதிப்பில்லாமல் இருந்ததையும் கண்கூடாக பார்த்தேன். அது எனக்குள் பெரிய உந்துதலை ஏற்படுத்தியது. எனவே, வேலையை விட்டுவிட்டு சுய தொழில் செய்வதற்கான முயற்சியில் இறங்கினேன்.

அதே சமயம், நான் தேர்ந்தெடுக்கும் எந்த ஒரு தொழிலாக இருந்தாலும், அது சமூக சிந்தனையோடும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக தேடுதல்களை அதிகப்படுத்தினேன். அந்த சமயத்தில்தான் காயர் போர்டில் பணியாற்றி வரும் அதிகாரி பூபாலனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அளித்த அறிவுரை மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் தேங்காய் நாரை பயன்படுத்தி ஸ்கரப்பர் தயாரிக்கும் தொழிலை தேர்ந்தெடுத்தேன்.

ஏனென்றால், இன்றைக்கு பாத்திரம் தேய்க்க அதிக அளவில் ரசாயணம் கலந்த பொருள்கள்தான் கடைகளில் கிடைக்கின்றன. அதனுடன் பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தும் ஸ்க்ரப்பரும் பல விதங்களில் கிடைக்கின்றன. அந்த ஸ்கரப்பர் பயன்படுத்தி தான் நாம் தினந்தோறும் பாத்திரத்தை சுத்தம் செய்கிறோம். ஆனால் அதை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து நாம் தெரிந்து கொள்ளவில்லை.

பொதுவாக நாம் பாத்திரங்களை தேய்க்கப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஸ்கரப்பர் அல்லது இரும்பாலான ஸ்கரப்பர்கள் கிருமிகளை உள்வாங்கி தக்க வைத்துக் கொள்ளும் தன்மையுடையது. எனவே, பாத்திரம் தேய்த்து முடித்த பிறகு, முறையாக சுத்தப்படுத்தி காயவைத்த பின்பு தான் அடுத்தமுறை பயன்படுத்த வேண்டும். ஆனால், நாம் அப்படி செய்வதில்லை, பாத்திரம் தேய்த்து முடித்த பின்னர் அப்படியே சோப்பு டப்பாவில் ஈரத்தில் போட்டு மூடி வைத்து விடுகிறோம். இதனால் அந்த நார்களில் படிந்திருக்கும் துகள்களில் பல லட்சக்கணக்கான நச்சுக் கிருமிகள் உருவாகிவிடுகிறது. அடுத்த முறை பாத்திரம் கழுவும் பொழுது பாத்திரங்கள் கண்ணுக்கு மட்டுமே தூய்மையானதாக இருக்குமே தவிர இயல்பில் மிக நுண்ணிய கிருமிகளை கொண்ட பாத்திரங்களாகத்தான் இருக்கும்.

அதுபோன்று கண்டிப்பாக வாரத்துக்கு ஒருமுறை இந்த ஸ்கரப்பர்களை மாற்றி விட வேண்டும். அதன் ஆயுள்காலம் முடிந்து நாம் பயன்படுத்தும்போது அதன் சிறுசிறு துகள்கள் நம் வயிற்றில் சென்று பல உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

அதுவே, தேங்காய் நாரை பயன்படுத்தி பாத்திரம் தேய்க்கும்போது தேங்காய் நாரில் உள்ள இயற்கை பொருள்களால் அதில் நச்சு கிருமிகள் தங்குவது இல்லை. மேலும் தேங்காய் நார் நச்சு கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. அதுபோன்று தேங்காய் நார் நம் உடலுக்குள் சென்றாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் ஜீரணமாகிவிடும்.

இப்படி உடலுக்கு நன்மைதரும் தேங்காய் நாரை விட்டுவிட்டு ஆரோக்கிய குறைபாடுகளை கொடுக்கும் பிளாஸ்டிக் ஸ்கரப்பர்களைத் தொடர்ந்து உபயோகப்படுத்தி வருகிறோம் என்பது வருந்ததக்க உண்மை. எனவே தான், தேங்காய் நாரை ஸ்கரப்பராக தயாரிக்க முடிவு செய்தேன்.

தேங்காய் நார் தொழிலில் ஈடுபடுவது என்று முடிவு செய்தவுடன், தென்னை மட்டைகள் அதிக அளவில் கிடைக்கும் இடத்தில்தான் தொழிலை தொடங்க வேண்டும் என்று நினைத்து, மதுரையில் சிறிய அளவில் ஒரு யூனிட்டை அமைத்து உற்பத்தியைத் தொடங்கினேன்.

ஹைட்ராலிக் கம்ப்ரஸர் மெஷின் மூலம் தேங்காய் நார்களை ஓர் அங்குல அளவில் மேட் அல்லது பாய் போன்று தயாரித்து பிறகு நமக்கு தேவையான வடிவில், தேவையான அளவில் துண்டுகளாக வெட்டி எடுத்துவிடுகிறோம். பின்னர் சுயஉதவி குழு மகளிரிடம் கொடுத்து 4 புறங்களிலும் தையல் போட செய்து, பிறகு பேக்கிங் செய்து விற்பனைக்கு கொண்டு வருகிறோம். இதன்முலம் சுயஉதவி குழுவைச் சேர்ந்த பெண்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், சுய தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கும் இது தொடர்பாக பயிற்சியும் ஆலோசனையும் வழங்கி வருகிறோம்.

தற்போது தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களிலிருக்கும் சுய உதவிக் குழு பெண்களும் எங்களிடமிருந்து இந்த ஸ்கரப்பரை வாங்கி விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அதேபோன்று பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்தின், மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா பிளாஸ்டிக் ஸ்கரப்பருக்கு மாற்றாக தேங்காய்நார் ஸ்கரப்பர் தயாரிப்பிற்கு அனைத்து உதவிகளும் செய்ய முன்வந்துள்ளார். மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுய உதவி குழு பெண்களுக்கு பயிற்சியளிக்கவும் அழைத்துள்ளார். இதுவே, எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறேன். மேலும், இந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதே எனது கனவு'' என்றார்.

Tags : ஆரோக்கியத்தை காக்கும் தேங்காய் நார்! 
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT