மகளிர்மணி

வாழ்க்கையை  சரிசமமாக அனுபவித்தவர்!: சகுந்தலாதேவி பற்றி மகள் அனுபமா  சொல்கிறார்:

23rd Sep 2020 06:00 AM | - பூர்ணிமா

ADVERTISEMENT


""என்னுடைய அம்மாவும், இந்தியாவின் முதல் பெண் கணித மேதையுமான சகுந்தலாதேவி, ஏப்ரல் 21, 2013-ஆம் ஆண்டு தன்னுடைய 83-ஆவது வயதில் காலமான சில மாதங்கள் கழித்து, பெங்களூரைச் சேர்ந்த அனுமேனன் என்ற பெண் இயக்குநர் என்னைச் சந்திக்க வந்தார். என்னுடைய அம்மா சகுந்தலா தேவிக்கு நான் ஒரே பெண் என்ற காரணத்தால், என்னுடைய பார்வையில் அம்மாவின் வாழ்க்கையை படமாக்கப் போவதாகவும், அவரைப் பற்றிய தகவல்களை கூறும்படியும் கேட்டார். அம்மாவின் வாழ்க்கை படமாக்கப்படுவது எனக்கு மகிழ்ச்சியாக இருந்ததால், அம்மாவின் மூலம் நான் கேள்விப்பட்ட தகவல்களை கூறினேன்.
நவம்பர் 4, 1929- ஆம் ஆண்டு பெங்களூரில் பிஷாமணி - யோகினி தம்பதியரின் மகளாக பிறந்த என் அம்மாவை, சர்க்கஸ் கலைஞராக இருந்த என்னுடைய தாத்தா பிஷாமணி மூன்று வயதிலேயே சில மேஜிக் காட்சிகளில் அவரை எண்களை நினைவுபடுத்தி சொல்வதற்கு பயன்படுத்தி வந்தாராம். என் அம்மாவின் நினைவாற்றலை கண்டு வியந்த தாத்தா, அவரை வைத்து தனியாக நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினாராம். நாளடைவில் சிறுவயதிலேயே கணிதத் திறமையை வெளிப்படுத்திய என் அம்மா, பிரபலமடைந்ததோடு கணிதமேதை எனப் புகழப்பட்டாராம்.
இவரது கணிதத் திறமையை சோதிக்க விரும்பிய ஸ்டான்போர்டு புரொபசர் ஆர்தர் ஜென்சன், கடினமான கணிதமொன்றை கொடுத்து அதற்கான விடையை அவர் எழுதி முடிப்பதற்குள், என்னுடைய அம்மா சகுந்தலாதேவி சரியான விடையை கூறியதை கண்டு வியப்படைந்துள்ளார். அந்த சமயத்தில் உலகிலேயே அதிவேக முதல் கம்ப்யூட்டராக கருதப்பட்ட யூனிவாக் 1101 கம்ப்யூட்டரில் கொடுக்கப்பட்ட ஒரு கணக்கின் விடையை கம்ப்யூட்டர் வேகத்தை விட குறுகிய நேரத்திற்குள் அதற்காக விடையை என்னுடைய அம்மா கூறியதைக் கேட்டு விஞ்ஞான உலகமே வியந்து, உலகின் முதல் பெண் கம்ப்யூட்டர் எனப் பாராட்டியுள்ளது. உலக நாடுகளுக்குகெல்லாம் சென்று தன்னுடைய திறமையை நிரூபித்து காட்டிய என் அம்மா, இறுதிகாலத்தில் பெங்களூர் பசவன் குடியிலேயே தங்கி ஜோதிட ஆலோசனைகள் கூறி வந்தார்.
என்னுடைய அம்மா ஒரு கணித மேதை மட்டுமல்ல, வாழ்க்கையை சரிசமமாக அனுபவித்தவர். குடும்பத் தலைவியாகவும், வெற்றிகரமான பெண்மணியாகவும் எப்படி வாழ்ந்தார் என்பதை அறியும்போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நான் ஒரு தாய், ஒரு மனைவி மற்றும் சகுந்தலா தேவி என்று அவர் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டாரே தவிர, தன்னை ஒரு பெண் என்றும், கணித மேதைகளில் ஆண்- பெண் என்ற வித்தியாசம் இருக்கக் கூடாது  என்றும் அவர் நினைத்தாலும், 1982- ஆம் ஆண்டு வெளியான கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் அவரை உலகின் முதல் பெண் கணிதமேதை என்றே குறிப்பிட்டிருந்தனர்.
அதுமட்டுமல்ல; இரண்டே ஆண்டில் 200 புத்தகங்கள் எழுதியதோடு, முதன் முதலாக ஓரின சேர்க்கை பற்றியும், ஆண்களுக்கான சமையல் குறிப்பு புத்தகம் எழுதிய முதல் பெண் எழுத்தாளர் என்பதையும் அறிந்தபோது வியப்படைந்தேன்.
நான் பெங்களூரிலேயே அஜய் அபயகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு லண்டன், பெங்களூரு என இரு நகரங்களிலுமாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு இப்போது 40 வயதாகிறது. என்னுடைய இரு பெண்களும் லண்டனில் பிறந்தவர்கள், 17 ஆண்டுகள் பெங்களூரிலேயே இருந்த நான் தற்போது ஆண்டுக் கொருமுறை வந்து செல்கிறேன்.
சகுந்தலாதேவி எனக்கு அம்மாவாக மட்டுமின்றி தந்தையாகவும் இருந்து என்னை வளர்த்தார். எப்போதும் அவர் சோர்வுற்று நான் பார்த்ததே இல்லை. ஒருவருக்கொருவர் துணையாக இருந்தோம். ஒருமுறை நானும் என் கணவரும் எங்கள் 15-ஆவது திருமண ஆண்டு நிறைவின்போது, அம்மாவை சந்தித்து ஆசி பெற வந்திருந்தோம்.
"என்னுடைய வாழ்க்கையில் இப்படியொரு சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவில்லை' என்று கூறி எங்களை வாழ்த்தினார். சோகத்தை கூட மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்வார்.
அரசியலில் ஈடுபட வேண்டுமென்று நினைத்த என்அம்மா 1980- ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், இந்திராகாந்தியை எதிர்த்து அவர் போட்டியிட்ட இருதொகுதிகளிலும் இவரும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தேர்தல் முடிவுக்குப் பின் வீட்டிற்கு வந்தவர், எதுவுமே நடந்தாற் போல் காட்டிக் கொள்ளாமல் வழக்கம் போல் மற்ற வேலைகளை பார்க்கத் தொடங்கியது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.
என்னுடைய அம்மா உலகப் புகழ் பெற்ற கணித மேதையாக இருந்தாலும் என்னிடம் கணிதம் பற்றி கேள்விகள் கேட்டதில்லை. அம்மாவைப் போன்று வேறுயாராவது கணிதத்தின் மீது இத்தனை ஆர்வம் காட்டியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். நாங்களிருவருமே அவரவர் பணியில் பரபரப்பாக இருந்தாலும், என்னைப் பொருத்தவரை நான் அவரது தீவிர ரசிகை என்பது உண்மை. அவருக்கு தென்னிந்திய உணவு வகைகள் மற்றும் பலகாரங்கள் மிகவும் பிடிக்கும். இறுதி காலத்தில் அவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் கூட விருப்பப்பட்டதை மறைத்து வைத்து சாப்பிடுவார். அவர் வாழ்ந்தது சரிசமமான வாழ்க்கை என்றே சொல்லலாம்'' என்கிறார் மறைந்த கணிதமேதை சகுந்தலாதேவியின் மகளான அனுபமா பானர்ஜி.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT