மகளிர்மணி

குழந்தைபேறு: ஏற்ற உணவுகள்...

23rd Sep 2020 06:00 AM | -முனைவர். ப. வண்டார்குழலி  இராஜசேகர்

ADVERTISEMENT

 

திருமணம் முடித்த பெண்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கும் தாய்மையடைதல் இயற்கையாக நிகழாததால், செயற்கைக் கருத்தரிப்பு முறைகளை நோக்கிச் செல்வது, தற்போது அதிகரித்து வருகிறது.  சினை முட்டை வெளியேற்றத்தில் குறைபாடு, மாதவிடாய்க் கோளாறுகள், பெண் இனப்பெருக்க உறுப்புகளில் பிறவிக் குறைபாடுகளும், நோய்களும், இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் தொற்றுகள், சினைமுட்டை முதிர்ச்சியின்மை போன்றவைகளே குழந்தையின்மைக்கு மிக முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. 


ஆனால், பிறவிக் குறைபாடு, இனப்பெருக்க மண்டல நோய்கள் போன்றவற்தைத் தவிர்த்து, பெரும்பாலான  பெண்களின் குழந்தையின்மைக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது, ஆரோக்கியக் குறைபாடு. இவற்றை மிக நுணுக்கமாகவும், எதார்த்தமாகவும் பார்க்கும்போது, திருமணத்திற்கு முன்பிருக்கும் வளரிளம்பருவ வயதில் சந்திக்கும் ஊட்டச்சத்து குறைபாடும், திருமணமான புதுப்பெண்கள் எதிர்நோக்கும் தாய்மையடைதலுக்குத் தக்கவாறு உடலைத் தயார்படுத்தும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சரிவர எடுத்துக்கொள்ளாததுமே காரணங்களாக இருக்கின்றன. 

இந்த இரண்டு விஷயங்களில் பெண்ணும், பெண்ணின் பெற்றோரும், புகுந்த வீட்டினரும் கவனம் செலுத்தினால், இயற்கையாகவே தாய்மையடைந்து, ஆரோக்கியமான குழந்தையையைப் பெற்றெடுக்கலாம். அதற்கான உணவுமுறையில், திருமணம் நிச்சயிக்கப்பட்டதிலிருந்து அல்லது,  திருமணமான நாளிலிருந்தாவது பெண்கள் கவனம் செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT

இனப்பெருக்க மண்டலத்தை உறுதிப்படுத்தி, சீரான மாதவிடாய், சினைமுட்டை உற்பத்தி, சினைமுட்டை வெளியேற்றம், கருவுறுதல், கரு தங்குதல், இவற்றிற்கான ஹார்மோன்களின் சீரான உற்பத்தி போன்ற தொடர்ச்சியான செயல்கள் நிகழ்வதற்குத் தேவையான  ஊட்டச்சத்துகள் எவை எவை, எந்தெந்த உணவுப்பொருட்களில் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு உணவு முறையைக் கடைபிடித்தால், ஒருவேளை குறைபாடு ஏதேனும் நிகழ இருப்பின் அவற்றைத் தவிர்த்து சுகமான தாய்மைப் பேற்றினை அடையலாம். 

கருத்தரிப்பிற்கும் உணவுக்கும் உள்ள மிக நெருக்கமான தொடர்புகள் பற்றிய ஆய்வுகள் ஏராளமாக மேற்கொள்ளப்பட்டு, இனப்பெருக்க மண்டலத்திற்கான ஊட்டச்சத்துகள், குழந்தையின்மை நிலையைக் குறைத்து, பெண்கள் தாய்மையடைவதற்கான சூழலையும், காரணிகளையும் அதிகரிப்பதற்கான உறுதியான ஆதாரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த உணவுகளை கருத்தரிப்பிற்கான உணவுகள்  (fertility diet) என்றே பெயரும் வைத்திருக்கிறார்கள். இந்த உணவுகள் பற்றிய விளக்கமும், தாய்மையை எதிர்பார்க்கும் பெண்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது பற்றியும் பார்க்கலாம்: 

திருமணமான பெண்களின் உடல் நிலைக் குறியீட்டு எண் எனப்படும் Body mass index (BMI) 20 - 25 kg/m2 க்குக் குறையாமலும், 30kg/m2 க்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், தொடர் ஊட்டச்சத்து குறைபாட்டால், உடல் எடை குறைவாக இருந்தாலும், உடற் பருமன் இருந்தாலும், கருத்தரிப்பிற்கான வாய்ப்புகள்  குறைகின்றன. எனவே, அவரவர் வயதுக்கும், உயரத்திற்கும் ஏற்ற ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது முதல் கடமையாகும். அதற்கு, முறையான உணவும், உடற்பயிற்சியும் மேற்கொள்ளலாம். 

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், நடுத்தர வயதுள்ள பெண்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள கலோரி, புரதம் மற்றும் கொழுப்பு சத்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்வதுடன், 400 மைக்ரோ கிராம் அளவு போலிக் அமிலம் கிடைக்குமாறு உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

கரு உருவாவதற்கும், அதைத் தக்க வைப்பதற்கும், அந்தக் கருவின் நரம்பு மண்டலம் வளர்ச்சி குறைபாட்டிற்குள்ளாகாமல் இருப்பதற்கும் உதவி செய்கிறது. 

அடர் பச்சைநிறக் கீரைகள், பருப்புகள், ஆரஞ்சுப் பழம், முளைகட்டிய கோதுமை, பாதாம் பருப்பு, மணிலா பயறு போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இது இன்னும் கூடுதலாக, கருத்தரிப்புக்கு முன்னர், ஒரு நாளைக்கு 400 முதல் 800 மைக்ரோ கிராம் அளவு என்றும் பரிந்துரைக்கப்படுகிறது. 

ஏறக்குறைய 250 முதல் 500 மி.கிராம் அளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், ஒமேகா 6 கொழுப்பு அமிலம் மற்றும் லினோலிக் அமிலம் போன்றவை அத்தியாவசியமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 

இந்த சத்துகள், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்டிரான் போன்ற இனப்பெருக்க ஹார்மோன்களை ஒழுங்குமுறைப்படுத்தி, கருப்பை வாயின் சளித்திரவத்தை அதிகப்படுத்தி, சினை முட்டை வெளியேற்றத்தை ஊக்கப்படுத்தி,  கருப்பை, கருக்குழாய், சினைப்பை, கருப்பை வாய் ஆகியவற்றிற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கி, கருத்தரிப்பிற்கான ஒட்டுமொத்த காரணிகளையும் முறைப்படுத்துவதால், கருத்தரிப்பு சாத்தியமாகிறது.  

மீன்கள், பிளாக்ஸ் விதைகள், சியா விதைகள், வால்நட், பரங்கி விதைகள், கனோலா மற்றும் சோயாபீன்ஸ் எண்ணெய் போன்றவற்றில் போதுமான அளவில் இருப்பதால், இவற்றை உள்ளடக்கிய உணவுகளைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.  

இனப்பெருக்க மண்டலத்திற்கு மிக அத்தியாவசியமான நுண்சத்தாக இருப்பது வைட்டமின் "ஈ'. ஒரு நாளைக்கு சுமார் 600 மி.கிராம் அளவு வைட்டமின் "ஈ' பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சீரான ரத்த ஓட்டத்துடன் கருப்பையின் சுவர் உறுதியாகவும் போதுமான தடிமனுடனும் இருக்கவும், ஹார்மோன்களின் சமநிலை மாறுபாட்டினால், கருப்பை கட்டிகள் ஏற்படுவதைத் தடுக்கவும், பனிக்குட நீர் சரியான அளவில் இருக்கவும் இந்த வைட்டமின் உதவி செய்கிறது.

எனவே, தாய்மையை எதிர்பார்க்கும் திருமணமான பெண்கள், வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளான சூரியகாந்தி விதை,  பாதாம், வால்நட்,  மாங்காய், திராட்சை, ஆலிவ் கொட்டைகள், பச்சை காய்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

உடலின் நோய் எதிர்ப்புச் சக்திக்குத் தேவையான வைட்டமின் "சி' யானது, இரும்புச் சத்தினை பெண்ணின் உடலில் உட்கிர கிக்க உதவி செய்வதுடன், புரொஜெஸ்டிரான் ஹார்மோனின் உற்பத்தியையும் அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டால், மாதவிடாயில் சிக்கல் ஏற்பட்டு, கரு உருவாவதும் தடுக்கப்படும். எனவே, வைட்டமின் "சி' நிறைந்த உணவுகளான பச்சை கீரைகள், காய்கள், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பழங்கள், தக்காளி, சர்க்கரை வள்ளி போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.  

ஹோமோசிஸ்டின் என்னும் அமினோஅமிலத்தின் சமநிலையற்ற ஏற்றத்தாழ்வு நிலையானது, ரத்த அணுக்களை பாதித்து, ரத்த சோகையை ஏற்படுத்திவிடும். இந்நிலையில் கரு உருவாவதும், கருத்தரித்த பின்பு கருக்கலைவும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால், இந்த அமினோஅமிலத்தின் சமநிலையைப் பாதுகாக்கும், "பி' குடும்ப வைட்டமின்களான நியாசின், தையமின், பைரிடாக்ஸின் போன்றவையும் அத்தியாவசமானவை. பளபளப்பு செய்யப்படாத முழு தானியங்கள், முட்டை, கொழுப்பில்லாத மாமிசம், பச்சை காய்கள், பழங்கள், கொட்டையுணவுகள் போன்றவற்றில் வைட்டமின் "பி' சத்துகள் நிறைந்துள்ளன. 

மேற்கூறிய சத்துகளுடன், coenzyme Q10 என்ற  ஆன்ட்டிஆக்ஸிடன்ட், கருப்பை செல்கள் மற்றும் சினைமுட்டையை oxidative damage என்னும் உயிர்வளியேற்ற எதிர்பொருட்களின் பாதிப்பிலிருந்து பாதுகாத்து, கரு நிலைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல்,  செலினியம் என்ற தாதுப்பொருள், சினைப்பையின் நுண்ணறைகளை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதுடன்,; சினை முட்டை வளர்ச்சி மற்றும் வெளியேற்றத்தையும் பராமரித்து, உருவாகும் கருவில் எவ்வித குறைபாடு இல்லாமலும், கருக்கலைவு ஏற்படாமலும் தடுக்கிறது. தானியங்கள், பால் பொருட்கள், மீன், மாமிச உணவுகள் போன்றவற்றில் இந்த சத்துகள் நிறைந்துள்ளதால், இவ்வகை உணவுகளையும் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். 

தாய்மையடைவதற்கான காரணிகளை அதிகரிக்கும் உணவுகளில் கவனம் செலுத்துவதுடன் நிற்காமல், அந்த உணவுப்;பொருட்கள் தரமான நல்ல இயற்கைத் தன்மையுடன் கூடிய உணவுகளாகவும் இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், பளபளப்பூட்டப்பட்டு நுண்சத்துகள் குறைவாக உள்ள தானியங்கள், அதிகம் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்த உணவுகள், உடலின் இயல்பான வளர்சிதை மாற்ற நிகழ்வுகளை மாற்றி, ஹார்மோன்களின் உற்பத்தியைப் பாதிப்பதுடன், இனப்பெருக்க மண்டல உறுப்புகளின் செயல்பாடுகளிலும் சிக்கலை ஏற்படுத்தி, தாய்மையடையும் வாய்ப்புகளை குறைக்கிறது என்பதை நினைவில் வைக்க வேண்டும். 


உதவி பேராசிரியர், மனையியல் துறை, 
அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, காரைக்கால்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT