மகளிர்மணி

பெண்களும் கற்கலாம் நாகசுரம்!

16th Sep 2020 12:00 AM

ADVERTISEMENT

 

கர்நாடக இசையின் "ராஜ வாத்தியம்' என அழைக்கப்படும் நாகசுர ஒலியின் வசீகரம் கேட்பவர் எவரையும் முதல் முறை யிலேயே ஈர்த்து அடிமையாக்கும் தன்மைக் கொண்டது.

இந்த நாகசுரக் கருவியை அடி வயிற்றிலிருந்து மூச்சைப் பிடித்து வாசிக்க வேண்டும். கற்றுக் கொள்வதற்கு மிகவும் கடினமான இக்கலையில் ஆண்களே ஆதிக்கம் செலுத்துவர். சில ஆண்டுகளாக ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் இக்கலையைக் கற்று மேடை நிகழ்ச்சிகளில் வாசித்து வரவேற்பைப் பெற்று வருகின்றனர். தற்போது, கிட்டத்தட்ட 20 சதவீதப் பெண்கள் நாகசுர வித்வான்களாக மிளிருகின்றனர்.

அந்த வகையில், தஞ்சாவூர் எல்லையம்மன் கோயில் தெருவில் வசிக்கும் இளங்கோவின் மனைவி கவிதா (39) நாகசுரக் கலையில் பிரபலமடைந்து வருகிறார். இளங்கலை இசைப் பட்டப்படிப்பை முடித்துள்ள இவர் திருமண விழாக்கள், கோயில் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றில் தனது இளைய சகோதரரான நாகசுர கலைஞர் பத்மநாபனுடன் இணைந்து நாகசுரம் வாசித்து வருகிறார்.

ADVERTISEMENT

மிகவும் கடினமான இக்கலையை எப்படிக் கற்றுக் கொண்டார் என்பதை அவரே சொல்கிறார்:

""எனது தாய் வழி தாத்தா தேனி ராஜாராம் சிறந்த நாகசுரக் கலைஞர். காருக்குறிச்சி அருணாசலத்தின் சீடரான இவர் அக்காலத்தில் தொடர்ச்சியாக 24 மணிநேரம் நாகசுரம் வாசித்தவர். இதேபோல, எனது தந்தை டி.கே. சோமசுந்தரமும் பிரபலமான நாகசுரக் கலைஞர். இவரும் தஞ்சாவூர் பெரியகோயிலில் தொடர்ந்து 12 மணிநேரம் நாகசுரம் வாசித்து பாராட்டைப் பெற்றவர்.

நான் சிறு வயதில் வாய்ப்பாட்டு, இசையில்தான் கவனம் செலுத்தி வந்தேன். எனது தந்தை நாகசுரம் வாசிப்பதைப் பார்த்து, இக்கலையை நாமும் கற்க வேண்டும் என்ற உந்துதல் என் மனதில் ஏற்பட்டது. இதுகுறித்து தந்தையிடம் கூறியபோது, அவரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். இதைத்தொடர்ந்து 11- ஆம் வகுப்பு படிக்கும்போது தந்தையிடம் நாகசுரம் கற்கத் தொடங்கினேன். ஏற்கெனவே பாட்டுக் கற்றுக் கொண்டதன் மூலம் கிடைத்த பயிற்சி, அனுபவத்தின் மூலம் நாகசுரக் கலையைக் கற்பதற்கு எளிதாக இருந்தது.

கடந்த 1997- ஆம் ஆண்டில் 12 -ஆம் வகுப்பு முடித்ததும் முதன் முதலில் மேடையேறி வாசித்தேன். தொடர்ந்து 2006- ஆம் ஆண்டு வரை தந்தையுடன் இணைந்து கச்சேரி செய்து வந்தேன். தந்தை காலமான பிறகு மேடை நிகழ்ச்சிகள் செய்வது நின்று போனது. இதன் பிறகு கடந்த 7 ஆண்டுகளாக எனது தம்பி பத்மநாபனுடன் இணைந்து மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வாசித்து வருகிறேன். அண்மையில் தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழாவிலும் வாசித்தேன். எனது கணவரும், தம்பியும் அளித்து வரும் ஆதரவும், ஊக்கமும்தான் என்னால் இக்கலையில் தொடர முடிகிறது.

இக்கலையில் ஆண்களே மிகவும் சிரமப்படுவர். நாகசுரத்தைப் பொருத்தவரை சீவாளியில் உதட்டை அழுத்தி அடி வயிற்றிலிருந்து காற்றை இழுத்து, கட்டுக்குள் வைத்து வாசித்தால் கம்பீரமான இசையொலி கிடைக்கும். அதனால்தான் இதனை "ராஜ வாத்தியம்' எனக் கூறுகின்றனர். இது, பெண்களுக்கு மிகவும் கஷ்டம். ஆனால், தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால், பெண்களுக்கும் இக்கலை எளிதாக அமையும்.

நான் தொடர்ந்து வீட்டிலேயே பயிற்சி செய்து வருகிறேன். மூச்சை இழுத்து நிறுத்தி வைத்து வாசிக்க வேண்டும் என்பதால், தொடக்கத்தில் சிரமமாகத்தான் இருக்கும். மூச்சை இழுத்து நிறுத்தும்வரை கஷ்டமாக இருந்தாலும், தொடர் பயிற்சி மூலம் அதையும் எளிதாக்கிவிடலாம்.

மேடைகளில் வாசிக்கும்போது உடல் ரீதியாக கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வலி ஏற்படும். ஆனால், வாசித்து முடித்த பிறகு பார்வையாளர்கள் வந்து பாராட்டும்போது அந்த வலியெல்லாம் மறந்து போய்விடும். அதன் மூலம் மனதும் திருப்தியடையும்போது வலியும் தெரியாது. அதிலேயே உற்சாகமாகி அடுத்த பாடலை வாசிக்கத் தொடங்கிவிடுவோம்.

இதை இஷ்டப்பட்டுக் கற்றால் கஷ்டம் கிடையாது. சைனஸ் பிரச்னை இருந்தால் கற்பது சிரமம். உடல் நிலை நன்றாக இருந்தால் பெண்களும் கற்றுக் கொள்ளலாம்.

இடைவிடாமல் பயிற்சி செய்து வந்தால் வாசிக்கும்போது கம்பீரம் குறையாது. ஒரு வாரம் இடைவெளி விட்டால்கூட கம்பீரம் குறைந்துவிடும். இப்போது, பெண்கள் படிப்படியாக கற்க முன் வருகின்றனர் என்றார் கவிதா.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT