மகளிர்மணி

கைதட்ட  ரசிகர் ஒருவர் கூட இல்லை!

16th Sep 2020 12:00 AM | - பிஸ்மி பரிணாமன்

ADVERTISEMENT


கரோனா தொற்று இசை உலகையும் விட்டுவைக்கவில்லை. இசைப் பிரியர்கள் ஒருவர் கூட அரங்கில் இல்லாத போது இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பது ஒருவகையில் தண்டனை மாதிரிதான். கரோனாவினால் இசை நிகழ்ச்சிகள் உலகெங்கும் நடப்பதில்லை. "ஜூம் செயலி' மூலம் பல இசைக் கலைஞர்கள் பாடி அல்லது இசைக் கருவிகளை கையாண்டு இசை நிகழ்ச்சிகளை "ரசிகர்கள் இன்றி' நடத்தி வருகிறார்கள்.

அதுபோல உலகப் புகழ் பெற்ற லண்டன் ராயல் ஆல்பெர்ட் ஹாலில் சென்ற வாரம் இசை ரசிகர் ஒருவர் கூட இல்லாத நிலையில் இசை நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறார் சித்தார் இசைக் கலைஞர் அனுஷ்கா சங்கர். அனுஷ்கா தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்:

""சாதாரணமாக இசை நிகழ்ச்சிக்காக மேடை ஏறும் போது ரசிகர்களின் அபாரமான கைதட்டல்கள் என்னை வரவேற்கும். இந்த மரபை கரோனா அபாயம் போட்டு உடைத்துவிட்டிருக்கிறது. நான் சரித்திர பிரசித்தி பெற்ற லண்டன் ராயல் ஆல்பெர்ட் ஹாலில் சென்ற வாரம் மேடை ஏறும்போது கைதட்ட ரசிகர் ஒருவர் கூட இல்லை. என்னுடன் கூட இசைக்கும் கலைஞர்களைத் தவிர வேறு யாரும் அரங்கில் கிடையாது, எனது தந்தையாரின் நூறாவது பிறந்தநாளை ஒட்டி அந்த சித்தார் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரு ரசிகர் கூட இல்லாதது ராயல் ஆல்பர்ட் அரங்கின் சரித்திரத்தில் இடம் பெரும்விதமாகவும் அமைந்துவிட்டது. எனக்கும் இந்த இசை நிகழ்ச்சி மறக்க முடியாததே.

ரசிகர்களையும் இசைக் கலைஞரையும் இணைக்கும் ஆற்றல் கச்சேரிக்கும், இசை நிகழ்ச்சிக்கும் கிடைக்கும். ரசிகர்கள் ரசிப்பதை உணர்ந்து இசைக் கலைஞர் தனது திறமையை மேடையில் அரங்கேற்றுவார். ரசிகர்களுடன் நேரடி இணைப்பு அறுந்த நிலையில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டதை நான் உணரவே செய்தேன்.

ADVERTISEMENT

ஆனால் சக இசைக் கலைஞர்கள் மேடையில் இருந்ததால் "ஒருவருக்காக ஒருவர்' இசையை விழுந்து விழுந்து வாசித்து, ஒருவருக்கு ஒருவர் ரசிகராகி கோர்வையான துடிப்புடன் தேவையான உற்சாகத்துடன் உயிரான நிகழ்ச்சியை மலர்ச்சியுடன் வழங்க முடிந்தது.

கரோனா காரணமாக லண்டனில் நடக்க இருந்த எனது இசை நிகழ்ச்சி 2021 ஏப்ரல் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

கரோனா எல்லாரையும் பாதித்து இருப்பதை போல என்னையும் பதம் பார்த்திருக்கிறது. எனது திட்டங்கள் தலைகீழாகிவிட்டன. வீட்டில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட.. குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்கிறேன். குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறேன். முன்பைவிட குழந்தைகளுக்காக அதிக நேரம் செலவிட முடிகிறது. வீட்டில் குழந்தைகளுக்குப் பாடங்கள் சொல்லித் தருவது ஒரு சவாலான செயல் என்பதை அனுபவபூர்வமாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். இசை தொடர்பான வேலைகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.

மீரா நாயர் இயக்கியிருக்கும் "சூட்டபிள் பாய்' பிபிசி டிவி ஆறுபாகத் தொடருக்கு இரண்டு இசை அமைப்பாளர்களில் நானும் ஒருத்தி. பின்னணி இசைப் பதிவினை கரோனா காலத்தில் நானாக செய்து முடித்தேன். இசைப் பதிவு வேலைகளை என்னாலும் செய்ய முடியும் என்று தெரிய வந்தது எனக்கு திருப்தியையும் தெம்பையும்
தந்தது.
நமது தவறுகளிலிருந்து பாடங்களைப் படித்துக் கொள்ள வேண்டும். கரோனா நம்மை நம்முடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள நேரத்தை தந்துள்ளது. இயற்கையின் அமைதியை நம்மிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறது கரோனா. மனிதர்களுக்கு உதவவும் அவர்களது மனங்களுடன் பேசவும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது'' என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT