மகளிர்மணி

ஆதர்ச தலைமை ஆசிரியர்

சி.டி. இந்திரா

பெண் கல்வி என்பதே அரிதாக இருந்த காலத்தில், அதாவது சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் கல்வி கற்கும் வாய்ப்பு ஒரு சில பெண்களுக்குத் தான் கிடைத்தது. இளம் வயதில் விதவையாகிப் போன பெண்களில் சிலர் படித்து பட்டம் பெற்று முதல் தலைமுறை ஆசிரியர்களாக தகுதிப் பெற்றார்கள்.

அவர்களில் ஒருவர்தான் லீலாவதி. சென்னை ராணிமேரிக் கல்லூரியில் பட்டம் பெற்று பிறகு லேடி வெலிங்டனில் ஆசிரியர் பயிற்சி பட்டமும் பெற்றார். 

1950-களில் சிதம்பரம் அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார் லீலாவதி. பள்ளிக்கட்டடம் என்பது மேலவீதியில் இருந்த ஒரு பழைய சத்திரம். ஓடு வேய்ந்த கூரை, முற்றம், தாழ்வாரம், குட்டிக் குட்டி அறைகள், ரேழி இதுதான் எங்கள் பள்ளி. நானும் எனது சகோதரிகளும் அங்கேதான் படித்தோம். 

அத்தனை வகுப்புகளும் நிரம்பி வழியும். இடப்பிரச்னை ஒரு பெரிய பிரச்னை. தலைமை ஆசிரியருக்கென்று ஒரு தனி அறை கூட ஒதுக்கிக் கொள்ளவில்லை லீலாவதி. சுற்றி சுற்றி வந்து வேலை பார்ப்பார். உயரமான உடல்வாகு. பிரகாசமான முகம். கண்டிப்பும் கரிசனமும் நிறைந்த பார்வை. 

வசதி குறைவான அந்தப் பள்ளிக்கூடத்தில் பல சாதனைகளை செய்திருக்கிறார் லீலாவதி.  நாடு சுதந்திரம் அடைந்த புதிதில் எழுச்சி மிக்க இந்தியாவை உருவாக்கும் கடமை பள்ளிகளுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் இருந்ததை அவர் முழுமையாக உணர்ந்திருந்தார். எங்கள் பள்ளியில் இஸ்லாமிய மாணவிகள், ஜெயின் சமூகத்து மாணவிகள் என்று பல தரப்பட்ட பின்புலத்திலிருந்து மாணவிகள் படிக்க வந்திருந்தார்கள். எங்களை ஊக்குவித்து படிப்பு, பேச்சுப்போட்டி, விளையாட்டு, நடனம், பாட்டு, தையல்கலை என்று எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். 

""அந்த காலத்திலேயே வெளியூர் பள்ளிகளுக்குச் சென்று விளையாட்டுப் போட்டிகளில் நாங்கள் கலந்து கொண்டிருக்கிறோம். டவுன்ஹாலில் கலை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறோம். தரையில் தெரியும் பொத்தல்களைப் பார்க்காமல் வானத்தில் தெரியும் தாரகைகளை பார்க்கவேண்டும்'' என்று சொல்லி எங்களை வழி நடத்தினார் லீலாவதி. 

அறிவியல் ஆராய்ச்சிக்கென்று ஒரு சிறிய ஆய்வுக்கூடத்தைக் கூட ஏற்படுத்தியிருந்தார். பின்புறம் இருந்த மாட்டுக் கொட்டகையையும் பயன்படுத்தி பாட்டு வகுப்புகள் நடத்துவார். 

மொழியியல் பயிற்சிக்காக இங்கிலாந்து சென்ற அவர் மீண்டும் திரும்பி வந்து பள்ளிக் கல்வி துணை இயக்குநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். வயதுக்கும் மனதுக்கும் தொடர்பில்லை என்று நிரூபித்த அவர் ராணிமேரிக் கல்லூரியின் நூறாவது ஆண்டு நினைவு மலரில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அப்போது அவருக்கு வயது 96. சமீபத்தில் தனது 101-ஆவது  வயதில் மறைந்து போன அவரது அர்ப்பணிப்பு என்றும் எங்கள் நினைவில் நிலைத்து நிற்கும். 

ஓய்வு பெற்ற ஆங்கிலத்துறை பேராசிரியர் சென்னைப் பல்கலைக்கழகம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு: ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை

கருப்பசாமி கோயிலுக்கு 45 அடி உயர அரிவாள் காணிக்கை

2-ஆவது சுற்றில் சக்காரி, ஆஸ்டபென்கோ

சாலை விபத்தில் இளைஞா் பலி

‘பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிரான கட்சி அல்ல’ -பாஜக மாநில செய்தித் தொடா்பாளர்

SCROLL FOR NEXT