மகளிர்மணி

நாடாளும் மங்கையர்கள்...

28th Oct 2020 06:00 AM | - சுரேந்தர் ரவி

ADVERTISEMENT

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நியூஸிலாந்தில் அண்மையில் நடைபெற்ற பிரதமர் பதவிக்கான தேர்தலில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜெசிந்தா ஆர்டன் இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

கடந்த 2017- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது அவர் தலைமையிலான தொழிலாளர் கட்சி குறைந்த இடங்களையே கைப்பற்றியது. எனினும், பல்வேறு கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசை அவர் ஏற்படுத்தினார். அக்கூட்டணிக்குத் தலைவராகவும் அவர் செயல்பட்டார்.

தற்போது பெரிய அளவில் வெற்றி பெற்று, நியூஸிலாந்தின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரானப் போராட்டத்தில் திறம்பட செயல்பட்டதன் காரணமாகவே தேர்தலில் அவர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வேளையில், உலகிலுள்ள நாடுகளில் அரசாங்கங்களுக்குத் தலைமையேற்கும் மகளிர் குறித்த விவரங்களை இங்குக் காண்போம்.

ADVERTISEMENT

ஷேக் ஹசீனா (73)

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தின் பிரதமராகக் கடந்த 2009- ஆம் ஆண்டு முதல் ஷேக் ஹசீனா பதவி வகித்து வருகிறார். அவர் வங்கதேசத்தின் முதல் அதிபரான முஜிபுர் ரகுமானின் புதல்வி ஆவார். வங்கதேசத்தை நீண்டகாலம் ஆட்சி செய்த பிரதமர் என்ற பெருமை ஷேக் ஹசீனா வசமே உள்ளது. அந்நாட்டின் பிரதமராக நான்கு முறை அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஏஞ்சலா மெர்கல் (66)

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியின் பிரதமர் பதவியைக் கடந்த 2005- ஆம் ஆண்டு முதல் வகித்து வருகிறார், ஏஞ்சலா மெர்கல். அந்நாட்டின் பிரதமராகத் தொடர்ந்து நான்கு முறை அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலக அரங்கில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற பெண் தலைவர்களில் ஒருவராகவும் மெர்கல் திகழ்ந்து வருகிறார். ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

சாய் இங் வென் (64)

சீனாவின் ஆளுகைக்கு உள்பட்டிருந்தாலும் சுயாட்சி அதிகாரம் பெற்ற தைவானின் அதிபர் பதவியை வகிப்பவர் சாய் இங் வென். கடந்த 2016- ஆம் ஆண்டு முதல் அப்பதவியை அவர் வகித்து வருகிறார். தைவானின் முதல் பெண் அதிபர் இவரே. அரசியலில் நுழையும் முன் சட்டப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். சட்டப் படிப்பில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

எர்னா சோல்பெர்க் (59)

நார்வேயின் பிரதமராக கடந்த 2013- ஆம் ஆண்டு முதல் எர்னா சோல்பெர்க் பதவி வகித்து வருகிறார். அவரை அந்நாட்டு மக்கள் "இரும்புப் பெண்மணி' என்று அழைக்கின்றனர். கடந்த 1979- ஆம் ஆண்டு முதல் அவர் அரசியல் களத்தில் பணியாற்றி வருகிறார்.

மியா மோட்லி (55)

கரீபிய தீவுக்கூட்ட நாடுகளில் ஒன்றான பார்படோஸின் பிரதமர் மியா மோட்லி. கடந்த 2018- ஆம் ஆண்டில் அப்பதவியை ஏற்ற அவரே, பார்படோஸின் முதல் பெண் பிரதமர். அந்நாட்டு அரசுக்கான தலைமை வழக்குரைஞராகவும் அவர் பணியாற்றியுள்ளார். கடந்த 1991- ஆம் ஆண்டு முதல் அரசியலில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

சாரா குகோன்கெல்வா (53)

ஆப்பிரிக்க நாடான நமீபியாவின் முதல் பெண் பிரதமர் சாரா குகோன்கெல்வா. அவர் கடந்த 2015- ஆம் ஆண்டு முதல் அப்பதவியை வகித்து வருகிறார். கடந்த 1995- ஆம் ஆண்டு முதல் நமீபியா நாடாளுமன்றத்தின் உறுப்பினராக அவர் உள்ளார். பாலின சமத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் தலைவராக அவர் விளங்குகிறார்.

ஏனா பிரனாபிக் (45)

ஐரோப்பிய நாடான செர்பியாவின் பிரதமர் ஏனா பிரனாபிக். கடந்த 2017- ஆம் ஆண்டு முதல் அப்பதவியை அவர் வகித்து வருகிறார். செர்பியாவின் முதல் பெண் பிரதமர் அவரே. "ஃபோர்ப்ஸ்' இதழ் கடந்த ஆண்டு வெளியிட்ட உலகின் அதிகாரமிக்க பெண் தலைவர்கள் பட்டியலில் அவர் 88- ஆவது இடத்தைப் பிடித்திருந்தார்.

கேத்ரின் ஜேகப்ஸ்தோதிர் (44)

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்தின் பிரதமராக கடந்த 2017- ஆம் ஆண்டு முதல் உள்ளார் கேத்ரின் ஜேகப்ஸ்தோதிர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அல்லது அரசின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பெண்களுக்கான சர்வதேச கவுன்சிலின் தலைவராக கேத்ரின் கடந்த பிப்ரவரி மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் களத்தில் பங்கேற்பதற்கு முன்பாக ஐஸ்லாந்து நாட்டின் அரசு தொலைக்காட்சி நிறுவனத்தில் அவர் பணியாற்றினார்.

மேட் பிரடெரிக்சென் (42)

டென்மார்க்கின் பிரதமராக கடந்த 2019- ஆம் ஆண்டு முதல் மேட் பிரடெரிக்சென் பதவி வகித்து வருகிறார். அந்நாட்டின் மிக இளவயது பிரதமரும் அவரே. கடந்த 2000- ஆம் ஆண்டு முதல் அரசியலில் மட்டுமே அவர் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

ஜெசிந்தா ஆர்டன் (40)

நியூஸிலாந்தின் பிரதமராக முதன் முறையாகக் கடந்த 2017- ஆம் ஆண்டு பொறுப்பேற்றார், ஜெசிந்தா ஆர்டன். அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அரசின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றார். அப்போதைய காலகட்டத்தில் ஒரு நாட்டின் அரசாங்கத்துக்குத் தலைமையேற்கும் மிக இளவயதுப் பெண் என்ற சாதனையை அவர் நிகழ்த்தினார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கும்போது, மகப்பேறடைந்த இரண்டாவது பெண் என்ற சிறப்பும் அவருக்கு உள்ளது.

ஜெசிந்தா ஆர்டன் ஒரு முறை தொலைக்காட்சி சேனலுக்கு நேரலையில் பேட்டியளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறிய அளவிலேயே நிலநடுக்கம் உணரப்பட்டது. அப்போது பதற்றமடையாத ஆர்டன், நிலநடுக்கத்தால் அங்கு எந்தவித பிரச்னையும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்தபிறகு தொடர்ந்து பேட்டியளித்தார்.

சன்னா மரின் (34)

ஸ்கேண்டினேவியன் நாடுகளில் ஒன்றான ஃபின்லாந்தின் பிரதமராகக் கடந்த 2019- ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார் சன்னா மரின். உலக அளவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவராக மிக இளவயதில் பதவியேற்ற பெண் அவராவார். அவரது தலைமையில் அமைந்த 19 பேர் கொண்ட அமைச்சரவையில் 12 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். சன்னா மரினின் குடும்பத்தில் யாருமே கல்லூரி சென்று படித்தது கிடையாது. அவர் தான் முதல் தலைமுறை பட்டதாரி ஆவார்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT