மகளிர்மணி

கர்ப்பிணிகளைப் பாதிக்கும் கரோனா!

வி.குமாரமுருகன்

கரோனா நோய்த் தொற்றால் உலகமே பல மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. சில நாடுகள் தளர்வுகளுடன் பல பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கரோனாவுடன் வாழப் பழகுவதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என உலக நாடுகள் தெரிவித்து விட்டன. தடுப்பு மருந்துகளைக் கண்டறிவதற்கான சோதனைகளை முடுக்கி வருகின்றன. கரோனா தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கர்ப்பிணிப் பெண்கள் எவ்வாறு தன்னையும், தனது வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து, நம்மிடம் விவரிக்கிறார் கதிரியக்கவியல் நிபுணரும், கரு அல்ட்ரா சவுண்டில் ஃபெல்லோஷிப் பெற்றவரும், பிரபல மருத்துவமனையின் கன்சல்டன்டுமான டாக்டர் மீனாட்சி பரமசிவன்:

""கர்ப்பம் தரித்த பெண்களுக்குப் பிறரை விட கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புகள் சற்றே அதிகம். கர்ப்ப காலத்தில் அவர்களுக்கு எதிர்ப்புசக்தி குறைவு என்பதைத் தாண்டி, பிறரைப் போல் அவர்களால் வீட்டுக்குள் அடைந்திருக்க முடி வதில்லை. மாதாந்திர மருத்துவப் பரிசோதனைகளுக்காக அவர்கள் மருத்துவமனையை அணுக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். மகப்பேறு மருத்துவருடனான கன்சல்டேஷன் தொடங்கி ரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் ஆகியவற்றுக்காக ஆஸ்பத்திரி படையெடுப்புகள் மற்றும் காத்திருப்புகள் தவிர்க்க முடியாதவைகளாகின்றன. இதனால் இவர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்பும், கரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பும் கணிசமாக அதிகரிக்கின்றது என்பது கசப்பான உண்மை.

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் கரோனா தொற்று பலருக்கும் சாதாரண ஃப்ளு காய்ச்சல் போல் சற்றே லேசான அறிகுறிகளுடன் வந்து போய்விடுவது மனதுக்கு ஆறுதலான விஷயம். அதிதீவிர கரோனா தொற்றோ, கரோனா தொற்றின் பிற சிக்கல்களோ கர்ப்பிணிகளுக்கு பிறரைக் காட்டிலும் அதிகம் ஏற்படுவதில்லை.

ஆனால், கர்ப்ப காலத்திலும், பிரசவத்தின்போது கரோனாவினால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன - கருச்சிதைவு, குறைப்பிரசவம் தொடங்கி கர்ப்பிணிப் பெண்களின் பிரசவகாலத்து மரணங்கள் வரை நிகழக்கூட வாய்ப்புகள் உள்ளன. இவற்றிலிருந்து கர்ப்பிணிகளைப் பாதுகாப்பது எப்படி? எல்லா நோய்களையும் போல் கரோனாவும் வருமுன் காப்பதே சிறந்தது.

வெளியூர்ப் பயணங்கள் மற்றும் பொது இடங்களைத் தவிர்ப்பது, பலரையும் சந்திப்பதைத் தவிர்ப்பது, பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகள் செல்லும்போது முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை சோப்பு மற்றும் நீரால் கழுவுவது என கரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை கர்ப்பிணி பெண்கள் மேற்கொள்வது கட்டாயமாகும்.

நஞ்சுக்கொடி என்றழைக்கப்படும் பிளாசெண்டா வயிற்றில் இருக்கும் கருவுக்கு அன்னையிடமிருந்து ஊட்டம் கொடுக்கும் உறுப்பு. அன்னையிடமிருந்து கருவுக்கு நஞ்சுக்கொடியின் மூலமாகவே ஆக்சிஜன், ஹார்மோன்கள், ஊட்டச்சத்துகள் தொப்புள்கொடி வழியாகச் செல்கின்றன. வளர்சிதை மாற்றப் பரிமாற்றங்கள் நடப்பதும் நஞ்சுக் கொடியால்தான். கரு வெளியேற்றும் கார்பன்டை ஆக்சைடை உள்வாங்கி அன்னையின் ரத்த ஓட்டத்தில் செலுத்துவதும் இந்த நஞ்சுக்கொடிதான்.

ஐஜி ஜி (IgG) எனப்படும் ஆன்டிபாடிகள், ஐந்திலிருந்து ஆறு மாதங்களில் அன்னையிடமிருந்து நஞ்சுக் கொடியின் வழியாக கருவுக்குள் சென்று நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகின்றன. ஆனால், ஐஜி எம் (IgM) எனப்படும் ஆன்டிபாடிகளால் நஞ்சுக்கொடியைத் தாண்ட முடிவதில்லை. அதனாலேயே கர்ப்ப காலத்தில் ஏற்படும் சில கிருமித்தொற்றுகள் குழந்தைக்கு ஆபத்தானதாக முடிகின்றது.

கர்ப்பகாலத்தின் ஒன்பது மாதங்களை மும்மூன்று மாதங்களாக மூன்று டிரைமெஸ்டர்களாகப் (trimester) பிரிப்போம். 9 மாதங்களில் முதல் மூன்று மாதங்கள் முதலாம் டிரைமெஸ்டர் (first trimester) எனப்படும். இதனை பீரியட் ஆப் ஆர்கனோஜெனிசிஸ் (period of organogenesis) / உறுப்பாக்கம் என்றழைப்போம். இந்த காலத்தில் தான் குழந்தையின் உடலில் அனைத்து உறுப்புகளும் செல் நிலையில் உருவாகும். இரண்டாம் மற்றும் மூன்றாம் ட்ரைமெஸ்டர்களில் (second & third trimesters) இந்த உறுப்புகள் எல்லாம் வளர்ச்சி அடைந்து அளவில் பெரிதாகும்; இந்த ஆறு மாதங்களில் புதிதாய் செல்கள் உருவாவதில்லை. முதல் மூன்று மாதங்களில் கர்ப்பிணியின் உடலில் ஏற்படும் கிருமித்தொற்று கருவைத் தாக்கினால் அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.

முதல் மூன்று மாதங்களில் கர்ப்பிணியின் உடலில் ஏற்படும் கிருமித்தொற்று நஞ்சுக்கொடியைத் தாண்டி கருவை அடைந்தால், அது கருவுக்கு ஆபத்தாக முடியும். உதாரணமாக ஹெர்பிஸ் சிம்ப்லெஸ் வைரஸ், சைட்டோ மேகலா வைரஸ், ரூபெல்லா, பார்வோ வைரஸ், ஹெச்.ஐ.வி. வரிசெல்லா, வெஸ்ட் நைல் வைரஸ் மற்றும் மீசல்ஸ் போன்ற வைரஸ்களைக் குறிப்பிடலாம். இந்த வைரஸ்கள் அனைத்தும் நஞ்சுக்கொடியை தாண்டி கருவைத் தாக்கும் திறன் கொண்டவை. அதனால் அக்குழந்தைகள் பிறவி நோய்த் தொற்றுடனோ அல்லது பிறவிக் குறைபாடு கொண்டு பிறக்க வாய்ப்புகள் அதிகம்.

கரோனா வைரஸ் எப்படி ?

அனைத்து வைரஸ் கிருமித்தொற்றுகளைப் போல முதல் மூன்று மாதங்களில் கர்ப்பிணிகளைத் தாக்கும் கரோனா வைரஸ் சற்று அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறதாம்.

இந்தியாவில் நடந்த ஆய்வுகளின்படி கரோனா வைரஸ் நஞ்சுக்கொடியைத் தாக்கும் சக்தியுடையதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுவே கருச்சிதைவு ஏற்பட காரணம் ஆகிறது. கரோனா பாதித்த கர்ப்பிணி பெண்களுக்கு, RT}PCR டெஸ்ட் நெகட்டிவ் ஆன பிறகும், நஞ்சுக்கொடியில் கரோனா வைரஸ் கிருமிகள் உயிர்த்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

25.5% கரோனா பாசிடிவ் கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவம் ஆவதாக புளோரிடா யூனிவர்சிட்டி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கரோனா பாதித்த கர்ப்பிணிகளில் இருபதில் ஒரு குழந்தைக்கு அன்னையிடமிருந்து கரோனாத் தொற்று பரவுவதாக யுகே மரியன் குழுவின் "நைட்' ஆய்வு தெரிவிக்கிறது.

கரோனா பாதித்த கர்ப்பிணிகளின் பிரசவகாலத்தில் ஏற்படும் மரணங்களில் எல்லா மரணங்களும் கரோனாவினால் மட்டும் ஏற்படுவதில்லை என்பதும் அமெரிக்கா, லண்டன் உட்பட உலகின் பல பகுதிகளிலும் நடந்த ஆய்வு முடிவுகள் சொல்லும் உண்மை. உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றின்படி கரோனா தொற்று ஏற்பட்ட பெண்களின் பனிக்குட நீரிலோ தாய்ப்பாலிலோ வீரியமுள்ள கரோனா கிருமி கண்டறியப்படவில்லை. வெர்டிகல் ட்ரான்ஸ்மிஸன் எனும் நேரடி கிருமித் தொற்று தாயிடமிருந்து கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு பரவுவதற்கான ஆதாரங்களோ சான்றுகளோ சிறிதளவே உள்ளன..

கர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா தொற்று இருந்தால் அவர்கள் குழந்தைக்கு கரோனா தொற்று வருதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது.

தாய்ப்பால் வழியே குழந்தைகளுக்கு கரோனா தொற்று பரவும் என்பதற்கான ஆதாரம் இல்லை. எனினும், கைகளைச் சுத்தம் செய்வது, பாலூட்டும்போது மாஸ்க் அணிவது, பாலூட்டும் போது இருமல், தும்மல் ஆகியவற்றைத் தவிர்ப்பது, மார்பக பம்ப் பயன்படுத்துபவர்கள் அதனை முறையாகச் சுத்தம் செய்வது போன்ற நடைமுறைகளை தாய்மார்கள் பின்பற்ற வேண்டும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT