மகளிர்மணி

தயாள குணம்!

14th Oct 2020 06:00 AM | - வி .குமாரமுருகன்

ADVERTISEMENT


திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். ஆனால் பெரும்பாலான ஏழைக் குடும்பங்களில் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது என்பது மிகச் சிரமமான காரியமாகவே இன்றளவும் இருந்து வருகிறது. பெண்களின் திருமணங்கள் தள்ளிப் போவதற்கு காரணங்கள் பல இருந்தாலும் கூட பல திருமணங்கள் பொருளாதார சூழ்நிலையால் தள்ளிப் போகின்றன என்பதே உண்மை.

இந்நிலையில் திருமணம் நடத்த இயலாமல் சிரமப்படும் குடும்பங்களை கண்டறிந்து அத்தகைய பெண்களுக்கு சிறிய அளவில் திருமணத்தை நடத்தி வைத்து அவர்களுக்கு தேவையான, அதாவது குடும்பம் நடத்துவதற்கு தேவையான பொருட்களையும் வழங்கி வருகிறார் ஒரு கிராமத்துப் பெண்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள நெடுவயலைச் சேர்ந்த சுதா என்பவர் தான் அந்த பெருமைக்கு சொந்தக்காரர். இந்தப் பணிகளை கடந்த பல ஆண்டுகளாக அவர் சப்தமின்றி செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சன் சாரிட்டபிள் டிரஸ்ட் என்பதை உருவாக்கி அதன்மூலம் இப்பணியைச் செய்யத் தொடங்கியிருக்கிறார். அரிமா சங்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டு பல்வேறு சேவைகளை செய்துவரும் சுதாவை சந்தித்துப் பேசினோம்..

ADVERTISEMENT

""பொதுவாக பிரச்னைகள் இல்லாத மனிதனும், சமூகமும் இருக்க முடியாது. எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும். அத்தகைய தீர்வுகளை சொல்பவர்கள் சமூகத்தில் அதிகம் பேர் உள்ளனர். ஆனால் உதவி செய்பவர்கள் அந்த அளவிற்கு இல்லை. அதே சமயம் உதவி செய்பவர்களின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்து விட்டால் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுவிடும்.

என்னைப் பொருத்தவரை கல்வி கற்க நிதியின்றி சிரமப்படும் மாணவர்களுக்கு, குறிப்பாக மாணவிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இந்த சேவையை தொடங்கினேன். எனது கணவர் நாராயணன் தனது வருவாயில் 22 சதவீதத்தை எனக்கு அளித்து வருகிறார். நான் எனது வருவாயில் 22 சதவீதத்தை அதனுடன் சேர்த்து அதன் மூலம் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். இதன் மூலம் சில மருத்துவ மாணவிகளும் பயனடைந்துள்ளனர்.

தொடர்ந்து பொருளாதார ரீதியாக சிரமப்படும் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு தையல்மெஷின்களை வழங்கும் பணியை தொடங்கினேன். இதனால் பலர் பயனடைந்துள்ளனர். அவர்கள் சொந்த காலில் நிற்பதற்கு இது பெரும் உதவியாக அமைந்து வருகிறது.

வறுமை நிலையின் காரணமாக பல இளம் பெண்களுக்கு திருமணம் செய்ய இயலாத நிலை  இருந்து வருகிறது. அவர்களுக்கும் நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த சில ஆண்டுகளாக அத்தகைய உதவி தேவைப்படும் பெண்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதுடன் அவர்கள் குடும்பம் நடத்துவதற்கு தேவையான குறைந்தபட்ச பொருள்களையும் வாங்கிக் கொடுத்து வருகிறேன். இது எனக்கு மிகவும் மன நிறைவாக இருந்து வருகிறது'' என்றார் சுதா.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT