மகளிர்மணி

சமையல் சமையல்!

25th Nov 2020 06:00 AM | - காந்தி

ADVERTISEMENT

 

அப்பம் 

தேவையானவை:
அரிசிமாவு - 1 கிண்ணம்
வெல்லப்பொடி -  அரை கிண்ணம் 
நன்கு கனிந்த வாழைப்பழம் - 1
தேங்காய்த் துண்டுகள் - 2 தேக்கரண்டி 
ஏலக்காய்த் தூள் -  அரை தேக்கரண்டி 
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:   அரை டம்ளர் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வாழைப்பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும். அரிசிமாவு, மசித்த வாழைப்பழம், தேங்காய்த் துண்டுகள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் வெல்ல நீரை விட்டு இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். தேவையானால் சிறிது நீரையும் சேர்த்துக் கொள்ளலாம். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் ஒரு தேக்கரண்டி மாவை எடுத்து ஊற்றவும். பொன்னிறமாக சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும்.

ADVERTISEMENT

குறிப்பு: அரிசி மாவிற்குப் பதில், மைதா அல்லது கோதுமை மாவிலும், ரவாவிலும் கூட இந்த அப்பத்தை செய்யலாம். அல்லது எல்லா மாவிலும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்தும் செய்யலாம். வெல்லத்திற்கு பதில் சர்க்கரையையும் பயன் படுத்தலாம். அப்பம் வெள்ளையாக இருக்கும். மேலும், இதை எண்ணெய்யில் பொரித்தெடுப்பதற்குப் பதில், குழிப் பணியாரச் சட்டியிலும் பணியாரம் செய்வதுபோல் சுட்டெடுக்கலாம்.


கருப்பட்டி கொழுக்கட்டை 


தேவையானவை:
பச்சரிசி மாவு - 3 கிண்ணம்
கருப்பட்டி அல்லது வெல்லத்தூள் - 2 கிண்ணம்
ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
சுக்குப்பொடி -  அரை தேக்கரண்டி 
தேங்காய்த்துருவல் - 1 கிண்ணம்

செய்முறை: கருப்பட்டியில் அரை கிண்ணம் தண்ணீரைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பச்சரிசி மாவுடன் ஏலக்காய்த் தூள், சுக்குப்பொடி, தேங்காய்த்துருவல், கருப்பட்டி நீர் ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். மாவு மிகவும் கெட்டியாக இல்லாமல் சிறிது குழைவாக உள்ளவாறு நீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.  பின்னர்  கொழுக்கட்டை  அச்சில்  மாவை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து எடுத்து,  இட்லி தட்டில் வைத்து 15 அல்லது 20 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். 

 

கார்த்திகை பொரி 


தேவையானவை:
அவல் பொரி - 8 கிண்ணம்
வெல்லம் பொடி செய்தது - 2 கிண்ணம்
பொட்டுக்கடலை - ஒரு கிண்ணம்
தேங்காய் - ஒரு மூடி
ஏலக்காய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
சுக்குப்பொடி - அரை தேக்கரண்டி

செய்முறை: தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டி வெறும் வாணலியில் போட்டு சிறிது சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும். 

பொரியை நன்றாக புடைத்து அல்லது சலித்து, சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த பொரி, பொட்டுக்கடலை இரண்டையும் ஒன்றாகக் கலந்துக் கொள்ளவும்.  அடி கனமான ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் அரை டம்ளர் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதை வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி கெட்டிப் பாகு காய்ச்சவும். சிறிது பாகை தண்ணீரில் விட்டால், அது கரையாமல் அப்படியே கெட்டியாக இருக்கும். அதை கைகளால் எடுத்து உருட்டினால் உருட்ட வரும். இதுதான் சரியானப் பதம். இப்பொழுது அதில் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, தேங்காய்த்துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்து கிளறி, கீழே இறக்கி வைக்கவும். உடனே அதில் பொரியைக் கொட்டி நன்றாகக் கிளறி விடவும். பொரி சூடாக இருக்கும் போதே உருண்டைப் பிடிக்கவும். ஆறினால் பிடிக்க வராது. உருண்டைப் பிடிக்க வரவில்லை என்றால், அப்படியே உதிரியாக விட்டுவிடவும். இதுதான் கார்த்திகைப் பொரி.

குறிப்பு: நெல்பொரியிலும் மேற்கண்டப் பொரியைச் செய்யலாம். 

 

கடலை உருண்டை 


தேவையானவை: 
வேர்க்கடலை -  1கிண்ணம்
வெல்லம் - அரை கிண்ணம்
தண்ணீர் - அரை கிண்ணம்
நெய் - தேவைக்கேற்ப

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில், வேர்க்கடலையை மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். ஆறவைத்து, நன்கு உள்ளங்கைகளால் தேய்த்து, தோலை முற்றிலுமாக நீக்கி விடவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில், வெல்லம், தண்ணீர் சேர்த்து, வெல்லத்தை கரைக்கவும்.  வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும். மீண்டும் பாத்திரத்தை நன்கு கழுவி விட்டு, வெல்லப் பாகை காய்ச்சவும். ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீர் வைத்து, பாகுபதம் வந்து விட்டதா என்று பார்க்கவும். சிறு துளிகளை ஊற்றி, விரல்களால் உருட்ட முடிய வேண்டும். இதுதான் சரியான பதம். அடுப்பிலிருந்து இறக்கி, வேர்க்கடலையைச் சேர்க்கவும். கரண்டி காம்பினால் கிளறவும். கையில் நெய் தடவிக்கொண்டு, சிறிது சிறிதாக எடுத்து, உருண்டைகளாக, கெட்டியாக உருட்டவும். இறுதியில் பாத்திரத்தில் கலவை கெட்டியாகும் போது, லேசாக அடுப்பில் வைத்து சூடு செய்தால் இளகிவிடும், மீண்டும் உருட்டி விடலாம். 

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT