மகளிர்மணி

முகவரி தந்த இயற்கை விவசாயம்!

25th Nov 2020 12:00 AM | - பிஸ்மி பரிணாமன் 

ADVERTISEMENT


""படித்தது அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக பொறியியல் படிப்பு என்றாலும் "இப்போது வாழ்க்கையை படித்துக் கொண்டிருப்பது சேறும் சகதியும் நிறைந்த வயலில், ஆம். இயற்கை முறையில் வேளாண்மை செய்யும் விவசாயி நான்'' என்று பெருமை பூக்கச் சொல்லும் அர்ச்சனா இளையதலைமுறைக்கு மட்டுமல்ல நகர்ப்புற சமுதாயத்துக்கும் ஒரு திருப்புமுனையாக மாறியிருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது:

""பொறியியல் படிப்பை முடித்து கணினி நிறுவனத்தில் பணி புரிந்து வந்தாலும் எங்களது தேடல் வேறு என்பதை புரிந்து கொண்டு நானும் கணவர் ஸ்டாலின் காளிதாசும் இயற்கையின் பக்கம் வந்தோம். "பிடெக் படித்துவிட்டு யாராவது விவசாயம் பக்கம் போவார்களா' என்று பலரும் குறை சொன்னார்கள். இப்படி எங்கள் பயணம் திசை மாறியதற்கு காரணம், 2014 -இல் "ஜாக்ரிதி யாத்ரா'வில் பங்கு பெற்று இந்தியா முழுவதும் முக்கிய இடங்களுக்குச் சென்று சமூக பங்களிப்பு செய்துவரும் பிரபலங்களை சந்தித்ததுதான்.

"தூங்கும் போது காணுவதல்ல கனவு .. நம்மை தூங்க விடாமல் இலக்கை அடையச் செய்யும் முயற்சி கனவாக இருக்க வேண்டும்' என்ற கலாமின் சொற்கள் என்னைத் தூண்டிக் கொண்டே இருந்தன. இதனால், குளங்களை தூர் வாருதல், மாடியில் தோட்டம் என்று முதல் அடி எடுத்து வைத்தோம். சென்னையில் சுமார் நூறு வீடுகளில் மாடித்தோட்டம் அமைத்துக் கொடுத்தேன்.

பின்னர், வயலை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். எனக்கும் சரி .. கணவருக்கும் சரி .. சொந்தமாக நிலமில்லை. நாங்கள் வசிப்பது சென்னை போரூரில். திருவள்ளூர் பக்கம் இரண்டு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தோம். அக்கம்பக்க விவசாயிகளிடம் பேசினோம்.

ADVERTISEMENT

"சின்ன வயசு... பொழுது போகாம ஏதோ வயல், பண்ணை, இயற்கை விவசாயம்னு பேசறாங்க..' என்றுதான் அவர்கள் முதலில் நினைத்தார்கள். எங்கள் ஆர்வத்தை மூத்த தலைமுறை விவசாயிகளை விட இளைய தலைமுறை விவசாயிகள் புரிந்து கொண்டு, துணை நின்றார்கள்.

வருஷம் இரண்டு அறுவடை.. வருஷம் இரண்டு முறை வருமானம்.. என்ற விவசாயத்தின் விதியை மாற்றி, வாரத்திற்கு, மாதத்திற்கு வருமானம் உண்டாக்க வேண்டும் என்று நினைத்தோம். இதன் காரணமாக, மூன்று ஆண்டுகளுக்கு முன் "மை ஹார்வெஸ்ட்' என்ற பெயரில் கூட்டு வேளாண்மையைத் தொடங்கினோம்.

இன்று மாப்பிள்ளை சம்பா, நவரா, தூயமல்லி, சொர்ணமசூரி நெல் சாகுபடியிலிருந்து பல தானியங்களைப் பயிர் செய்தல் பலவித கீரைகள், காய்கறிகள் பயிர் செய்தோம்.

"மை ஹார்வெஸ்ட்' குழுவில் தற்போது, அறுபது இளைஞர்கள் உள்ளார்கள். சுமார் 350 குடும்பங்களுக்கு ரசாயன உரம் கலக்காத நஞ்சு இல்லாத காய்கறிகளை வாரம் ஒருமுறை விநியோகிக்கிறோம். அரிசிகளை ஐந்து கிலோ என்ற அளவிற்கு எங்களால் விநியோகிக்க முடிகிறது.

நஞ்சில்லா காய்கறிகள்தான் எங்களுக்கு முகவரியைத் தந்திருக்கிறது. நாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை பயன்படுத்துபவர்கள் கடைகளில் வாங்கும் காய்கறிகளிலிருந்து சுவையில் தரத்தில் மேம்பட்டு இருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டுள்ளார்கள்.

இதைத்தவிர, நாட்டுக் கோழிப்பண்ணை, துணிகள் சலவை செய்ய, தரையை சுத்தம் செய்ய ரசாயனம் சேர்க்காத இயற்கையான பொருள்களைச் சேர்த்து செய்த "பயோ என்ûஸம்' என்று எங்களது பயணம் தொடர்கிறது.

மேலும், சுயநம்பிக்கை தரும் பேச்சாளராகவும், பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு, வேளாண்மை குறித்த அடிப்படை அறிவை ஊட்டும் விதமாகவும் வகுப்புகள் எடுத்து வருகிறேன். இப்போது ஆன்லைனில் வகுப்புகள் நடத்தி வருகிறேன்.

மாடித் தோட்ட செடிகளுக்கு காய்கறிக் கழிவுகளை எப்படி உரமாக்கலாம் என்பதைச் சொல்லிக் கொடுக்க, பல சிறார்கள் அதை செயல்படுத்திக் காட்டி காணொளிகளை எனக்கு அனுப்புகின்றனர். அதே போல் துணி துவைக்க, தரையை சுத்தம் செய்ய "பயோ என்ûஸம்' தயாரிப்பது எப்படி என்பதைச் சொல்லிக் கொடுக்க பல சிறார்கள் அதை தயாரித்தும் விட்டனர்.

"பால் எங்கேயிருந்து கிடைக்கிறது'' என்று கேட்டால் விடை தெரியாமல் நிற்கும் குழந்தைகளுக்கு பசுவிலிருந்து ஆரம்பித்து அதன் சாணம், கோமியத்துடன் வேப்பெண்ணெய் கலந்த இயற்கை பூச்சி விரட்டியை உருவாக்குவது வரை சொல்லிக் கொடுக்கிறோம்.

வெளிநாட்டில் வேலை, கைநிறையச் சம்பளம், சொந்த வீடு என்று சுகமாக வாழலாம் என்பதே பலரும் நினைப்பது. அதை நானும் செய்ய முடியும். ஆனால், அவர்களால் நஞ்சில்லாத அரிசி வகைகள், காய்கறிகளை விளைவித்து தானும் உண்டு பிறருக்கும் தர முடியுமா? விவசாயிகளை மகிழ்ச்சியாக வைக்க முடியுமா? எனது தேடல் வேறு. லட்சியம் வேறு'' என்கிறார் அர்ச்சனா.

ADVERTISEMENT
ADVERTISEMENT