மகளிர்மணி

கதை சொல்லும் குறள்: நட்பும் பறந்துபோம்! - 2

18th Nov 2020 06:00 AM | சாந்தகுமாரி சிவகடாட்சம்

ADVERTISEMENT


சென்னை நகரம் வழக்கம்போல சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. வங்கக்கடலின் ஓரமாக அமைந்திருந்த மீனவர்கள் வாழும் குடியிருப்புகள், சுனாமியின் தாக்குதலுக்குப் பின் மீனவக் குடும்பங்களுக்காக அரசாங்கம் கட்டிக் கொடுத்திருந்த அடுக்குமாடிக் கட்டடங்கள், "ஏ' பிளாக், "பி' பிளாக் என்று வரிசை கட்டி நின்றிருந்தன.

இதில் "சி' பிளாக்கின் கீழ்ப்பகுதியில் எஸ்தர், தன் கணவன் வேளாங்கண்ணியுடன் வாழ்ந்து வருகிறாள். கல்யாணம் ஆகி எட்டு வருடங்கள் ஓடி மறைந்துவிட்டன.

""இந்தக் கர்மத்த எங்கேயிருந்து புடிச்சிகிட்டு வந்தானோ தெரியல, வயத்திலே ஒரு புழு, பூச்சிகூட தங்கல'' என்று மாமியார் டெய்சி அப்பப்ப எஸ்தர் மனசுலே அமிலமாக வார்த்தைகளை வீசுவாள்.

""ஊம்... அவளைச் சொல்லி குத்தம் ஒண்ணும் இல்ல, இரண்டு சொந்த வலையும், இந்தக் குடியிருப்பும் இருக்கும் தன் ஒத்த மகனுக்கு இருபது சவரன் போட்டு கட்டிக் கொடுக்க அவளுடைய சொந்த அண்ணன் மகள் காந்திருந்த
போது, காதல் என்ற பெயரில் ஒரு குண்டுமணி தங்கம் இல்லாமல், மருமகளாக வந்த எஸ்தரை பிடிக்காமல் போனது நியாயம்தானே' என்று தன் உள்ளக் குமுறல்களை எஸ்தர் அடக்கிக் கொள்வாள்.

ADVERTISEMENT

வேளாங்கண்ணி அன்பான கணவன்தான், ஆனால் அடிக்கடி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுவிடுவான். இரண்டு நாள்கள் என்று தொடங்கி பல சமயங்களில் நான்கு நாள்கள் என்று அவன் பயணம் நீண்டுவிடும். மாமியார் கிழவியின் ஏச்சும் பேச்சும், வேளாங்கண்ணி இல்லாத நாட்களில் அதிகமாக இருக்கும்.

எஸ்தரின் புண்பட்ட மனதிற்கு, மருந்தாக இருப்பவள் அவளுடைய உயிர்த்தோழி கல்யாணியாக இருந்தாள். எஸ்தரைவிட ஐந்து வயசு மூத்தவளான கல்யாணி "டி' பிளாக்கின் இரண்டாவது தளத்தில் வாழ்ந்து வருகிறாள். அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவள் கணவன் சேகரும் மீன்பிடிக்கும் தொழிலைச் செய்பவன்தான்.

கல்யாணியின் இரண்டு பெண்களும், எஸ்தரை வாய்நிறைய சித்தி, சித்தி என்று அழைப்பார்கள். கல்யாணி இரண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்தியவள், எஸ்தரோ பத்தாம் வகுப்பை முடித்தவள். தன் கணவனுடைய செல்போனிலிருந்து, "யூ டியூபின்' மூலம் விதவிதமான சிகை அலங்காரங்களையும் அறிந்து, கல்யாணியின் பெண்களுக்கு அதேபோல சிகை அலங்காரங்களைச் செய்து விடுவாள். வீட்டுப்பாடங்களைச் செய்ய உதவுவாள்.

கல்யாணி சமையல் கலையில் கைதேர்ந்தவள். மொச்சையும், கருவாடும் போட்டு குழம்பு வைத்தால் அந்த ஏரியாவே மணக்கும். எஸ்தரை தன் வீட்டுக்கு அழைத்து வயிறு நிறையச் சோறு போடுவாள்.

கல்யாணியின் தலையைப் பார்த்துட்டாப் போதும், ""வந்துட்டா, சக்களத்தி'' என்று டெய்சி, அவளின் காதுபட சொல்லுவதை கல்யாணி சட்டை செய்யவே மாட்டாள். எஸ்தரை இழுத்துக்கொண்டு கடற்கரை ஓரமாக நடந்து செல்வாள். குச்சி ஐஸ்கிரீம், தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் என்று அவர்கள் சாப்பிடும் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இதில் சுட்ட சோளமும் சேர்ந்து கொள்ளும்.

எஸ்தர் தன் பங்கிற்கு, கணவன் தரும் கைப்பணத்தில், மாமியார் மீன் விற்கச் செல்லும் சமயங்களில், தள்ளுவண்டிக்காரன் கொண்டுவரும், ரிப்பன், வளையல், கழுத்துமணி, மிட்டாய்களை வாங்கி கல்யாணியின் பெண்களுக்குக் கொடுப்பாள்.

தன் மனக்குமுறல்களைக் கொட்டுவதற்கும், கல்யாணியை "அக்கா' என்று அழைத்து அவளின் பாசவலையில் கட்டுண்டு கிடப்பதையும், தன்னுடைய வாழ்க்கையில் தனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாக எஸ்தர் கருதினாள்.

சென்னை நகரத்து மக்கள் தண்ணீருக்காக நாயாக அலைந்து கொண்டிருந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சரியான மழை கிடையாது. சென்னையில் பருவமழை தவறியதற்கு பல காரணங்களை, வானிலை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து அளந்து கொண்டிருந்தனர்.

நிலத்தடி நீர் கைகொடுத்து வந்தது. உறிஞ்சி இழுக்கும் போர்வெல்களின் ஆதிக்கத்தில் அதுவும் பூமியின் ஆழத்தில் மறைந்துபோனது. மீனவக் குடியிருப்புப் பகுதியில் இந்த ஆழ்கிணறுகள் இப்பொழுது கடல்நீரையே குடிநீராக வழங்குகின்றன.

பணம் படைத்தவர்கள், லாரிகளில் நல்ல குடிநீரை வாங்கிப் புழங்கினர். வசதியில்லாதவர்கள் அரசாங்கம் வழங்கும் குடிநீருக்காக, பிளாஸ்டிக் குடங்களோடு அலைந்தனர். மழை வேண்டி பிரார்த்தனைகள், யாகங்கள், பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் எல்லாம் நடந்தேறி, சிலகாலமாக அவைகூட அடங்கிவிட்டன. பள்ளிகள், வருடாந்தர விடுமுறையை நீட்டிப் போட்டன. பல உணவகங்கள் மூடுவிழா நடத்தின.

எஸ்தர் தன் முன்னே இருந்த இரண்டு காலி பிளாஸ்டிக் குடங்களை எடுத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே வந்தாள்.

அவளுக்கு முன், தெருவில் பிளாஸ்டிக் குடங்கள் பல வண்ணங்களில் வரிசை கட்டி நின்றன. எல்லாப் பெண்களும் ஒன்றுகூடி இரண்டு நாள்களாக தண்ணீர் கொண்டுவராத லாரிக்காரனை வசைபாடிக் கொண்டிருந்தனர்.

பெண்களின் கூட்டம் ஒரு முடிவுக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டது. எஸ்தர் தான் கொண்டுவந்த பிளாஸ்டிக் குடங்களை வரிசையில் வைத்தாள். மறியல்காரர்களோடு அவளும் சேர்ந்து கொண்டாள்.

இரண்டு மணி நேர காத்திருப்புக்குப் பிறகு, தண்ணீர் லாரி வந்தது. பெண் போலீசார், வரிசையை ஒழுங்குபடுத்த தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. எஸ்தர் தன் முறைக்காகக் காத்திருந்தாள்.

திடீர் என்று கூட்டத்தில் சல சலப்பு. லாரிக்காரன் தண்ணீர் தீர்ந்துவிட்டது என்று சொல்லிவிட்டு, லாரியைக் கிளப்ப முயல, "இல்லை அதனுள் இன்னும் தண்ணீர் இருக்கிறது, அதை அவன் வெளியிடத்தில் விற்கிறான்' என்று யாரோ சொல்ல, லாரியின் மீது படபடவென்று கற்கள் விழத் தொடங்கின.

அவ்வளவுதான், போலீஸ் கூட்டத்தை ஒழுங்குபடுத்த தடியடி நடத்தியது. ஒரே களேபரம், பல குடங்கள் காலியாக உருண்டன. பல தண்ணீரோடு கவிழ்ந்தன. பெண்களில் பலர் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தனர், சிலர் போலீஸின் கைகளில் அகப்பட்டு அடிவாங்கிக் கொண்டிருந்தனர்.

எங்கிருந்தோ பறந்து வந்த கல் ஒன்று எஸ்தரின் நெற்றியில் பட ரத்தம், குபு, குபு என்று வழியத் தொடங்கியது.

"ஐயோ' என்று அலறியபடி எஸ்தர் நிமிர அங்கே கல்யாணி இடுப்பிலும், கையிலும் தண்ணீர் நிரம்பிய குடங்களோடு பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தாள். "அக்கா' என்று அலறினாள் எஸ்தர்.

நிமிர்ந்து எஸ்தரைப் பார்த்தாள் கல்யாணி. ஆனால் அவளின் கால்கள் நிற்கவில்லை. தண்ணீர்ப்பஞ்சம் நட்புக்கு விடை கொடுக்க வைத்துவிட்டது.

அவளைக் கைதூக்கிவிட்ட பெண் காவலர் ஒருவர் எஸ்தரிடம் சொன்னார் - "தண்ணீர் தண்ணீர்' படம் பார்த்திருக்கியா... தண்ணீர் படுத்தும் பாடு இது. பத்திரமா வீடுபோய்ச் சேரு...'

காலிக் குடங்களுடனும் கண்களில் வழியும் கண்ணீருடனும் வீடு திரும்பினாள் எஸ்தர்.

மாமியார் டெய்ஸியின் வசைகள் வழக்கம்போலப் பாய்ந்தன.

""இரண்டு நாளா வீட்டிலே குடிக்க சொட்டு தண்ணிக்கூட இல்லை. கேன் தண்ணியும் தீந்துப்போச்சு, போன் பண்ணினா இதோ கொண்டாறேன்னு கேன் போடறவன் ஆட்டம் காட்டறான், மூதேவிக்கு இரண்டு குடம் தண்ணீ புடிச்சாரக்கூட வக்கில்லை. புள்ள பெக்கத்தான் துப்பில்ல, இதுக்கு கூடவா!''

மாமியாரின் வார்த்தைகள் நெருப்புத் துண்டுகளாக எஸ்தரின் உள்ளத்தைச் சுட்டன.

நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

( குறள் எண் : 20)


பொருள் : உலகில் மழையில்லையென்றால் ஒழுக்கமே கெடக் கூடும் என்ற நிலை இருப்பதனால், நீரின் முக்கியத்துவத்தை அறிந்து, உணர்ந்து செயல்படவேண்டும்.

(தொடரும்)

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT