மகளிர்மணி

தன்னம்பிக்கை இருந்தால் சாதிக்கலாம்!

2nd Dec 2020 06:00 AM | - ஆர். ஆதித்தன்

ADVERTISEMENT

உலகில் சாதிக்க தன்னம்பிக்கை இருந்தால் மட்டும் போதும், எந்த தடைகளையும் உடைத்தெறிந்து சாதனைகளைப் படைக்கலாம் என்பதற்கு உதாரணமாக இருப்பவர் சேலத்தைச் சேர்ந்த  ஹோமியோபதி மருத்துவர் விஷ்ணுப்ரியா. மருத்துவத் துறையில் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் மாற்றுத் திறனாளியான  இவர், பிறவியிலேயே வலது கை விரல்கள் இல்லாமல் பிறந்திருந்தாலும்  தனியாக கார் ஓட்டி அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கிறார். சமுதாயத்தின் பார்வை குறித்தும், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியால் சமூகத்தில் கிடைத்த அங்கீகாரத்தையும் சிலாகித்து தன்னுடைய அனுபவங்கள் குறித்து கூறியது:

""நான் மதுரையில் பிறந்து வளர்ந்தேன். பின்னர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹோமியோபதி மருத்துவப் படிப்பை படித்தேன். மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே சேலத்தில் தனியார் மருத்துவமனையில் உதவி மருத்துவ அலுவலராக சேர்ந்தேன். இது என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

எந்த விஷயத்தை உன்னால் செய்ய முடியாது என்று கூறினார்களோ, அந்த விஷயத்தை சாதித்துக் காட்ட வேண்டும் என்பதில்  உறுதியாக  இருந்தேன். அப்படி என்னைப் பார்த்து உன்னால் முடியாது என்று கூறியவர்கள், இப்போது என்னைச் சந்திக்க நேரம் கேட்டு வந்த சம்பவமும் வாழ்க்கையில் மறக்க முடியாதது.

நான் கடவுள் அனுப்பிய தேவதையாக எனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். எனது பெற்றோர், சகோதரர், சகோதரி, நண்பர்கள் என அனைவரும் நட்பு பாராட்டி என்னை நான்கு சுவருக்குள் முடங்கி விடாமல் செயல்பட வைத்தவர்கள் என்பேன். மாற்றுத்திறனாளியாகப் பிறந்து மருத்துவம் படித்து வேலை செய்து வருகிறேன்.

ADVERTISEMENT

"நோ புட் வேஸ்ட்' என்ற அமைப்பில் பணிபுரிபவர்கள் முதுகெலும்பாக இருக்கிறார்கள் எனலாம். அவர்கள் மூலமாக கரோனா தொற்று காலத்தில் உணவின்றி தவித்தவர்களுக்கு உணவுகளை வழங்கினோம். தெருவோர நாய்களுக்கு உணவு வழங்கினோம். மேலும் கஞ்சமலை அடிவாரத்தில் உள்ள குரங்குகளுக்கு தேவையான உணவுகளை ஏற்பாடு செய்து வழங்கினோம்.

என்னைப் பொருத்தவரையில் கஜா புயலின்போது வேதாரண்யம் சென்று தங்கி மருத்துவம் பார்த்தது எனது வாழ்க்கையில் ஆத்ம திருப்தியாக உள்ளது. அதேபோல கரோனா வைரஸ் தொற்று பாதித்த பணக்காரர்கள் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றனர். ஆனால், ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளிலும், சிகிச்சை முகாம்களில் தங்கிதான் மருத்துவம் பார்த்துக் கொண்டனர்.

ஏழை, எளிய மக்களுக்கு சேவை புரியும் வகையில், சேலம் அரசு மருத்துவமனையில் தற்காலிக ஒப்பந்த பணியில் சேர்ந்து மருத்துவ சேவை பார்த்தேன். என்னால் முடிந்த உதவிகளை பலருக்கு செய்துள்ளேன். 

நான் படிக்கும் காலத்தில் டிவி பார்த்துக் கொண்டோ அல்லது  தோழிகளுடன் வெளியே சென்று பொழுதை கழித்ததில்லை. மாறாக முழு நேரமும் படித்துக் கொண்டு இருந்தேன். கிடைத்த வேலையை செய்து கொண்டிருந்தேன். 

இப்போது நான் சுதந்திரமாக உணர்கிறேன். போதிய அளவுக்கு சம்பாதிக்கிறேன். நான் பட்ட கஷ்டங்கள், வேதனைகள் அனைத்திலும் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன். இப்போது தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறேன். நான் பிறருக்கு ரோல் மாடலாக இருக்க விரும்புகிறேன். 

ஆண், பெண் இருவருமே சமம் தான். அதில் எந்த பேதமும் இருக்கக்கூடாது. நான் பெண்கள் மட்டும் பணிபுரியும் வகையில் ஆர்கானிக் நாப்கின் உள்ளிட்ட பல்வேறு வகையானப் பொருள்களை தயாரிக்கும் தொழிலை தொடங்க திட்டமிட்டுள்ளேன். அதேபோல ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் தீர்க்க முடியாத நோய்களுக்கு தீர்வுகாண ஆராய்ச்சி செய்து வருகிறேன். அதிலும் சாதிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார். 

படம் - வே.சக்தி

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT