இளைஞர்மணி

கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 42: பணம் படுத்தும் பாடு!

ஆர். நட​ராஜ்

பண மோசடி பல வகைப் பட்டது. முன்பெல்லாம் கள்ள நோட்டு அச்சடிப்பு, வங்கி மற்றும் நிதி நிறுவன காசாளர் பணம் கையாடல் செய்ததாக செய்தி அவ்வப்போது வரும். ஆனால் காலப்போக்கில் பண மோசடி பரிணாம வளர்ச்சி பெற்று விட்டது. ஆராய்ச்சி செய்து திருடுகிறார்கள்!

பற்று வைத்து செலவு செய்வது காலம் காலமாக நடக்கும் பழக்கம். திடீர் விருந்தாளி வந்துவிட்டால் அவசரத்திற்கு பக்கத்து வீட்டில் காப்பித்தூள் சர்க்கரை வாங்கி பிறகு திருப்பி கொடுப்பார்கள். குடும்பப் பெண்களுக்குள் நடக்கும் பண்டக பரிமாற்றம் சுமுகமாக நடக்கும். இதுதான் க்ரெடிட் கார்டின் அடிப்படை! முதலில் செலவு செய்ய கடன். அதை குறிப்பிட்ட காலத்திற்குள் அடைத்து விட வேண்டும். இதனை முதலில் கண்டுபிடித்து நடைமுறை படுத்தியவர் "ப்ளாட்புஷ் நேஷனல் பேங்க் ‘ நிறுவனர் ஜான் பிக்கினஸ் என்பவர். 1946 ஆம் வருடம் அமெரிக்காவின் ப்ரூக்லின் நகரில் தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகையை அளித்தார். குறிப்பிட்ட கடைகளில் அவர்கள் பணம் கொடுக்காது பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம். கடைக்காரர்கள் வங்கிக்கு பில் அனுப்பி உரிய பணத்தை பெற்றுக் கொள்வார்கள். வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கி பில் அனுப்பி பணத்தை பெற்றுக் கொள்ளும். 1958 -இல் எல்லா வங்கிகளும் இந்த முறையைப் பின்பற்றின. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், விசா போன்ற நிறுவனங்கள் தனித்து இந்த வசதியை தொடங்கி க்ரெடிட் கார்ட் , கணினி மூலம் பணப்பரிவர்த்தனை, டிஜிட்டல் வர்த்தகம் ஆகியவற்றைப் பெரிய அளவில் வளர்த்து விட்டன.

நல்லது நடந்தால் தீயது உடனே தொற்றிக் கொள்ளும் என்பது உலக நியதி போலும்! எவ்வளவு தான் பாதுகாப்பு வளையங்கள் போட்டாலும் அதையும் மீறி திருட்டுக்கும்பல் புதிய யுக்திகளை கையாண்டு மக்களை ஏமாற்றி விடுகிறார்கள். ஏமாறுவதற்கு காத்துக் கொண்டிருப்பவர்போல் பலர் தாமாகவே குற்றவாளிகளின் வலையில் சிக்குகிறார்கள்.

பண மோசடியில் கடந்த நான்கு வருடங்களில் வங்கிகள்நான்கு லட்சம் கோடி ரூபாய்களை இழந்திருக்கின்றன. வங்கிகளிலிருந்து கடன் வாங்கி திருப்பி தராத மல்லையா , நீராவ் போன்றவர்களால் வரும் நஷ்டம் தனி ரகம்!

நிதி நிர்வாகத்தில் முடிவு எடுப்பவர்கள் இதைப் பற்றி ஆராய்ந்து தடுப்பு நடவடிக்கை எடுக்கிறார்களா என்பது சந்தேகத்தை அளிக்கிறது . பண மோசடிக் குற்றங்களில் பொய் சொல்லி கடன் பெறுதல் , ஊழல், வரி ஏய்ப்பு, போதை பொருள் கடத்தல், மனித கடத்தல் , சைபர் குற்றங்கள் என பல்வேறு வகைகள் அடங்கும்.

நிதி இடர் மேலாண்மையில் தவறுகளைத் தடுப்பது முதன்மையான கடமை. சமீபத்தில் தனியார் வங்கி ஊழியர்களையும் இந்திய தண்டனைச் சட்டப்படி அரசு ஊழியர் என்ற மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படிதனியார் வங்கி பணியாளர் தவறு செய்தால் அவர் மீது ஊழல் தடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் "பைனான்சியல் ப்ராடக்ட்ஸ்' என்ற நிதி பரிவர்த்தனை நடைமுறைகளுக்கு செயல் வடிவம் கொடுப்பார்கள். மோசடிகளைத் தடுக்க ஒரு செயலியை வடிவமைக்கும் போதே தேவையான கட்டுப்பாடுகளை பொருத்த வேண்டும். கையாளுவதற்கு சுலபமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் உரிய பாதுகாப்பும் அவசியம். வேகமாகச் செல்லக் கூடிய வாகனங்களுக்கு சரியான ப்ரேக் தேவை. வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துவது தான் நல்ல வேகத்தையும் உறுதி செய்கிறது! முரண்பாடான கூற்று. ஆனால் அதுதான் உண்மை!

"ஊழலும் லஞ்சமும் பல நிதி மோசடிகளுக்குகாரணம்' என்கிறார் மகாராஷ்டிரா மாநில ஐபிஎஸ் அதிகாரி நந்தகுமார். சைபர் குற்றம் தடுப்பு சட்டத்திலும், சைபர் செக்யூரிட்டி இணையதள பாதுகாப்பு வழிகளில் நிபுணத்துவம் பெற்றவர். ரிசர்வ் வங்கி ஆலோசனைக் குழுவில் இடம் பெற்று சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். ""வங்கி கடன் கொடுப்பதில் பாதுகாப்பு வழிகளைப் பின்பற்றாதது அல்லது மேலிடத்திலிருந்து கொடுக்கப்படும் அழுத்தத்தினால் கடன் கொடுத்து அது வாரா கடனாகப் படமெடுக்கும்போது கடன் கொடுத்த அதிகாரிகள் மாட்டிக்கொள்கிறார்கள். எதற்கும் துணிந்த கடன் பெற்றவன் அனுபவிக்கிறான்! ஊழலால் வந்த வினை'' என்கிறார் நந்தகுமார்.

வங்கி நடைமுறை நெளிவு சுளிவுகள் தெரிந்த வங்கி ஊழியர்கள் சிலர், அதிகம் பரிவர்த்தனை இல்லாத கணக்குகளிலிருந்து பணம் மாயமாவதற்குக் காரணமாகிவிடுகிறார்கள். சமீபத்தில் தெலங்கானா மஹேஷ் கூட்டுறவு வங்கியின் இணையதளம் "ஹாக்கிங்' செய்யப்பட்டு நாட்டில் உள்ள பல வங்கிகளுக்கு பணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சந்தேக பண மாற்றம் தகவல் வந்தவுடன் வங்கி மேலாளர்கள் தடுப்பு நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அதற்குள் ரூ.12 கோடி மாற்றப்பட்டுவிட்டது.

தில்லியில் சிடி பாங்க் ஊழியர் ஷிவ்ராஜ் பூரி சொத்து மேலாண்மைப் பிரிவில் ஏழு வருடங்களாகப் பணிபுரிபவர். பங்கு சந்தையில் பணமுதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என்று வங்கி வாடிக்கையாளர்களை நம்ப வைத்து வங்கி நிர்வாகம் செய்வது போல போலி ரெக்கார்டுகள் தயார் செய்து ரூ. 400 கோடி மோசடி செய்துள்ளார். இது நடந்தது 2010 -இல். வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்தார்கள். ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக பல மோசடிகளைத் தொடர்ந்து செய்த ஷிவ்ராஜ் இரண்டு ஆண்டுகள் முன்பு கைதாகியுள்ளார். வழக்கு நடக்கிறது அவரது ஏமாற்றும் வித்தையும் தொடர்கிறது! அதிக லாபம் ஈட்டலாம் என்ற பசப்பு வார்த்தை போதும், மக்கள் விட்டில் பூச்சிகள் போல் வீழ்கிறார்கள்!

கணினி வழியில் வங்கிகளுக்குச் செல்லாமலேயே பணப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்ற வசதி வந்த பிறகு பல ஆன்லைன் மோசடிகள் முளைத்துள்ளன. மோசடி பேர்வழிகளும் மூத்த குடிமக்களை குறி வைத்து பாங்க் அதிகாரி பேசுவது போல் தொலை பேசியில் பேசி அவர்களது வங்கி கணக்கு விவரங்களைப் பெற்று அவரது கணக்கிலிருந்து பணத்தை அள்ளி விடுகிறார்கள். இதற்காகவே சில போலி கால் சென்டர்கள். இந்தியநகரங்களில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும்.

அமெரிக்கா, சைனா, ஹாங்காங் நாடுகளில் உள்ள முதியோர்களை ஏமாற்றுகிறார்கள். கடந்த சில வருடங்களில் இத்தகைய கால் சென்டர்கள் தில்லி ஹரியானா ஜெய்ப்பூர் நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர் எல்லாரும்இளைஞர்கள். பள்ளிப் படிப்பை இடையில் விட்டவர்கள். ஆனால் பல மொழிகள் சரளமாக பேசக்கூடியவர்கள். எளிதாக பணம் ஈட்ட சைபர் குற்றத்தில் சிக்கியுள்ளார்கள்.

ரிசர்வ் பாங்க் மற்றும் எல்லா வங்கிகளும் வங்கி கணக்கு விவரங்கள் அல்லது டிஜிட்டல் பண வர்த்தனையில் ஒரு முறை அனுப்பபடும் கடவுச் சொல்லை யாரிடமும் பகிரக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள். இருந்தும் பலர் போலி கால் சென்டரிலிருந்து ஆசை காட்டி மோசம் செய்யும் போக்கிரிகளின் வலையில் வீழ்கிறார்கள்.

வரி ஏய்ப்பு மூலம் வரும் பணத்தை எங்கிருந்து வந்தது என்பது தெரியாத வகையில் மூலைமுடுக்குகளில் உள்ள வங்கிகளிலிருந்து மாற்றம் செய்யும் நூதன வழி கவனத்திற்கு வந்துள்ளது. ஏற்றுமதியில் துணிவகைகளுக்கு வரிச் சலுகை 9- இலிருந்து 10 சதவிகிதம் வரைஅனுகூலம் பெற ஏற்றுமதி செய்ததாக போலி ரெகார்டுகள் சுங்க வரி அதிகாரிகள் உடந்தையோடு காண்பித்து வரிச் சலுகையை வங்கிக் கணக்கில் பெற்றிருக்கிறார்கள். சுமார் ரூ.12 கோடி மோசடி தூத்துக்குடியில் நடந்தது. முன்பு குப்பை துணிகளை கன்டெய்னரில் அனுப்பி அதற்கு சுங்கவரி சலுகை பெறுவார்கள் , அடுத்த கட்டமாக ஒன்றும் அனுப்பாமலேயே போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்யத் துணிந்துள்ளார்கள்!

"மணி லாண்டரிங்க்' என்ற பண மோசடி பல வங்கிகளில் நடந்தேறியுள்ளது. வங்கிக் கணக்குகளில் பணமாக தொடர்ச்சியாக யாராவது போடுவது பற்றி கவனித்து "கேஷ் ட்ரான்ஸ்பர்' அறிக்கை அனுப்ப வேண்டும்.மேலும் சந்தேகம் வரும் வகையில் பணப் பரிவர்த்தனம் நடந்தால் சந்தேக பரிமாற்றம்- "சஸ்பிஷஸ் ட்ரான்ஸ்பர்'அறிக்கை அனுப்ப வேண்டும். கடைக்கோடியில் இன்னும் கணினி இணைப்பு இல்லாத வங்கிகளில் பணத்தை போட்டு வேறு வங்கி கணக்குகளில் பண மாற்றம் செய்வது, வெளிநாட்டிலிருந்து பெரிய தொகை தனிநபர் கணக்கில் வருவதை உடனே எடுத்து விடல் போன்ற பல நூதன வழியில் பண பரிமாற்றம் நடைபெறுகிறது. இதனை கண்காணிக்கத் தவறும் வங்கிகள் அல்லது உடந்தையாக இருப்பது பொருளாதாரத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

வங்கி டிஜிட்டல் பண வர்த்தனையில் பயங்கரவாத கும்பல் ஈடுபடுவது, பாதுகாப்பு பிரச்னை. காஷ்மீருக்கு சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை புரிகிறார்கள். சில குறிப்பிட்ட தனியார் சுற்றுலா விடுதிகளுக்கு வாடகை முன்பணமாக பெரிய தொகை அனுப்புவார்கள். பிரயாணம் ரத்தானால் முன்பணம் திருப்பி கொடுக்கப்படாது என்று கண்டிஷன் போட்டு முன்பணம் வாங்கப்படும். பின்பு பயணம் ரத்து செய்யப்படும். முன் பணமாக வந்த கணிசமான தொகையை வங்கியிலிருந்து எடுத்து பயங்கரவாத அமைப்புகளுக்கு கொடுக்கப்படும். இதற்கு வங்கி உடந்தை. இது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச வங்கிகளின் நிதி பரிவர்த்தன கூட்டமைப்பு பெல்ஜியம் நகரில் தலைமை இடமாகக் கொண்டு இயங்குகிறது(ஸ்விப்ட்) . 2018- இல் இதன் இணைய தளத்தை "ஹாக்கர்ஸ்' குறிவைத்து மாரீஷியஸ் வங்கியின் சில கணக்குகள் சூறையாடப்பட்டன.

நிதிப் பரிமாற்றத்தில் எப்படி எல்லாம் சைபர் மோசடிகள் நடக்கக்கூடும் என்பதை சைபர் பாதுகாப்பு அமைப்புகள் தடுப்பு நடவடிக்கை எடுக்கின்றன. ஆயினும் குற்றவாளிகள் தடைகளை எளிதில் தகர்த்து விடுகிறார்கள்.

இந்தியாவில் 2018-19 -இல் 6,798 மோசடிகள் வங்கிகளில் நடந்துள்ளன, அதில் ரூ. 71,534 கோடி இழப்பு ஏற்பட்டது. மோசடி எண்ணிக்கை 20-21 -இல் 7,363 ஆக உயர்ந்து , ரூ. 1,38,422 கோடி இழப்பு. இதில் பொது அரசு வங்கிகளில் அதிகமாக மோசடிகள் நடந்துள்ளன. வாடிக்கையாளர்களுக்கு முன்பணம் வழங்குதல், வெளிநாட்டுச் செலவாணி வர்த்தகம், பண பரிமாற்றம், கிரெடிட் கார்டு மோசடி போன்ற விவகாரங்களில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. அதில் போதிய கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

கடந்த மூன்று வருடங்களில் கடன் பரிவர்த்தனையில் 5155 கோடி டாலர் , பணம் கொடுக்கல் வாங்கலில் 4288 கோடி டாலர் மோசடிக்கு உள்ளானது என்று ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. உலக அளவில் கிரெடிட் கார்டு நிதி பரிமாற்றங்களில் 2865 கோடி டாலர் மோசடியில் சிக்கியுள்ளது. இது 2027 - இல் 3850 கோடி டாலராக உயரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.

நிதி இடர் மேலாண்மையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். இம்மாதிரி வழக்குகளை விசாரிக்க காவல்துறைக்கு விசேஷப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

"விரோதிகளை நேசியுங்கள்... அவர்கள் தான் உங்கள் தவறுகளைச் சுட்டி காட்டுகிறார்கள்' என்றார் பெஞ்சமின் ப்ராங்லின்! எவ்வளவு உண்மை!

சென்ற வாரக் கேள்விக்கு பதில்: ஜனத்தொகை பொருளாதார மேதை புனித தந்தையார் தாமஸ் ராபர்ட் மால்தூஸ் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்.

இந்த வாரக் கேள்வி: இந்திய ரிசர்வ் வங்கி எந்த வருடம் எங்கு நிறுவப்பட்டது ?

(விடை அடுத்த வாரம்)

கட்டுரையாளர்: மேனாள் காவல்துறைத்தலைவர்

மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT