இளைஞர்மணி

தொடரும் விண்வெளி ஆய்வு...: 2022 - இன் மகிழ்ச்சியான செய்தி!

11th Jan 2022 06:00 AM | -எஸ்.ராஜாராம்

ADVERTISEMENT

 

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சர்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்) மனிதகுலத்துக்கான தனது ஆய்வை 2030-ஆம் ஆண்டு வரை தொடர வழிஏற்பட்டுள்ளது.

விண்வெளி அறிவியல் ஆய்வுக்கான நிரந்தரமுகவரியாக இருந்து வருகிறது சர்வதேச விண்வெளி நிலையம். 1998 -ஆம் ஆண்டு தனது பணியைத் தொடங்கிய இந்த நிலையம், ஒவ்வொரு 92 விநாடிகளுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றி வருகிறது. இன்றும்விண்வெளி தொடர்பான ஆழ்ந்தஅறிவியல் ஆய்வுகளுக்குத் தளமாகச் செயல்படுகிறது.

ஐஎஸ்எஸ் அளித்துள்ள தரவுகளின் மூலம் இதுவரை 4,200 ஆராய்ச்சியாளர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகளைத் தயாரித்துள்ளனர்.

ADVERTISEMENT

புவிஈர்ப்பு விசை இல்லாத உயரத்தில் பூமியைச் சுற்றி வரும் ஐஎஸ்எஸ்-இன் ஆய்வுப் பணியில் 110 நாடுகள் பங்கேற்று உள்ளன. 19 நாடுகளைச் சேர்ந்த 251
விண்வெளி வீரர்கள் ஐஎஸ்எஸ்-க்குசென்று வந்துள்ளனர்.

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகளின் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இணைந்து ஐஎஸ்எஸ்-ஐ செயல்படுத்தி வருகின்றன. 2024-ஆம் ஆண்டுடன் இதன் செயல்பாடு முடிவுக்கு வரும் நிலையில், தொடர்ந்து செயல்படுமா என்கிற சந்தேகம் கடந்த சில காலமாகவே இருந்து வந்தது. ஏனெனில், 2018-இல் அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், ஐஎஸ்எஸ்-க்கு அளிக்கப்பட்டு வரும்நிதியுதவியை 2025-இல் நிறுத்துவது குறித்து கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஐஎஸ்எஸ்-இன் செயல்பாட்டை மேலும் 8 ஆண்டுகளுக்கு தொடர்வது என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளதாக நாசா நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்துள்ளார். இதனால், 2030-ஆம் ஆண்டு வரை ஐஎஸ்எஸ் தனது ஆராய்ச்சிப் பணியைத் தொடர்வது உறுதியாகியுள்ளது.

"சர்வதேச விண்வெளி நிலையம் அமைதியான சர்வதேச அறிவியல் ஒத்துழைப்பின் ஒரு கலங்கரை விளக்கமாக 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் திகழ்கிறது. அது தொடர்ந்து மனிதகுலத்தின் நன்மைக்காக ஆய்வுப் பணியைத் தொடரவுள்ளது' எனத் தெரிவித்துள்ளார் பில் நெல்சன்.

சர்வதேச விண்வெளி நிலையம் ஆய்வைத் தொடர்வது 2022-இன் மகிழ்ச்சியான செய்தி.

ADVERTISEMENT
ADVERTISEMENT