இளைஞர்மணி

யாஷ் துல்... புதிய நாயகன்!

22nd Feb 2022 06:00 AM | -மு.நாராயணசுவாமி

ADVERTISEMENT

 

19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் ஆனதன் மூலம் கிரிக்கெட் உலகின் பிரதான அணி என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. இந்த முறை போட்டி தொடங்கும் போது, உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். 

அணியில் இடம் பெற்றிருந்த இந்திய இளம் வீரர்களின் அசாத்தியமான முயற்சியால் உலகக் கோப்பையை இந்தியா வென்றது. இந்தக் கோப்பையை வென்றதில் இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல்லின் பங்கு மிக முக்கியமானது. 

இதற்கு முன் இந்தப் பெயர் அவ்வளவாக அறிமுகமாகவில்லை; எனினும், கைதேர்ந்த ஆட்டக்காரராக தன்னை வெளிப்படுத்திய யாஷ் துல், தலைமைப் பண்பில் சிறந்து விளங்கியதன் மூலம் உலக அளவில் உயர்ந்து விட்டார்.

ADVERTISEMENT

6 வயதில் கிரிக்கெட் ஆர்வம்:  தென்மேற்கு தில்லி மாவட்டம்,  ஜனக்புரியைச் சேர்ந்த யாஷ் துல்லின் தந்தை  விஜய் துல் அழகு சாதனப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றில் பிரதிநிதியாகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நீலம் துல்.  

2002 நவ. 11ஆம் தேதி பிறந்த யாஷ் துல் தனது 6-ஆவது வயதில் கிரிக்கெட் விளை
யாடத் தொடங்கினார். இவர் கிரிக்கெட் விளையாட வந்ததே சுவாரசியம் மிக்க நிகழ்வு. 

ஒருநாள் தனது வீட்டுக்கு அருகிலிருந்த மைதானத்துக்குச் சென்றபோது அங்கு மூத்த மாணவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். தன்னையும் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளுமாறு யாஷ் துல் கேட்டபோது அவர்கள் மறுத்து விட்டனர்.

அதைக் கண்ட யாஷ் துல்லின் தாய், அவரை தில்லி, துவாரகாவில் உள்ள பல்பவான் கிரிக்கெட் அகாதெமியில் சேர்த்து விட்டார். அங்கு சிறப்பான பயிற்சி மேற்கொண்ட யாஷ் துல்லுக்கு தொடக்கத்தில் பள்ளியின் கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்கவில்லை. எனினும், தனக்கு வாய்ப்புத் தருமாறு பள்ளி முதல்வரை யாஷ் துல் தொடர்ந்து நச்சரித்தார். 

அவரது நச்சரிப்பு தாங்காமல், இந்தச் சிறுவனையும் அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம் பள்ளி முதல்வர். பள்ளி அணியில் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதிரடியாக விளையாடி, பள்ளி அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். 

பின்னர் 16 வயதுக்கு உள்பட்டோருக்கான ராஜேஷ் பீட்டர் நினைவு கிரிக்கெட் போட்டியில் அவுட் ஆகாமல் 40 ரன்களை எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

தில்லி அணிக்கு கேப்டன்: தொடர்ந்து 16 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் சிறப்பாகச் செயல்பட்டதால் தில்லி அணிக்கு கேப்டன் ஆனார். தனக்குக் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் திறம்படப் பயன்படுத்திக் கொண்ட யாஷ் துல், 2018-19 இல் விஜய் மெர்ச்சன்ட் கோப்பைக்கான போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 185 ரன்களை எடுத்து தில்லி அணியை வெற்றி பெறச் செய்து, நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறச் செய்தார். 

2020, 2021 - இல் நாடு முழுவதும் கரோனா பரவலின் தாக்கம் அதிகரித்ததால் கிரிக்கெட் போட்டிகள் தொய்வுற்றன. அந்த ஆண்டில் வினு மங்கட் கோப்பைக்கான போட்டியில் தில்லி அணியில் விளையாடிய யாஷ் துல் 5 போட்டிகளில் 302 ரன்களைக் குவித்தார். அந்தத் தொடரில் அவரது சராசரி 75.5. அதைத் தொடர்ந்து 19 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டனாக யாஷ் துல் 2021 அக்டோபரில் அறிவிக்கப்பட்டார். அதையடுத்து தேசிய கிரிக்கெட் அகாதெமியில் கிரிக்கெட் பயிற்சி பெற்ற பின், 2021 டிசம்பரில் நடைபெற்ற ஆசிய கோப்பைக்கான போட்டியில் சிறப்பான ஆட்டத்தையும், திறமையான கேப்டன்ஷிப்பையும் வெளிப்படுத்தி கோப்பையை வென்றார். அதன் தொடர்ச்சியாக,  இளைஞர் உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கும் யாஷ் துல் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். 
உலகக் கோப்பையில் வெற்றி: மேற்கிந்தியத் தீவுகளில் 2022 ஜனவரி 14இல் தொடங்கிய 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் இந்தியா மோதிய முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 100 பந்துகளில் 82 ரன்களை எடுத்து அந்தப் போட்டியில் வெற்றி பெறச் செய்தார் யாஷ் துல். 

அதன்பின் கரோனாவால் பாதிக்கப்பட்ட யாஷ் துல் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதால் அயர்லாந்து, உகாண்டா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. எனினும் இந்த அணிகளை வென்ற இந்தியா காலிறுதிக்குத் தகுதி பெற்றது. 

கரோனாவிலிருந்து மீண்ட யாஷ் துல், கால் இறுதியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 20 ரன்களைப் பெற்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 

அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 37 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் ஆட வந்த யாஷ் துல், தன்னுடைய இணை ஆட்டக்காரரான ஷேக் ரஷீத்துடன் 204 ரன்களைச் சேர்த்தார். யாஷ்துல் ஆட்டமிழக்காமல் 110 பந்துகளில் 110 ரன்களை எடுத்தார். அந்தப் போட்டியிலும் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா. 

இறுதிப் போட்டியில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து அணியை 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது. எளிதான இலக்கை எட்டிய இந்திய அணி உலகக் கோப்பையை 5ஆவது முறையாக வென்று சாம்பியன் ஆனது. 

இதற்கு முன் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டன்களான முகமது கைஃப், விராட் கோலி, பிருத்வி ஷா போன்றவர்கள் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். அவர்களைப் போல 
விரைவில் இந்திய அணியில் இணைந்து யாஷ்துல் பெரும் சாதனை புரிய வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பம்.  

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT