இளைஞர்மணி

2 கோடி விவசாயிகளுக்கு உதவும் நண்பர்கள்!

26th Apr 2022 06:00 AM | இரா. மகாதேவன்

ADVERTISEMENT


மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் ஜாதவ் மற்றும் சந்தோஷ் ஜாதவ் என்ற 2 நண்பர்களால் தொடங்கப்பட்ட "இந்தியன் ஃபார்மர்' யூடியூப் சேனல், அன்றாட விவசாயம் தொடர்பான பிரச்னைகளில் நாடு முழுவதும் உள்ள சுமார் 1.9 கோடி விவசாயிகளுக்கு உதவி வருகிறது.

ஜூன் 2018 -இல் தொடங்கப்பட்ட இந்தச் சேனல் இதுவரை சுமார் 1.9 கோடி சந்தாதாரர்களைக் குவித்திருப்பது யூடியூப் வரலாற்றில் புதிய அத்தியாயமாகக் கருதப்படுகிறது. இந்தச் சேனலை தொடங்கிய இளைஞர்களின் மாணவப் பருவம் சுவாரஸ்யமானது.

மகாராஷ்டிரா மாநிலம், சாங்லி மாவட்டம், வீட்டா என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். இங்கிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ள கார்வே கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இருவரும் அங்குள்ள பள்ளியில் ஒரே வகுப்பில் படித்துள்ளனர். ஆகாஷ் முதல் பெஞ்ச், சந்தோஷ் கடைசி பெஞ்ச். ஆசிரியர் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் ஆகாஷ் பதிலுடன் தயாராக இருப்பாராம். ஆனால், சந்தோஷ் அப்படியில்லை. என்றாலும், அவர்கள் இணைப்பிரியாத நண்பர்களாக இருந்தார்கள்.

12- ஆம் வகுப்புக்குப் பிறகு ஆகாஷ் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிக்க கோலாப்பூருக்குச் சென்றார். சந்தோஷ் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு விவசாயப் பணிக்குச் சென்றுவிட்டார். அவர்கள் நட்புமட்டும் இன்று வரை தொடர்கிறது.
நாட்டில் உள்ள விவசாயிகளின் கடினமான சூழ்நிலைகளை அறிந்திருந்த ஆகாஷுக்கு, அவர்களுக்கு உதவவேண்டும் என்பதே யோசனையாக இருந்தது. இதையொட்டி, சமூக வலைதளங்களில் விவசாயம் தொடர்பான சிறிய வீடியோக்களை உருவாக்குவது, பதிவேற்றுவது போன்றவற்றில் அவர் ஈடுபட்டார். இது தொடர்பான பணிகளில் ஈடுபட சந்தோஷையும், அவரது பெற்றோரையும் சம்மதிக்க வைத்தார். இப்போது அவர்கள் இருவரும் யூடியூப் சேனலில் முன்னணி நாயகர்கள்.
இதுகுறித்து 26 வயதாகும் ஆகாஷ் ஜாதவ் கூறுகையில், ""எங்களுக்கு ஃபேஸ்புக்கில் 7 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 1 லட்சம் பேரும் பின்தொடர்வோர் உள்ளனர் என்கிறார். 27 வயதாகும் சந்தோஷ் ஜாதவ் கூறும்போது, எங்களிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட 4 முதல் 30 நிமிடங்கள் வரையிலான விவசாயம் தொடர்பான வீடியோக்களும், எண்ணற்ற 20 விநாடி "டிக்டாக்' வீடியோக்களும் உள்ளன'' என்றார்.
இதைக் கூறும்போது அவர்கள் பெருமையோ, கர்வமோகொள்ளவில்லை. அதற்கு பதிலாக, ""இந்தியாவில் சுமார் 80 கோடி விவசாயிகள் உள்ளனர். நாங்கள் 2 கோடிக்கும் குறைவான விவசாயிகளையே எட்டியுள்ளோம். இன்னும் வெகுதொலைவு செல்ல வேண்டும்'' என்று தங்களின் எல்லையை விரித்து கூறுகின்றனர்.
விவசாயம், நீர்ப்பாசனம், களைகளைக் கட்டுப்படுத்துதல், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துதல், உரங்களைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி, நல்ல தரமான விதைகளை கொள்முதல் செய்தல், பயிர்களின் சுழற்சி, சந்தைக்கான சரியான வழி ஆகியவற்றில் அவர்கள் தங்கள் யூடியூப் சேனல் வழியாக விவசாயிகளுக்கு உதவுகின்றனர்.
ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளியன்று மாலை 6 மணிக்கு புதிய விவசாயம் தொடர்பான கருத்தாக்கத்தை பதிவேற்றம் செய்கின்றனர்.
சந்தோஷ் எளிமையான ஹிந்தியில் பரந்த புன்னகையுடன் பேசும் விதம் அவரை விவசாயிகள் இடையே புகழ்பெறச் செய்துள்ளது. அவரது பேச்சு பிரசங்கம் போல இல்லாமல், எளிமையாகவும், விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் குரலாகவும் இருப்பதால் ஒவ்வொரு பார்வையாளரும், சந்தோஷ் தங்களுடன் நேரடியாக பேசுவதாக உணர்கின்றனர்.
சந்தோஷுக்கு 11 ஏக்கர் பரம்பரை விவசாய நிலம் உள்ளது. அதில், கரும்பு, மா, மாதுளை, கேப்சிகம், தக்காளி போன்ற காய்கறிகளை
பயிரிடுகிறார்கள். அதன்மூலம் விவசாய சமூகத்திற்கு என்ன பாதிப்புகள் என்பதை அவர்கள் நேரடியாக அறிந்திருக்கிறார்கள். அவற்றை அங்கிருந்தே ஒளிப்பதிவு செய்து பதிவேற்றம் செய்யும்போது, விவசாயிகள் புரிந்துகொள்வதற்கும், கற்றுக்கொள்வதற்கும் அந்த நிகழ்ச்சி பயனுள்ளதாக மாறிவிடுகிறது.
தங்கள் பண்ணையில் புதிய அல்லது வித்தியாசமான நுட்பங்களைப் பயன்படுத்தும் விவசாயிகளைக் கண்டுபிடித்து, அவர்களை அணுகி, அனுமதி பெற்று, படப்பிடிப்புக்காக அந்த பண்ணைக்குச் செல்கின்றனர். இதேபோன்று, அவர்கள் இருவரும் நாடு முழுவதும் பயணம் செய்கிறார்கள். அண்மையில், ஹிமாசல பிரதேசம் மற்றும் பஞ்சாபில் இருந்து நிகழ்ச்சிகளை பதிவுசெய்துகொண்டு திரும்பினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,""சங்கர்ஷ் சாங்க்தாவின் ஆப்பிள் வளர்ப்பு நுட்பங்கள் எவ்வளவு வித்தியாசமானது என்பதைப் பார்க்க, சிம்லாவுக்கு அருகேயுள்ள ஹிமாசலப் பிரதேசத்திற்கு நாங்கள் சென்றோம். அதிக அடர்த்தி கொண்ட விவசாய முறையை அவர் பயன்படுத்துகிறார். மற்ற விவசாயிகள் ஓர் ஏக்கர் நிலத்தில் சுமார் 200 முதல் 300 மரங்களை நடுகிறார்கள். ஆனால், அவர் சுமார் 700- 800 செடிகளை நட்டு, மரங்கள் அவற்றின் இயல்பான அளவை அடையாமல் இருக்க, தொடர்ந்து கத்தரித்து கிளைகளுக்கு மூங்கில் ஆதரவைக் கொடுக்கிறார். இதனால், மரங்கள் பழங்களின் எடையைத் தாங்கும். அதேநேரத்தில், பழங்கள் சுவை அல்லது தரத்தில் குறையாமல், மகசூலும் மிக அதிகமாக உள்ளது'' என்று கூறுகிறார் ஆகாஷ்.
தொடர்ந்து, பஞ்சாபில் உள்ள பதிண்டாவில், நெல் மற்றும் பருத்தி விளைவிக்கும் விவசாயி பர்கத் சிங்கைச் சந்திக்கச் சென்றனர். பஞ்சாபில் வைக்கோலை எரிப்பது ஒரு பெரிய பிரச்னையாகும். ஆனால் பர்கத், நிலையான விவசாய நுட்பங்களைப் பயன்படுத்துவதோடு, கழிவுகளை எரிப்பதற்குப் பதிலாக மீண்டும் பயன்படுத்துகிறார். அந்த நுட்பத்தை நாங்கள் பதிவுசெய்து எங்களது சேனலில் ஒளிபரப்பினோம் என்கிறார் சந்தோஷ்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தொழில்நுட்ப விழிப்புணர்வு இல்லாததால், விநியோகச் சங்கிலி அல்லது விளைபொருள்களின் மேலாண்மை குறித்து தெரியாமல் உள்ளனர். தலைமுறை தலைமுறையாக தங்கள் குடும்பம் செய்து வருவதை அவர்கள் தொடர்ந்து வருகின்றனர். புதிய பயிர்களை சோதனை அடிப்படையில் எப்படி பயிரிடுவது என்று அவர்களுக்குத் தெரியாது. அதனால், நிறைய முதலீடு செய்து வருமானம் கிடைக்காமல் வாழ்க்கையை நடத்த போராடுகிறார்கள். எங்கள் சேனல் மூலம் இந்த குறையை நிவர்த்தி செய்து, விவசாயிகளை வெற்றிகரமான தொழிலதிபர்களாக மாற்றமுடியும் என்று நம்புகிறோம்'' என்று உறுதி தெரிவிக்கிறார் ஆகாஷ்.
தொடக்கத்தில், ஸ்மார்ட்போனில் மட்டுமே தொடங்கப்பட்ட இந்தப் பணி, இன்று நவீன ஐபோன், கேனான் 200டி கேமரா, ஒரு டிஜி மினி ட்ரோன், நல்ல மைக்குகள், தினசரி வேலைக்கான 2 மேக்புக்குகள், எடிட்டிங் செய்ய 2 கணினி என விரிவடைந்துள்ளதாக சேனலின் தொழில்நுட்ப மூளையாக விளங்கும் ஆகாஷ் கூறுகிறார்.
தற்போது அவர்களின் வருமானம் மாதத்திற்கு ரூ. 50,000 முதல் ரூ.1 லட்சம் வரை ஏற்ற இறக்கமாக உள்ளது என்றாலும், தங்கள் பணத்தின் பெரும் பகுதியை மீண்டும் அதிலேயே முதலீடு செய்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
உலகளாவிய வீடியோ ஜாம்பவான்களின் சிறு ஆவணப் பிரிவான யூடியூப் ஒரிஜினல்ஸ் கிரியேட்டர் ஸ்பாட்லைட்டில் இவர்களின் சேனலும் இடம்பெற்றுள்ளது.
""நமது விவசாயிகளின் நிலையை மேம்படுத்த வேண்டிய நேரம் இது. விரைவில் கோழி வளர்ப்பு, மீன்பிடித்தல், ஆடு வளர்ப்பு போன்ற பிற விவசாய சமூகங்களையும் எங்களது சேனலில் சேர்ப்போம். விவசாயத்தில் செல்வாக்கு செலுத்த விரும்புவோருக்கு இதில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது'' என்று நம்பிக்கையூட்டுகிறார் ஆகாஷ்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT