இளைஞர்மணி

வளர்த்துக் கொள்ளுங்கள் திறன் மேம்பாடு!

26th Apr 2022 06:00 AM | சுரேந்தர் ரவி

ADVERTISEMENT

 

ஆண்டுதோறும் கல்லூரிகளில் பட்டம் பெற்று வெளியேறும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், அதற்கு ஈடான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியே. குறைவாக இருக்கும் வேலைவாய்ப்புகளுக்கு அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் போட்டியிடும் சூழலே தற்போது நிலவுகிறது.

வேலைவாய்ப்புக்கும், போட்டியிடும் இளைஞர்களின் எண்ணிக்கைக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு நிலவுவதற்கு, இளைஞர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளாமல் இருப்பது முக்கியக் காரணமாக உள்ளது. கல்லூரிகளில் வெறும் பாடத்தை மட்டும் படிக்கும் இளைஞர்கள், கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்ளத் தவறுகின்றனர்.

பணியிடத்தில் எந்த மாதிரியான திறன்கள் அவசியமாகின்றன என்பது குறித்து இளைஞர்களுக்குத் தெரிவதில்லை. அதன் காரணமாக, பாடங்களை நன்கு படித்துவிட்டாலே வேலை கிடைத்துவிடும் என்ற தவறான எண்ணம் அவர்களிடையே காணப்படுகிறது. இந்த எண்ணத்தை இளைஞர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

தொழில் நிறுவனங்களின் தற்காலத்திய தேவை என்ன என்பதை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். வெறும் பாட அறிவு மட்டும் பணியிடங்களில் வேலை செய்யப் போதுமானதாக இருக்காது. பலர் பணிபுரியும் நிறுவனங்களில் முக்கியமாகத் தேவைப்படுவது, ஒருங்கிணைந்து இணக்கமாகப் பணிபுரியும் ஆற்றல்.

ஒட்டுமொத்த நிறுவனத்தின் பணியையும் ஒருவராக செய்து முடித்துவிட முடியாது. குறிப்பிட்ட வேலையை முடிப்பதற்கு மற்ற பணியாளர்களின் உதவியும் நிச்சயம் தேவைப்படும். அத்தகைய சூழலில், அவர்களுடன் இணக்கமாக இருந்தால் மட்டுமே வேலையை முடிக்க முடியும். பணிகளைத் தக்க சமயத்தில் முடிப்பதற்கு மற்ற பணியாளர்களுடன் இணைந்து திறம்படச் செயலாற்றும் திறனை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பல்வேறு குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் திறன் இளைஞர்களுக்கு அவசியம். சக பணியாளர்களுடன் இணக்கமற்ற சூழலை வளர்த்துக் கொண்டால், அலுவலகத்தில் நாம் தனித்துவிடப்படுவோம். இது நம்முடைய வளர்ச்சிக்கு ஆபத்து விளைவிப்பதாக அமையக்கூடும்.

நிறுவனங்கள் தற்போது பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில், நிறுவனங்களில் தோன்ற வாய்ப்புள்ள புதிய பிரச்னைகள் குறித்து இளைஞர்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டும். அப்பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறனையும் அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நிறுவனங்களில் எந்த மாதிரியான பிரச்னைகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணிக்கும் திறனையும் இளைஞர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

தலைமைப்பண்பு இளைஞர்களுக்கு முக்கியமாகிறது. குழுவுடன் இணைந்து செயல்படுவதோடு மட்டுமல்லாமல் சக பணியாளர்களுக்குத் தலைமையேற்று அவர்களை வழிநடத்தும் பண்பையும் இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அத்தகைய தலைமைப்பண்பானது நிறுவனத்தில் உயர்பொறுப்புகளை நமக்குத் தொடர்ந்து வழங்கும்.

இத்தகைய திறன்களையெல்லாம் எங்கு வளர்த்துக் கொள்வது என்ற கேள்வி எழலாம். அதற்குக் கல்லூரி வழங்கும் பல்வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கல்லூரியில் தினமும் வகுப்புக்குச் சென்று பாடத்தைப் படித்தோம், வீட்டுக்கு அல்லது விடுதிக்குத் திரும்பினோம் என்றில்லாமல், அங்குள்ள கூடுதல் நடவடிக்கைகளிலும் தன்னார்வலராகப் பங்கேற்க வேண்டும்.

கல்லூரியின் கலை விழாக்கள், கருத்தரங்குகள், சிறப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை முன்னின்று நடத்தும் குழுவில் தன்னார்வலராகப் பங்கேற்றுப் பணியாற்றலாம். நாட்டு நலப்பணித் திட்டம் (என்எஸ்எஸ்), தேசிய மாணவர் படை (என்சிசி) உள்ளிட்டவற்றில் இணைந்து கொள்ளலாம். கல்லூரியில் உள்ள பல்வேறு குழுக்களில் இணைந்து தன்னார்வலராகப் பணியாற்றலாம்.  

இவ்வாறு செயல்படுவது, பல்வேறு அனுபவங்களை நமக்கு வழங்கும். படிப்பு சார்ந்த மற்ற விவகாரங்கள் குறித்து கற்றுக் கொள்ள உதவும். இவற்றின் மூலமாக நமது திறன்களும் மேம்படும். அத்திறன்கள் நிறுவனங்களில் நாம் சிறப்பாகச் செயல்பட உதவும். கல்லூரியில் படிப்பது கிடைத்தற்கரிய தருணம். அதைவிட்டு வெளியேறிவிட்டால், திறன்களை மேம்படுத்துவதற்கான சரியான இடம் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அதற்கான செலவுகள் அதிகமாக இருக்கும்.

எனவே, கல்லூரிப் பருவத்திலேயே கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு இளைஞர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். புதிய விஷயங்களில் ஈடுபடுவது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, பல்வேறு நன்மைகளையும் வழங்கும். காலத்தை இளைஞர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT