இளைஞர்மணி

விவசாயிகளுக்குப் பயன்படும் ட்ரோன்!

5th Apr 2022 06:00 AM | ந.ஜீவா

ADVERTISEMENT

 

கேரளாவில் 2018-இல் வெள்ளம் வந்தது. கடுமையான பாதிப்புகளை அது ஏற்படுத்தியது. கேரளத்தின் விவசாயம் முற்றிலும் அழியக் கூடிய நிலை ஏற்பட்டது. அழிந்து போன விவசாயத்தை மீட்டெடுக்க முயற்சி செய்தனர் கொச்சியைச் சேர்ந்த தேவன் சந்திரசேகரனும், தேவிகாவும். உடன்பிறந்தவர்களான அவர்கள் பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

தேவன் சந்திரசேகரன் ஏரோநாட்டிகல் என்ஜினியரிங் படித்திருக்கிறார். தேவகி எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ வேண்டும் நினைத்தார்கள். முயற்சி செய்தார்கள்.

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம், பூமியின் மேற்பரப்பில் உள்ள மண்ணை அடியோடு அடித்துக் கொண்டு போய்விட்டது. இதனால் பயிர்களை விளைவிப்பதற்குத் தேவையான சத்துகள் வெள்ளத்தில் போய்விட்டன. அடுத்து எதைப் பயிர் செய்தாலும் நல்ல விளைச்சல் கிடைக்குமா என்ற ஐயம் ஏற்பட்டது. வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளினால் விவசாயிகள் மனம் ஒடிந்த
நிலையில் இருந்தார்கள்.

ADVERTISEMENT

இப்படிப்பட்ட சூழ்நிலையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஆளில்லா வான் ஊர்தியை அல்லது விவசாய ட்ரோனை உருவாக்கினார்கள் தேவன் சந்திரசேகரனும், தேவகியும்.

""ட்ரோனை உருவாக்குவதற்கு முன்பு, வெள்ளத்தால் சேதமடைந்த நிலத்தை முதலில் ஆய்வு செய்ய வேண்டியிருந்தது. மனிதர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றால் நிறைய நாட்களாகும். அதிலும் உயர்ந்த, தாழ்ந்த நிலப்பகுதிகள் உள்ள கேரளாவில் அது மிகவும் சிரமமான காரியம். அப்படியே ஆய்வு செய்யப்போனாலும் அது மேடு, பள்ளம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பானது அல்ல. எனவே நாங்கள் உருவாக்கிய ட்ரோனைப் பறக்கச் செய்து, ஆய்வு மேற்கொண்டாம்'' என்கிறார் தேவன் சந்திரசேகரன்.

""ஒரு பகுதியில் உள்ள மண்ணின் தன்மை, விளையக் கூடிய பயிர்களின் தன்மை, அந்த மண்ணுக்குத் தேவையான உரங்களின் அளவு ஆகியவற்றை முதலில் நாங்கள் முழுமையாக ஆய்வு செய்கிறோம். அதன் பிறகே ட்ரோனை செயல்படுத்துகிறோம். நாங்கள் தயாரித்துள்ள ட்ரோன் பெரிய அளவிலான பண்ணை நிலங்களுக்கு நன்கு பயன்படும். பெரிய அளவிலான தேயிலைத் தோட்டங்களுக்கு உரம் இட எங்கள் ட்ரோன் மிகவும் உதவும்.

எங்களுடைய இந்த ட்ரோனைக் கொண்டு ஒரு நாளில் 50 ஏக்கர் நிலப்பரப்பு அளவுக்கு வேலை செய்யலாம். அதற்கு நாங்கள் வாங்கும் கட்டணம் ரூ.5 ஆயிரம் மட்டுமே'' என்கிறார் தேவன் சந்திரசேகரன்.

இவர்கள் 2020 - இல் "ஃபியூஸ்லேஜ் இன்னோவேஷன்' என்ற நிறுவனத்தை இதற்காக உருவாக்கியிருக்கிறார்கள். இந்த நிறுவனத்தைப் பொருத்தவரை அதன் அனைத்து நிர்வாகத்தையும் நடத்திச் செல்பவர் தேவகிதான். நிறுவனத்தை தொடங்கிய தொடக்க காலத்தில் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார்கள். ட்ரோன்களை உருவாக்குவதுடன், அதைச் செயல்படச் செய்வதற்கான நிதி பெரும் பிரச்னையாக இவர்களுக்கு இருந்திருக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு கிடைத்த அரசின் மானியங்கள், நிதி, அங்கீகாரம் ஆகியவை நிறுவனத்தை வலுவாக்கியிருக்கிறது. கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சுமார் 370 விவசாயிகள் இவர்களுடைய தொடர்பில் இருக்கிறார்கள். அவர்களுக்கான விவசாய வேலைகளை இவர்கள் செய்து தருகிறார்கள்.

""எங்கள் ட்ரோன் பயிர்களுக்குத் தேவையான உரத்தை இடும். பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கும். கூடவே அந்தப் பகுதியின் மண் வளம், பயிர்களின் தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்யும். கேரளாவிலேயே எங்களுடைய தொழில்முனைவு நிறுவனம்தான் முதன்முதலாக மத்திய வேளாண்துறையின் அனுமதியையும், சிவில் அவியேஷன் துறையின் அனுமதியையும் பெற்றிருக்கிறது'' என்கிறார் தேவகி.

வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு என்றில்லை, பூச்சிக் கொல்லி மருந்து அடிக்க தேவையான பணியாளர்கள் இல்லாத பற்றாக்குறையும் கேரளாவில் பயிர்த் தொழில் செய்வதில் பெரும் பிரச்னையாக உள்ளது. மேலும் முதுகில் பூச்சிக் கொல்லி மருந்து நிரம்பியிருக்கும் கேனைச் சுமந்து கொண்டு உயர்ந்த, தாழ்ந்த பகுதிகளில் ஒருவர் பூச்சிக் கொல்லி மருந்து அடிப்பது என்பது மிகவும் சிரமமான செயல். அதுமட்டுமல்ல, தாவரங்களின் எல்லாப்பகுதிகளிலும் படும்படி தேவையான அளவுக்கு பூச்சிக் கொல்லி மருந்து அடிப்பது சாத்தியமில்லை. இவர்கள் உருவாக்கியிருக்கும் இந்த ட்ரோன் தேவையான அளவு பூச்சிக் கொல்லி மருந்தை, தேவைப்படும் பகுதியில் விரைவாகத் தெளித்துவிடுகிறது.

""நாங்கள் உருவாக்கியுள்ள ட்ரோனைப் பயன்படுத்தினால் விவசாயிகளுக்கு அதிக செலவாகாது. உதாரணமாக 50 ஏக்கர் நிலப்பரப்புள்ள நிலத்துக்கு நாங்கள் உரமிடவோ, பூச்சிக் கொல்லி மருந்து அடிக்கவோ ரூ.5000 வசூலிக்கிறோம். இதனால் விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் லாபம்'' என்கிறார் தேவன்.

கொச்சி கலமசேரியில் உள்ள கின்ஃப்ரா ஹை - டெக் பார்க்கில் இருந்து செயல்படுகிறது இவர்களுடைய நிறுவனம்.

கடந்த ஆண்டு கேரளாவின் குட்டநாடு பகுதியில் 800 ஏக்கர் நெல் வயல்களில் இவர்களுடைய ட்ரோன் பயன்பட்டு இருக்கிறது. இந்த ட்ரோன் மிக விரைவாக விளைநிலப் பகுதிகளில் பயிர்களின் வளர்ச்சியை ஆய்வு செய்து, இந்த பகுதியில் உள்ள பயிர்களுக்கு எவ்வளவு பூச்சிக்கொல்லி மருந்து தேவை என்று சொல்லிவிடும். இது விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கிறது. தேவையான பூச்சிக்கொல்லி மருந்துகளை மட்டும் அவர்கள் வாங்கிக் கொடுத்தால் போதும்.""எங்களுடைய ட்ரோனில் 20 லிட்டர் கொள்ளளவு உடைய கலன் உள்ளது. பூச்சிக்கொல்லி மருந்து என்றால் 16 லிட்டர் நிரப்பிக் கொள்ளலாம். உரங்கள் என்றால் 12 லிட்டர் அளவுக்கு நிரப்பிக் கொள்ளலாம். இந்த ட்ரோனை 15 நிமிடங்களில் சார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் 2 பேட்டரிகள் உள்ளன. ட்ரோன் இயங்கும்போதே தானாகவே பேட்டரி சார்ஜ் ஆகிவிடும். எனவே சார்ஜ் செய்வதற்காக ட்ரோனை நிறுத்தி வைக்க வேண்டிய தேவையில்லை. செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வரைபடத்தை இந்த ட்ரோன் பயன்படுத்துகிறது'' என்கிறார் தேவன் சந்திரசேகரன்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT