இளைஞர்மணி

அலுவலகம்... அமைதிப் பூங்கா!

சுரேந்தர் ரவி

பணியிடமும் பணிசார்ந்த சூழலும் மிகவும் முக்கியமானது. தினமும் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரத்தைப் பணியிடத்திலேயே செலவிடுகிறோம். அதனால், அங்கு பணிபுரியும் சக பணியாளர்களுடன் இணக்கமான நல்லுறவைப் பேணுவது பணிக்கு மட்டுமல்லாமல் நம் மனஅமைதிக்கும் உதவும். நாம் பணிபுரியும் இடத்தில் அனைவரும் நம்மைப் போலவே இருப்பார்கள் என்ற எண்ணத்தை முதலில் புறந்தள்ள வேண்டும். 

பள்ளி, கல்லூரிகளில் ஒவ்வொரு மாணவரும் ஒருமாதிரி இருப்பதைப் போலவே, நிறுவனத்தில் ஒவ்வொரு பணியாளரும் வெவ்வேறு குணநலன்களைக் கொண்டிருப்பர். ஆனால், அனைவருடனும் ஓரளவுக்கு இணக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சில பணியாளர்கள் ஆர்வக் கோளாறுடன் இருப்பார்கள். நிறுவனத்தின் எல்லா செயல்களிலும் தாம்தான் முன்னிலை பெற வேண்டும் என்ற பேரவா கொண்டிருப்பார்கள்.  அடுத்தவர்கள் செய்யும் வேலையையும் தாமே செய்ததாகக் கூறி நற்பெயர் வாங்க முயல்வார்கள். அதுபோன்ற ஆர்வக்கோளாறு மிக்க பணியாளர்களின் செயல்பாடுகள் நமக்கு சில சமயங்களில்  வெறுப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன. அது நமக்கு எத்தகைய மனநிலையை ஏற்படுத்துகிறது என்பதை அவர்களிடம் நேரடியாகக் கூறிவிடுவது நல்லது. 

நிறுவனம் சார்ந்த விவகாரங்கள் அனைத்திலுமே சம்பந்தப்பட்ட நபர்களிடம் நேரடியாகக் கருத்து தெரிவிப்பது சிறப்பு. அதை மனதுக்குள் வைத்துக் கொண்டால் அதுசார்ந்த வன்மம் அதிகரித்து சக பணியாளர்களுடனான உறவு சிதைந்துவிடும் அபாயம் உள்ளது. அதே வேளையில், அதிருப்திகளை சக பணியாளர்களிடம் கூறும்போது இணக்கமான முறையில் தெரிவிக்க வேண்டும். 

சக பணியாளர்கள் குறித்த செயல்பாடுகளை அவர்களிடமே குற்றச்சாட்டாகக் கூறக் கூடாது. அது குறித்து அவர்களிடம் கூறவும் வேண்டும். ஆனால், அவ்வாறு கூறுவதால் உறவும் பாதிக்கப்படக் கூடாது. அதை மனதில் வைத்து, எவ்வாறு எந்த சமயத்தில் கூற வேண்டுமோ அதைத் தெளிவாக முடிவு செய்து கொள்ள வேண்டும். 

அவ்வாறு எடுத்துக் கூறியும் அவர்களது செயல்பாடுகளில் மாற்றமில்லை எனில், அது தொடர்பாக நிறுவன மேலாளரிடம் கூறிவிடலாம். அதையும் புகாராகக் கூறாமல் பணிசார்ந்த முழுத்திறனை வெளிப்படுத்துவதற்கு இடையூறாக இருப்பது போன்றும் சக பணியாளரின் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை போன்றும் கூறலாம். 

சக பணியாளர்களுக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளலாம். முக்கிய திட்டங்களைச் செயல்படுத்துதல், கூட்டங்களில் உரையாற்றுதல் உள்ளிட்ட விவகாரங்களில் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யலாம். 

சில பணியாளர்கள் மற்றவர்களிடம் உதவி கேட்பதை விரும்பமாட்டார்கள். அத்தகையவர்கள் கேட்காதபோதும் நாம் முன்சென்று உதவலாம். சக பணியாளர்கள் திறம்படச் செயலாற்றுவதற்கான சிறு முயற்சிகளை மேற்கொள்ளலாம். அவர்கள் சிறப்பாகப் பணியாற்றினால் பாராட்டுவது, சில தவறுகள் செய்தால் நல்ல முறையில் கூறி அவற்றைத் திருத்துவது ஆகியவற்றைச் செய்யலாம். அதேபோல், மற்ற பணியாளர்கள் குறித்து தவறாகப் பேசுவதையும் குற்றஞ்சாட்டுவதையும் அறவே தவிர்த்து விடலாம். 

நம்முடைய பணியை முறையாகச் செய்ய வேண்டும். நேர்மையாகவும் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ளுங்கள். திறன்களை மென்மேலும் மேம்படுத்தி சிறப்பாகச் செயல்பட்டு வந்தால், நம்மைப் பற்றிய அபிப்ராயம் சக பணியாளர்களுக்கு அதிகரிக்கும். அத்தகைய சூழலே சக பணியாளர்களுடன் இணக்கமான உறவைப் பேணுவதற்கு உதவிகரமாக இருக்கும். 

மற்ற பணியாளர்களுடன் ஆரோக்கியமான போட்டிச் சூழல் நிலவுவதை ஊக்குவிக்கலாம். அந்தப் போட்டி நம்மையும் திறம்படச் செயல்படுவதற்கு ஊக்குவிக்கும். அத்தகைய போட்டி சக பணியாளர்களுடனான நல்லுறவுக்கு ஆபத்தாக மாறிவிடாமல் இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். 

சக பணியாளர்கள் தொடர்பான ஆவணங்கள், செல்லிடப்பேசி உரையாடல்கள், மின்னஞ்சல்கள் உள்ளிட்டவற்றை நீக்கிவிடாமல் வைத்துக் கொள்வது நல்லது. ஒருவேளை சக பணியாளர்கள் நம் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை எழுப்பினாலும், உரிய ஆதாரங்களைக் காண்பித்து அவற்றைப் பொய்யென நிரூபிக்க முடியும். 

மற்ற பணியாளர்களுடன் நல்லுறவைப் பேணுவதற்கு நாம் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாலும் சிலர் அவற்றையெல்லாம் உதாசீனப்படுத்துவார்கள். நம்முடன் உறவைப் பேணுவதற்கு அவர்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம். அது குறித்து பெரிதாகக் கவலை கொள்ளத் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT