இளைஞர்மணி

ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் படிப்பு... வேலை வாய்ப்பு!

14th Sep 2021 06:00 AM | - வி.குமாரமுருகன்

ADVERTISEMENT

 

இன்று உலகமே உள்ளங்கையில் சுருங்கிவிட்டது. ஒரு பொத்தானை "கிளிக்' செய்தால் போதும், அனைத்து விவரங்களும் நமது செல்களில் நடனமாடும். அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. இப்படி நாம் கேட்கும் எல்லாத் தகவல்களும் நொடியில் கிடைப்பதற்கு தகவல்கள் சேமிக்கப்பட வேண்டியது அவசியம்.

தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் காரணமாக ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் எனப்படும் புவிசார் தகவல் தொழில் நுட்பமும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் கல்வித்துறையிலும் இது சார்ந்த படிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் இல்லாத துறைகளே இல்லை.

இத்துறையின் நிபுணர்கள் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கு, ரேடார் தொழில்நுட்பம், ஜிஎஸ் ,ரிமோட் சென்சிங் மற்றும் ஜிஐஎஸ் (ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் சிஸ்டம்) தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் புவியியல் நிலைமைகள் பற்றிய ஆய்விலும் ஜிஐஎஸ் நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். இன்னும் சொல்லப்போனால், வரைபடவியல், நீரியல் தட்பவெப்பவியல் போன்ற பல பிரிவுகளிலும் ஜிஐஎஸ் தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. வானில் இருந்து ஏராளமான புகைப்படங்கள் எடுக்கப்படும் செயல்கள், தற்போது பெருமளவு முன்னேறி விட்டன. இதற்கெல்லாம் ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் சிஸ்டம் மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது.

ADVERTISEMENT

ஜிஐஎஸ் தொழில்நுட்பத்தை கற்றவர்களின் பிரதான பணியே சரியான தரவுகளைத் தருவதுதான்.

பொதுவாக நாட்டில் எத்தனையோ துறைகள் உள்ளன . அதில் எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. தரவுகளைத் திரட்டும்போது கோடிக்கணக்கான தரவுகள் நமக்குக் கிடைக்கும். ஆனால், அவற்றை சுருக்கி தெளிவான விதத்தில் கொடுக்கும் பணியை செய்ய வேண்டிய பொறுப்பு தான் இத்தகைய ஜிஐஎஸ் நிபுணர்களுக்கு உள்ளது. இப்படி பெறப்பட்ட டிஜிட்டல் தரவுகளிலிருந்து வரைபடத்தை உருவாக்குவதும் இவர்களின் பணியாகும். இப்படி உருவாக்கும் வரைபடங்கள் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என்பது மிக முக்கியம். இப்படி ஜிஐஎஸ் நிபுணர்கள் உருவாக்கும் தரவுகளை அரசுகளும், கட்டடத் துறை, பொறியியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் பயன்படுத்தும் என்பதால் ஜிஐஎஸ் நிபுணர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.

இந்திய அளவில் குறிப்பிட்ட சில கல்லூரிகளில் இளங்கலை ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் படிப்பு உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் உள்ளவர்கள் இந்த படிப்பில் சேர முடியும். மேலும் இயற்பியல், வேதியியல் சுற்றுச்சூழலியல் புவியியல் போன்றவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் முதுகலை ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் படிக்க முடியும். அல்லது முதுகலைப்பட்ட கல்வியும் கற்க முடியும். கற்பித்தல் பணி அல்லது ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் நாட்டம் உடையவர்கள் முனைவர் பட்டம் பயில முடியும். முதுகலை அல்லது முனைவர் பட்டங்களுக்குப் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இத்துறையில் சாதிக்க விரும்புவர்களுக்கு தரவு அறிவியல் பற்றிய தெளிவு இருப்பதும், எண்கள் சார்ந்த பல்வேறு விஷயங்களும் தெரிந்திருக்க வேண்டியதும் அவசியம். மேலும் "டீம் ஒர்க்' என்பது இதில் மிக அவசியம். ஏனெனில் பல்வேறு துறைகளின் பல்வேறு பிரிவுகளில் இருந்து ஏராளமானோர் தரவுகளை அனுப்பி வைப்பதால் , அவர்களை ஒருங்கிணைப்பதில் திறன் உடையவராக இருப்பது அவசியம். இதனால் அனைவரிடமும் நல்ல தொடர்பை வளர்த்துக் கொள்ளக் கூடியவராக இருப்பது மிக முக்கியமானது. ஒரே நேரத்தில் பல பணிகளைக் கையாளக் கூடிய திறன் பெற்றவராக இருந்தால் இத்துறையில் விரைவாக முன்னேற முடியும்.

அரசு மற்றும் தனியார் துறைகளில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு கொண்ட துறையாக இத்துறை வளர்ந்து வருகிறது. கூகுள் மேப், டிரான்ஸ்வர்ஸ் டெக்னாலஜிஸ் போன்ற நிறுவனங்கள் ஜிஎஸ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

அரசுத் துறைகளைப் பொருத்தவரை பாதுகாப்பு அமைச்சகம், சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், இயற்கை வள மேலாண்மை திட்டங்கள் மேற்கொள்ளும் நிறுவனங்கள், வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், வானிலை ஆய்வுத் துறைகள் போன்ற வற்றில் பணி வாய்ப்புகள் உள்ளன.

இவை தவிர, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் படித்தவர்களின் தேவை உருவாகிக் கொண்டிருக்கிறது. ஜியோ இன்பர்மேட்டிக்ஸ்-இல் விண்வெளி தொடர்பான பயன்பாடுகள் குறித்து படித்திருந்தால் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களிலும், விமானம் தொடர்பான நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகளைப் பெற முடியும்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் பிஇ (ஜியோ இன்பர்மேட்டிக்ஸ்) 4 ஆண்டுகால படிப்பாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. தூத்துக்குடி , கிண்டி கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள கல்லூரிகளிலும் இப் பாடப்பிரிவு உள்ளது.

அதுபோல் சென்னை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களிலும் எம்.டெக். (ஜியோ இன்பர்மேட்டிக்ஸ்) பாடப்பிரிவு உள்ளது. இது இரண்டு ஆண்டு கால படிப்பாகும்.

தொடக்கத்தில் புவியியல் தகவல் அமைப்புகளில் (ஜியாகிரபிக் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ்) ஆய்வாளராகப் பணியாற்ற முடியும். பின்னர் அத்துறையில் திறன் பெற்ற பின் உயர் பதவிகளுக்குச் செல்ல முடியும்.

எனவே, ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் படிப்பைப் படியுங்கள். வேலை வாய்ப்பை உறுதிப்படுத்துங்கள்.

Tags : Ilaignarmani ob Opportunity
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT