இளைஞர்மணி

வேலை மாற்றம்... ஊதிய உயர்வு!

30th Nov 2021 06:00 AM | ந.முத்துமணி

ADVERTISEMENT


எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், உதவியாளர் முதல் தலைமை செயல் அதிகாரி வரையிலான பதவிகளுக்கு தக்கப்படிதான் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவர், வேறொரு நிறுவனத்தில் அதே மாதிரியான வேலையில் சேரும்போது, முந்தைய நிறுவனத்தில் வாங்கிய ஊதியத்தை விட அதிக ஊதியத்தைத்தான் எதிர்பார்ப்பார். தனது தகுதிக்குப் பொருத்தமான ஊதியம் வேண்டும் என்பார்.

"நீங்கள் எதிர்பார்க்கும் தகுதிக்குரிய ஊதியத்தை பெற வேண்டுமானால், முதலில் அதற்கு உங்கள் தகுதியை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதை நீங்கள் வேலைக்கு விண்ணப்பிக்கும் நிறுவனத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

வேலைக்கான நேர்காணலின்போது, நல்ல ஊதியத்தை நீங்கள் கேட்பதற்கு முன்பு, உங்கள் பலம் மற்றும் பலவீனங்களை நீங்கள் அறிந்திருப்பது நல்லது. அப்போதுதான் உங்களிடம் தொடுக்கப்படும் கடினமான கேள்விகளை உங்களால் எளிதில் எதிர்கொள்ள முடியும். ஊதியத்திற்காக பேரம் பேசும்போது நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். பலவீனங்களை காட்டிலும் பலம் வலிமையாக இருப்பதை நேர்காணல் நடத்தும் நிறுவன அதிகாரிக்கு உணர்த்தும் வகையில் கருத்துகளை முன்வைக்க வேண்டும். பிற்காலத்தில் ஊதிய உயர்வு கேட்பதைக் காட்டிலும், வேலையை ஏற்பதற்கு முன்பாக ஊதியத்திற்காக பேரம் பேசுவது எளிது. சூழ்நிலை உங்களுக்குச் சாதகமாக இருப்பதை நீங்கள் உணர வேண்டும்' என்கிறார்கள் மனிதவளத்துறை வல்லுநர்கள்.

கூடுதல் அல்லது அதிக ஊதியங்களை பெறுவதற்கு நடைமுறையில் எளிமையாக கடைபிடிக்கப்படும் வழி, புதிய நிறுவனங்களுக்கு ஒருவர் இடம்மாறுவது தான். குறைந்தது ஒன்று அல்லது 2 ஆண்டுகள், அதிகபட்சமாக 5
ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துவிட்டு வேறு நிறுவனத்துக்கு மாறுவதுதான் இன்று இளைஞர்களிடையே காணப்படும் பொதுவான போக்கு.

ADVERTISEMENT

ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்துக்கு மாற நினைப்பவர்களை இப்போது நிறுவனங்களும் விரும்புகின்றன. வேறு நிறுவனங்களுக்கு தாவுவது அல்லது அதே நிறுவனத்தில் வேறு வேலைகளுக்கு மாறுவது, வேலைச்சந்தையில் உங்களின் மதிப்பைக் கூட்டிவிடுகிறது.

புதிய நிறுவனத்துக்குச் செல்ல விரும்புபவர்கள் அவர்கள் எதிர்பார்க்கும் ஊதியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? வேலைக்கான நேர்காணலின்போது எப்படிப் பேச வேண்டும்? இதோ சில யோசனைகள்:

பொறுமை அவசியம்: ஊதியம் பற்றிய பேச்சை நிறுவனமே தொடங்கும் வரை பொறுமை காப்பது அவசியம். அப்படிச் செய்வதன் மூலம், நிறுவனம் வழங்க முன்வரும் ஊதியம் என்ன என்பதை அறிந்துகொள்ளலாம். அதைவிட முக்கியம், நாம் எதிர்பார்ப்பதை விட கூடுதல் ஊதியத்தை வழங்க நிறுவனம் முன்வந்தால், அது நமக்கு நல்லது தானே? எனவே, அவசரம் வேண்டாம்.

ஊதிய எதிர்பார்ப்பு: விண்ணப்பித்திருக்கும் வேலைக்கு ஏற்கெனவே நிறுவனங்களில் அளிக்கப்படும் ஊதியம் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதை முன்கூட்டியே அறிந்துகொள்வது, நம்முடைய ஊதிய எதிர்பார்ப்பை முடிவு செய்வதற்கு உதவியாக இருக்கும்.

எவ்வளவு ஊதியம் உங்களுக்கு வேண்டும் என்பதை முதலிலேயே தெளிவுபடுத்திவிடவேண்டும்.

மின்னஞ்சல் மூலமாக: தற்போது பிரபலமாக இருக்கும் தகவல்தொடர்பு, மின்னஞ்சல் தான். ஊதியம் தொடர்பாக பேரம் பேசும்போது, உங்கள் எதிர்பார்ப்பை சுருக்கமாகவும், தெளிவாகவும் குறிப்பிட தவறக் கூடாது.

தகுதியை முன்நிறுத்துங்கள்: எதிர்பார்க்கும் ஊதியத்தை திட்டவட்டமாக நீங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் எடுத்துரைக்கும் போதே, உங்கள் திறமைகள், அனுபவங்கள், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றவிருக்கும் உங்கள் திட்டங்களைத் தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். அதிக ஊதியத்தை கேட்பதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். உங்கள் தகுதி, வேலைத் திறமை, செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே உங்களுக்கான ஊதியத்தை முடிவு செய்வார்கள்.

எது சரி? உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்த ஊதியத்தை அளிக்க நிறுவனம் தயாராக இல்லாமல் போகலாம். அந்த நேரத்தில், நிறுவனம் வழங்க முன்வரும் ஊதியம் நியாயமானதா? இந்நிறுவனத்தில் பணியாற்றுவது எதிர்காலத்தில் பயன் அளிக்குமா? என்பதையும் நீங்கள் ஆராய வேண்டும்.

அவர்கள் தரும் ஊதியத்தை வாங்கிக் கொண்டு அந்த நிறுவனத்தில் சேர நீங்கள் முடிவெடுப்பதற்கு முன்பு இந்த விஷயத்தில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

பணிவு முக்கியம்: நேர்காணலின் எல்லா நிலைகளிலும் பணிவாக நடந்து கொள்வது முக்கியம். நிறுவனத்தின் விருப்பத்திற்குரியவராக நீங்கள் நடந்துகொள்வது, நல்ல ஊதியத்துடன் கூடிய வேலை கிடைப்பதற்கான உங்களுடைய வாய்ப்பை அதிகப்படுத்தும்.

எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும்: நல்ல ஊதியத்திற்கு பேரம் பேசுவது தவிர, ஒட்டுமொத்த ஒப்பந்தத்தையும் கவனிக்கத்தவறக் கூடாது. வேலையின் தன்மை, பணியிடம், நெகிழ்வுத்தன்மை, சலுகைகள், வளர்ச்சிக்கான வாய்ப்புகள், பணிச்சூழல், பயணவாய்ப்புகள் உள்ளிட்டவற்றை நன்கு கவனிக்க வேண்டும். அவசரகதியில் எந்தவொரு முடிவையும் எடுக்கக் கூடாது. யோசிப்பதற்கான கால அவகாசத்தை கேட்டுப்பெறுங்கள்.

எல்லைக் கோடு முக்கியம்: பேரம் பேசவேண்டுமென்பதற்காக பேசிக் கொண்டிருக்கக் கூடாது. மிகவும் முக்கியமானவற்றுக்கு மட்டும் அழுத்தம் கொடுத்து, மற்ற அம்சங்களை பின்னர் தீர்த்துக் கொள்ள இணங்கலாம். எந்தச் சூழலிலும் - எந்த காரணத்திற்காகவும் - எரிச்சல் ஊட்டும் வகையில் உங்கள் அணுகுமுறை இருக்கக் கூடாது.

எதுவாக இருந்தாலும், உங்கள் "தகுதி'யை அறிந்துகொள்வது அத்தியாவசியமாகும்.

அப்போதுதான், உங்கள் ஊதிய எதிர்பார்ப்புகளை நம்பிக்கையுடன் நியாயப்படுத்த முடியும். வேலைக்கு நீங்கள் தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உங்கள் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது அவசியமாகும்.

Tags : Ilaignarmani Job change ... pay rise
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT