இளைஞர்மணி

2021-ஆம் ஆண்டின்  சாதனையாளர்...: எலும்பியல்துறை மருத்துவருக்கு விருது!

30th Nov 2021 06:00 AM | வா.ஆதவன்

ADVERTISEMENT

 

நாட்டின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக உழைப்பவர்களைக் கண்டுபிடித்து ஒவ்வோராண்டும் சாதனையாளர் விருதை வழங்கி அவர்களை கெளரவித்து வருகிறது "இந்தியன் அச்சீவர்ஸ் ஃபோரம்'. 2021-ஆம் ஆண்டுக்கான சாதனையாளர் விருதைப் பெற்றிருக்கிறார் மருத்துவர் சதீஷ் முத்து. திண்டுக்கல்லில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் எலும்பியல் துறையில் துணைப் பேராசிரியராகப் பணிபுரியும் அவர் செய்த சாதனைதான் என்ன? என்ற கேள்வியோடு அவரை அணுகினோம்.

""எனது சொந்த ஊர் கரூர். சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தேன். முதுநிலைப் பட்டப்படிப்பான எம்எஸ் படிப்பை மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் படித்தேன். மருத்துவத்துறையில் எனது முனைவர் பட்ட ஆய்வை சார்தா பல்கலைக்கழகத்தில் செய்து கொண்டிருக்கிறேன். நான் படிக்கும்போது என்னுடைய பேராசிரியர் ஸ்ரீனிவாசன், மருத்துவத்துறையில் வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவார். அதற்காகவே என்னை முடநீக்கியல்துறையைத் தேர்ந்தெடுத்து படிக்கச் சொன்னார். நானும் படிக்கும் காலத்தில் இருந்தே மருத்துவத்துறையில் புதிதாக என்ன செய்யலாம் என்ற ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தேன். வெளிநாடுகளில் மருத்துவத்துறையில் என்ன புதிதாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எப்போதும் ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருப்பேன்.

என்னுடைய படிப்பு முடிந்தததும் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் பணிக்கு அமர்த்தப்பட்டேன். பெரிய பெரிய ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு சிறிய மருத்துவமனையில் வேலை கிடைத்ததனால், நான் எந்த ஆராய்ச்சியும் செய்யமாட்டேன் என்றே என்னைச் சுற்றியிருந்த பலரும் கருதினார்கள்.

ADVERTISEMENT

ஆனால் நான் மனம் தளரவில்லை. முடநீக்கியல்துறையில் என்ன புதிய சிகிச்சைமுறைகளை மேற்கொள்ளலாம் என்று ஆராய்ச்சி செய்வதற்காக "ஆர்த்தோபெடிக் ரிசர்ச் குரூப்' என்ற பெயரில் ஓர் ஆராய்ச்சிக் குழுவை நான் உருவாக்கினேன்.

இந்த ஆராய்ச்சிக் குழுவின் மூலம் முடநீக்கியல்துறை சார்ந்த 50க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு எவ்வாறு மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளைச் செய்வது என்று சொல்லிக் கொடுத்தோம்.

தொடர்ந்து எங்கள் ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்தவர்களும் ஆர்த்தோபெடிக் துறை சார்ந்த மருத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தோம். அந்த ஆராய்ச்சிகள் தொடர்பான கட்டுரைகள் சர்வதேச மருத்துவ ஆராய்ச்சி இதழ்களில் வெளிவந்தன. என்னுடைய 115 ஆராய்ச்சிக் கட்டுரைகள் இதுவரை வெளிவந்திருக்கின்றன.

என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை உலகம் முழுவதும் உள்ள பல மருத்துவத்துறை சார்ந்தவர்கள் படித்திருக்கிறார்கள். அவர்களுடைய ஆராய்ச்சி கட்டுரைகளில் எங்களுடைய ஆராய்ச்சி முடிவுகளை ஏற்றுக் கொண்டு, அவற்றை 2300க்கும் அதிகமான மேற்கோள்களாக எடுத்துக் கூறியிருக்கின்றனர்.

இந்த நிலையில்தான், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் எனக்கு பணி மாறுதல் கிடைத்தது.

"இந்தியன் ஆச்சீவர்ஸ் ஃபோரம்'என்னுடைய பணிகள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு இந்த ஆண்டுக்கான சாதனையாளராக என்னைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.நாங்கள் ஆர்த்தோபெடிக் துறையில் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிகளுக்காகத்தான் சாதனையாளர் விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

ஏற்கெனவே மருத்துவப் படிப்பில் என்ன கற்றுக் கொடுக்கப்பட்டதோ அதை அப்படியே நடைமுறையில் செய்வது மருத்துவத்துறையில் வழக்கமாக இருக்கிறது. உதாரணமாக காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மருந்து என்றால், அதை அப்படியே பயன்படுத்துவார்கள்.

நாங்கள் இதற்கு மாறாக அந்த மருந்து பல்வேறு நோயாளிகளிடம் ஏற்படுத்தும் பலவிதமான மாறுதல்களை ஆராய்ச்சி செய்வோம். மருந்தை- சிகிச்சைமுறைகளை - மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடுவோம்.

உதாரணமாக நான் மேற்கொண்டுள்ள ஓர் ஆராய்ச்சி பற்றி சொல்ல வேண்டும். மூட்டுவலி இப்போது அதிகமாக பலரையும் தாக்குகிறது.இதற்கு காரணம் மூட்டு எலும்புகள் தேய்ந்து போவதே. இந்த மூட்டுவலிக்கு அவ்வப்போது மருந்து, மாத்திரைகள் கொடுத்து நோயாளிகளுக்கு வலி தெரியாமல் பார்த்துக் கொள்வோம். ஆனால் ஒரு கட்டத்தில் தேய்ந்து போன மூட்டுகளை அகற்றிவிட்டு, மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. மூட்டுவலியைச் சரி செய்வதற்கான வேறு மருத்துவமுறை தற்போது இல்லை.

நமது உடல் இயக்கத்தின்போது எலும்புகள் அசைகின்றன. இரண்டு எலும்புகளுக்கிடையில் குருத்தெலும்பு சவ்வுகள் இருக்கின்றன. பல்வேறு காரணங்களால் இந்த சவ்வு தேய்ந்துவிடுகிறது. அதனுடைய அளவு குறைந்துவிடுகிறது.

இதனால் எலும்புகள் ஒன்றையொன்று உரசிக் கொள்கின்றன. எலும்புத் தேய்மானம் ஏற்பட்டுவிடுகிறது. எலும்புத் தேய்மானம் ஏற்படாமல் இருக்க, இந்த குருத்தெலும்பு சவ்வின் அளவைக் குறையவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக நாங்கள் ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறோம்.

நோயாளியின் உடலில் உள்ள ஸ்டெம் செல்களை எடுத்து பாதிப்படைந்துள்ள குருத்தெலும்பு சவ்வுகள் இருக்கும் இடத்தில் செலுத்தினால், அந்த சவ்வுகள் புதிதாக வளரும் என்பது வெளிநாட்டினரின் ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது. நாங்கள் சோதனை முறையில் ஸ்டெம் செல்களை குருத்தெலும்பு சவ்வுகள் இருக்குமிடத்தில் பலருக்குச் செலுத்தியிருக்கிறோம். அவ்வாறு செலுத்தப்பட்டவர்கள் பலருக்கு இப்போது மூட்டு வலி இல்லை. சவ்வு எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள குறைந்தது ஓர் ஆண்டாவது ஆகும்.

குருத்தெலும்பு சவ்வு வளர்கின்ற தன்மை ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்பதால், எல்லாருக்கும் குருத்தெலும்பு சவ்வு ஒரே மாதிரி வளர்வதை இந்த ஸ்டெம் செல் சிகிச்சைமுறையால் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதே எங்களுடைய ஆராய்ச்சியின் நோக்கம் ஆகும்.

எங்களுடைய ஆராய்ச்சி வெற்றி பெறும்நிலையில் மூட்டுவலிக்கான ஸ்டெம் செல் சிகிச்சைமுறை மருத்துவம் நடைமுறைக்கு வந்துவிடும். மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான தேவை இருக்காது. இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளுக்காகத்தான் இந்தியன் அச்சீவர்ஸ் ஃபோரம் என்னை இந்த ஆண்டுக்கான சாதனையாளர் விருதுக்குத் தேர்ந்து எடுத்திருக்கிறது என நினைக்கிறேன்'' என்றார்.

Tags : Ilaignarmani Award for Orthopedic Physician
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT