இளைஞர்மணி

விமர்சனங்கள்...  வெற்றியின் படிக்கட்டுகள்!

23rd Nov 2021 06:00 AM | கோமதி எம்.முத்துமாரி

ADVERTISEMENT

 

"தோல்விதான் வெற்றிக்கான முதல்படி' என்பார்கள். ஆனால், விமர்சனங்களும் வெற்றிக்கான படிக்கட்டுகள்தான்.

நீங்கள் புதிதாக ஒரு செயலைத் தொடங்கும்போது உங்களால் முடியாது என்று உங்கள் நம்பிக்கையை மற்றவர்கள் சீர்குலைக்கின்றனரா? புது முயற்சியில் தனிப்பட்ட முறையில் திருப்தி இருந்தாலும் எதிர்மறைக் கருத்துகள் அதிகம் வருகின்றனவா? உங்கள் நிறைகள் பாராட்டப்படாமல் குறைகள் மட்டும் சுட்டிக்காட்டப்படுகிறதா? அப்படியெனில் நீங்கள், சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறீர்கள். 

ஆம். வாழ்க்கையில் நீங்கள் உங்களுடைய லட்சியத்தை நோக்கிப் பயணம் செய்யும்போது  விமர்சனங்கள் வருவது இயல்பே. வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் எனில் விமர்சனங்களைப் புறந்தள்ள வேண்டும். ஏனெனில், நீங்கள் என்ன செய்தாலும் அதற்கான விமர்சனங்கள் வந்துகொண்டே தான் இருக்கும். உண்மையில்  பிறரால் விமர்சிக்கப்படாவிட்டால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றே அர்த்தம்.  

ADVERTISEMENT

மற்றவரின் விமர்சனங்களுக்குச் செவிசாய்த்தால் உங்கள் இலக்கை நீங்கள் ஒருபோதும் அடைய முடியாது.  அனைவருடனும் ஒத்துப்போகவோ அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தவோ ஒருவரால் முடியாது. பிறரின் விமர்சனங்களில் இருந்து தேவையானவற்றை மட்டும் கற்றுக்கொள்ள வேண்டும். விமர்சனங்களை எப்படிக் கையாள்வது? இதோ சில வழிகள்...

பயத்தை விட்டொழியுங்கள்: 

விமர்சனத்தால் ஏற்படும் பயத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். 
உதாரணமாக, நீங்கள் சொந்தமாக ஒரு தொழில் தொடங்க விரும்பும்போது சுற்றியுள்ளவர்கள் எதிர்மறை விமர்சனங்களை முன்வைக்கலாம். இதனால் பயம் ஏற்படுவது சாதாரணமானதுதான். ஆனால், அதற்காக உங்கள் முயற்சியை நிறுத்துவது மிகவும் தவறானது. மற்றவர்களின் விமர்சனத்தால் தோல்வி பயம் வந்துவிட்டால் எந்தவொரு முயற்சியையும் உங்களால் செய்ய முடியாது என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 

உந்துதலாக எடுத்துக் கொள்ளுங்கள்:

விமர்சனங்களை நேர்மறையாக பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். உங்களால் முடியாது என்று மற்றவர்கள் சொல்லும்போது அதைச் செய்துகாட்ட வேண்டும் என்று உந்துதல் (மோட்டிவேஷன்) மனதில் ஏற்பட வேண்டும். முயற்சியில் தோல்வி ஏற்படலாம் என்று கூறினால், அந்த காரணங்களை கருத்தில் எடுத்துக்கொண்டு தோல்வியைத் தவிர்க்கும் வழிகளை ஆராய்ந்து செயல்பட வேண்டும். யாருடைய வார்த்தைகளும் உங்களின் வளர்ச்சிக்குத் தடையில்லை என்பதை அவ்வப்போது உறுதி செய்துகொள்ளுங்கள். 

புது வழியை நோக்கிச் செல்லுங்கள்: 

எல்லாரும் செய்யும் ஒரு வேலையைத் தான் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை, அதுபோல எல்லாரும் செல்லும் பாதையில்தான் நீங்கள் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. பெரும்பாலானோர் செல்லும் பாதை தவறாகக் கூட இருக்கலாம். 

இதுவரை யாரும் செய்திராத ஒரு புதிய முயற்சியை செய்யும்போது விமர்சனங்கள் அதிகமாகவே இருக்கும். விமர்சனங்களைக் கருத்தில் கொள்ளாமல், உங்களுக்கான பாதையில் செல்ல வேண்டும். அந்த நேரத்தில் சிரமங்கள் வந்தாலும் நீங்கள் எடுத்த முடிவு என்பதால் அதை தீர்க்கும் வழிகளும் உங்கள் கைகளில் இருக்கும். புதிய முயற்சிகளைச் செய்யும்போது மட்டுமே உலகத்தில் நீங்கள் அதிக கவனம் பெறுவீர்கள். 

அதிக யோசனை வேண்டாம்:

எந்த ஒரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என்ன சொல்வார்கள் என்று பலரும் யோசிப்பதுண்டு. ஆனால், எல்லாவற்றுக்கும் அப்படி யோசித்தால் நீங்கள் நினைத்ததை செய்ய முடியாது. அதனால் அவர்களிடம் சொல்ல வேண்டியவற்றை மட்டும் சொன்னால் போதுமானது. 

நீங்கள் வெற்றி பெற்றால் பாராட்டும் குடும்பத்தினர் தோல்வியுற்றாலும் உங்களுக்கு ஆதரவாகவே இருப்பார்கள். உங்களுக்கு சரி என்று மனதில் பட்டால் யோசிக்காமல் களத்தில் இறங்கிவிடுங்கள். 

முடிவு உங்கள் கையில்...

வாழ்க்கையில் முக்கியமான முடிவுகள் சுய முடிவுகளாக இருக்க வேண்டும். முக்கிய பாதையில் பயணப்படும்போது மற்றவர்களின் அனுபவம், அறிவுரை அனைத்தும் தேவைதான். ஏனெனில் அவற்றில் இருந்து நாம் செய்ய இருக்கும் தவறுகளை முன்கூட்டியே சரி செய்து கொள்ள முடியும். ஆனால், முடிவு உங்கள் கையில் இருக்க வேண்டும். எதை நோக்கிச் செல்கிறோம், எந்த பாதையில் செல்கிறோம் என்பதை முழுக்க முழுக்க நீங்களே முடிவு செய்ய வேண்டும்.  

விமர்சனத்தைத் தவிர்த்து விடுங்கள்! 

உங்களை 100 பேர் பாராட்டுகிறார்கள். ஆனால் ஒருவர் மட்டும் ஒரு எதிர்மறை விமர்சனத்தை முன்வைக்கிறார். இப்போது நீங்கள் அந்த விமர்சனத்தை மட்டும்தான் யோசித்துக் கொண்டிருப்பீர்கள் அல்லவா? இதுதான் சராசரி மனித மனம். 

நூறு பாராட்டுகளை விட்டுவிட்டு ஒருவர் கூறிய, மனதைப் புண்படுத்தும் வார்த்தைகளை அசைபோட்டுக்கொண்டிருப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். ஆனால் அந்த எதிர்மறை விமர்சனத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.  

விமர்சனமே வெற்றி!

விமர்சனத்தை வெற்றியின் ஒரு பகுதியாக கருதுங்கள். ஆம், வெற்றிக்கு அது வேண்டும். விமர்சனம் இன்றி வெற்றி பெற்றவர்கள் யாரும் இருக்க முடியாது. விமர்சனங்களை அமைதியாகக் கடந்துவிடுங்கள். இதற்காக நீங்கள் யாரை வேண்டுமானாலும் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு பிரபலத்துக்கும் ரசிகர்கள் இருப்பதுபோல எதிர்ப்பவர்களும் இருப்பார்கள். அதற்காக அவர்களின் வளர்ச்சி தடைபடுவதில்லை. விமர்சனங்களை வரவேற்று ஏற்றுக் கொள்ளுங்கள். அவை உங்கள் வெற்றியின் படிக்கட்டுகளாகும்.

Tags : Ilaignarmani Reviews
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT