இளைஞர்மணி

வேலை... இந்திய அரசின் இணையதளம்!

DIN


பள்ளி, கல்லூரிகளில் தங்களது படிப்பை நிறைவு செய்து கொண்டவர்கள், தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வதற்காகத் தங்களது கல்விக்கேற்ற வேலைவாய்ப்பினைத் தேடத் தொடங்குகின்றனர். இந்தத் தேடல் உள்ளூர், வெளியூர், வெளிநாடு என்று மட்டுமின்றி, அரசு அமைப்புகள், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பன்னாட்டுநிறுவனங்கள் என்று அவரவர் விருப்பத்திற் கேற்றபடியும், அவர்களது தேவைகளைச் சார்ந்தும் அமைகின்றன. இளம் வயதினரின் தேடலுக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்புத் தகவல்களை வழங்கக் கூடிய வகையில் பல்வேறு இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த இணையதளங்களில் ஒன்றாக, இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் "நேஷனல் கேரீயர்' சர்வீஸ் எனும் இணையதளம் இருக்கிறது.

இந்த இணையதளத்தில், ஜாப்சீக்கர், எம்ப்ளாயர், லோக்கல் சர்வீஸஸ், கேரீயர் சென்டர், கவுன்ùஸலர், ஸ்கில் புரவைடர், பிளேஸ்மென்ட் ஆர்கனிசேஷன், கவர்ன்மென்ட் டிபார்ட்மென்ட், ரிப்போர்ட் அண்ட் டாக்குமென்ட்ஸ், ட்ரெயினிங் அட் என்ஐசிஎஸ், க்ரீவன்ஸ் எனும் முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

ஜாப்சீக்கர் எனும் தலைப்பிலான பக்கத்தில், வேலை தேடுபவர்கள் தங்களுக்கான ஒரு கணக்கினைத் தொடங்கிக் கொண்டு, தங்களது சுயவிவரக் குறிப்பு, சான்றிதழ், பணி அனுபவம் உள்ளிட்ட தகவல்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். சுயவிவரக்குறிப்பினை மைசெஃல்ப், மை ஸ்கில், ஏரியா ஆஃப் இன்ட்ரெஸ்ட் என்று மூன்று தலைப்புகளில் வீடியோ வடிவில் வழங்குவதற்கான வசதியும் இடம் பெற்றிருக்கிறது. மேலும், இங்கு கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை இத்தளத்தின் மின்னிமப் பாதுகாப்புப் பெட்டகத்தில் சேமித்து வைப்பதற்கான வசதிகளும் தரப்பட்டிருக்கின்றன.

இப்பக்கத்தில் அண்மைய வேலைகள் எனும் தலைப்பில் புதிய வேலைவாய்ப்புத் தகவல் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. இக்குறிப்புகளில் சொடுக்கி, குறிப்பிட்ட வேலைவாய்ப்புத்தகவல் பக்கத்திற்குச் செல்ல முடியும். அங்கு குறிப்பிட்ட வேலைவாய்ப்புத் தகவலை முழுமையாகத் தெரிந்து கொள்வதுடன், கீழ்ப்பகுதியில் அந்த வேலைத்தகவலை அச்சிட்டு எடுத்துக் கொள்வதற்கான வசதியும், விண்ணப்பிப்பதற்கான இணைப்பும் அளிக்கப்பட்டிருக்கின்றன.
எம்ப்ளாயர் தலைப்பின் கீழ் வேலை வழங்குபவர் புதிய கணக்கு ஒன்றினைத் தொடங்கிக் கொண்டு, தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேடிக் கொள்ள வசதியாக, வேலை தேடுபவர்களின் சுயவிவரக் குறிப்பு, பணி அனுபவம் மற்றும் திறன்களை அறிந்து கொள்வதுடன், அவர்களது சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைப் பார்வையிடுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. தங்களது நிறுவனத்திற்குத் தேவையான புதிய பணியிடங்கள் குறித்த தகவலைப் பதிவேற்றம் செய்வதற்கான வசதியும் செய்யப்பட்டிருக்கிறது.
லோக்கல் சர்வீஸஸ் எனும் தலைப்பின் வழியாக உள்ளூரிலும், அருகிலுள்ள ஊர்களிலும்இருக்கும் வேலைவாய்ப்புத் தகவல்களை அறிந்து கொள்ளவும், விரும்பிய வேலை, விரும்பும் நேரம், விரும்பும் வகையிலான ஈடுபாட்டைத் தேர்வு செய்து கொள்ளவும் முடிகிறது.
கேரீயர் சென்டர் எனும் தலைப்பின் கீழ் மாநிலம், மாவட்டம் வாரியாக இருக்கும் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் மையங்கள் குறித்த தகவல்களையும், அவை வழங்கி வரும் சேவைகளையும் அறிந்து கொள்ள முடிகிறது.
கவுன்ùஸலர் எனும் தலைப்பின் வழியாக, வேலை தேடுபவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு இடங்களிலிருக்கும் பரந்த தொழில் வாய்ப்புகள், அதனைச் சரியான நேரத்தில் அறிந்து செயல்படுதல், வேலைகளுக்கு விண்ணப்பித்தல், மற்றும் வேலைவாய்ப்பு மையங்களின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல், வேலைக்கான கண்காட்சிகளில் பங்கேற்று, புதிய வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் தரப்பட்டிருக்கின்றன.
ஸ்கில் புரவைடர் எனும் தலைப்பில், திறன் வழங்குநரின் சுயவிவரம் பெறுதல், பயிற்சிக்காகப் பெரிய நிறுவனங்களை அணுகுதல், அதில் தரப்படும் பயிற்சி குறித்த தகவல்களை அறிதல், பயிற்சி பெறுதல் மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
பிளேஸ்மென்ட் ஆர்கனிசேஷன் எனும் தலைப்பில், பணியமர்த்தும் அமைப்புகளுக்குத் தேவையான பணியாளர் குறித்த தகவல்களைப் பதிவு செய்து கொள்ளவும், புதிய பணியாளர்களைத் தேர்வு செய்து கொள்ளவும், வேலைவாய்ப்பு தொடர்புடைய கண்காட்சிகளில் பங்கேற்பதற்கான வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
கவர்ன்மென்ட் டிபார்ட்மென்ட் எனும் தலைப்பில், அரசுத்துறை அமைப்புகள் தங்களுக்குத் தேவையான பணியிடத் தகவல்களைப் பதிவு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
ரிப்போர்ட் அண்ட் டாக்குமென்ட்ஸ் எனும் தலைப்பில் அறிவுரையாளர், வேலை வழங்குபவர், அரசு அமைப்புகள், திறன் வழங்குநர், பணியமர்த்தும் அமைப்புகள், காலிப்பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளிலான அறிக்கைகள், ஆவணங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
ட்ரெயினிங் அட் என்ஐசிஎஸ் எனும் தலைப்பில் தேசியத் தொழிற் சேவை நிறுவனம் வழங்கும் பயிற்சிகளுக்கான ஆண்டு அட்டவணை, வரவிருக்கும் பயிற்சிகள் போன்ற தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு முதன்மைத் தலைப்புக்கான பக்கத்திலும், இத்தளத்தில் தகவல்களைப் பதிவேற்றுதல், தகவல்களைப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கான கையேடு தனித்தனியாக அளிக்கப்பட்டிருக்கின்றது.
இத்தளத்தின் முகப்புப் பக்கத்தில், வேலைவாய்ப்பினைக் கண்டறியுங்கள் எனும் தலைப்பின் கீழ், மாநிலங்கள் மற்றும் இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதிகள், துறைகள், மற்றவை எனும் மூன்று பிரிவுகளில், வேலைவாய்ப்புத் தகவல்கள், காலிப்பணியிடங்கள் குறித்த எண்ணிக்கையுடன் குறிப்புகளாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் குறிப்பில் தேவையானதைச் சொடுக்கி, அந்தக் காலிப் பணியிடத்திற்கான முழுமையான தகவல்களை அறிந்து கொள்ளலாம். அந்தப் பக்கத்திலேயே, அப்பணியிடத்திற்கு இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான வசதியும் செய்யப்பட்டிருக்கிறது.
முகப்புப் பக்கத்தில் மேலும், இத்தளத்தில் அன்றைய நாள் வரை பதிவு செய்திருக்கும் வேலை தேடுபவர்கள், வேலை வழங்குபவர்கள் எண்ணிக்கையுடன், தற்போதைய காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையும் இடம் பெற்றிருக்கின்றன. இவை தவிர, இத்தளத்தில் மகளிருக்கான பணிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகள், அரசு மற்றும் வேலைவாய்ப்புத் தளங்கள் உள்ளிட்ட மேலும் சில தலைப்புகளிலும் வேலைவாய்ப்பு தொடர்புடைய தகவல்கள் மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வழிகாட்டல்கள் போன்றவையும் தரப்பட்டிருக்கின்றன.
வேலையைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள், இத்தளத்தின் https://www.ncs.gov.in/ எனும் இணைய முகவரிக்குச் சென்று, தங்களது கல்வி, பணி அனுபவங்கள் மற்றும் எதிர்பார்க்கும் வேலை குறித்தத் தகவல்களைப் பதிவு செய்து, தாங்கள் எதிர்பார்க்கும் சிறந்த வேலையைப் பெற முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT