இளைஞர்மணி

அண்டார்டிகா உருகினால்...

எஸ். ராஜாராம்

அண்டார்டிக் கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் உலக வெப்பமயமாதல் காரணமாக வழக்கத்தை விட அதிக அளவு உருகிக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த விஷயம்தான்.


இவ்வாறு உருகியதால்,  உலக கடல் நீர் மட்டம், அபாய கட்டத்தைத் தாண்டும் அளவுக்கு உயரும் எனவும் விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில்  எச்சரித்து வருகின்றனர். 

அதன்படி, அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் அண்டார்டிக் பனிக்கட்டிகள் உருகுவதன் மூலம் கடல் நீர் மட்டம் 3 அடி வரை உயரும் என்கிற முடிவுக்கு விஞ்ஞானிகள் ஏற்கெனவே வந்துள்ளனர்.  கடல்நீர்மட்டம் ஓரடி உயர்ந்தாலே பூமியின் பல பகுதிகள் நீருக்குள் மூழ்கிவிடும் அபாயம் உள்ளது.  3 அடி  உயர்ந்தால் நிலைமையின்  விபரீதத்தைச் சொல்லவே தேவையில்லை.

ஆனால், இந்த ஆய்வு முடிவில் மாறுபட்டு புதிய ஆய்வு முடிவு ஒன்று அண்மையில் வெளியாகி  உள்ளது. " சயின்ஸ் அட்வான்சஸ்'  என்கிற இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையின்படி,  

அண்டார்டிகா பனிப்பாறைகள் உருகுவதன்மூலம் ஏற்படும் கடல் நீர்மட்ட உயர்வு 30 சதவீதம் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது,  அண்டார்டிகா  பனிப்பாறைகள் உருகுவதால், "நீர் வெளியேறும் வழிமுறையானது' குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், புதிய ஆய்முடிவின்படி,  அடுத்த ஆயிரம் ஆண்டுகளில்  கடல்நீர் மட்டமானது 10 அடி உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த  ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இந்த  ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.  மேற்கு அண்டார்டிகாவில் உள்ள பனி அடுக்குகளை ஆய்வு செய்து, "நீர் வெளியேறும் வழிமுறை' என்ற  புதிய கணக்கீட்டைப் பயன்படுத்தி  இந்த முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர். 

பொதுவாக அண்டார்டிகா பகுதியில் உள்ள பனிப்பாறைகள் கடல்நீர் மட்டத்துக்குக் குறைவாகவே இருக்கும். ஆனால்  இந்தப் பனிப்பாறைகள் உருகுவதன் மூலம்,  நீர்மட்டம் மேலெழும்பும்போது,  சுற்றியுள்ள பகுதிகளானது,  கடலை நோக்கி உந்தப்பட்டு கடல் நீர்மட்ட உயர்வுக்குக் காரணமாகிவிடும்.

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் மேற்கு அண்டார்டிகா பனிப்பாறைகளையொட்டி,  சுமார் 20 சதவீத அளவுக்கு "நீர் வெளியேறும் வழிமுறை'  அதிகரிப்பது நிகழும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

சரி, இதனால்  என்ன விளைவுகள் ஏற்படும்?  கடல்நீர் மட்ட உயர்வானது தீவு நாடுகளையும், கடலோர நகரங்களையும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.  உலகம் முழுவதும் 200 கோடி மக்கள் இந்த அபாயகரமான பகுதிகளில் வசிக்கின்றனர். 

இந்த அபாயத்திலிருந்து  எப்படித் தப்பிப்பது?  அதுவும் உலக நாடுகளின் கைகளில்தான் உள்ளது.  புவி வெப்பமயமாதலைக் குறைப்பதுதான்  அதற்கு ஒரே வழி என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT